பெங்களூரு : எதிர்க்கட்சியினரின் கடும் அமளிக்கிடையில் கர்நாடக சட்டசபையில் மதம் மாற்றத் தடை சட்ட மசோதா நேற்று(டிச.,23) நிறைவேற்றப்பட்டது.
கர்நாடகாவில் ஆசை வார்த்தை கூறியும், வலு கட்டாயமாகவும் மதம் மாற்றப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.இதை தடுக்கும் வகையில் மதம் மாற்ற தடை சட்டம் கொண்டு வரப் போவதாக மாநில அரசு சில மாதங்களுக்கு முன்பே அறிவித்திருந்தது. இதன்படி தற்போது நடந்து வரும் சட்டசை கூட்டத்தொடரில் இரண்டு நாட்களுக்கு முன் கர்நாடக உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா 'கர்நாடகா மதம் மாற்ற தடை சட்டம் - 2021' என்ற சட்ட மசோதாவை தாக்கல் செய்தார்.
இந்த மசோதா தொடர்பாக சட்டசபையில் நேற்று விவாதிக்கப்பட்டது. அப்போது காங்கிரஸ், ம.ஜ.த.,வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். எதிர்க்கட்சியினரின் அமளிக்கிடையில் குரல் ஓட்டெடுப்பின் வாயிலாக இந்த மசோதா நிறைவேறியது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டதால் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
இந்த மசோதாவை சட்ட மேலவையில் தாக்கல் செய்து நிறைவேற்றிய பின், கவர்னர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்க அரசு தரப்பு திட்டமிட்டுள்ளது. இந்த சட்டம் அமலுக்கு வந்தால், மதம் மாற்றம் செய்பவர்களுக்கு குறைந்தபட்சம் மூன்று ஆண்டு முதல், அதிகபட்சமாக 10 ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்க முடியும். மேலும், 25 ஆயிரம் ரூபாய் முதல், ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதமும் விதிக்க முடியும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE