வேலுார்: திருவலம் ரயில்வே பாலத்தில் ஏற்பட்ட விரிசல் கண்டுபிடிக்கப்பட்டு, ரயில்கள் நிறுத்தப்பட்டதால் விபத்து தவிர்க்கப்பட்டது. 23 ரயில்கள் ரத்து செய்யப்பட்டதால், பயணிகள் அவதி அடைந்துள்ளனர்.
வேலுார் மாவட்டம், திருவலத்தில் பொன்னையாற்றின் குறுக்கே, 1865ல் ஆங்கிலேயர்கள் காலத்தில் ரயில்வே மேம்பாலம் கட்டப்பட்டது. ஒருவழி பாதைகாட்பாடி வழியாக சென்னை செல்லும் ரயில்கள், இந்த பாலத்தின் வழியாக இயக்கப்படுகின்றன. காட்பாடி ரயில்வே ஊழியர்கள், நேற்று மாலை பாலத்தை ஆய்வு செய்தனர். பாலத்தின், 38, 39வது பில்லர் பகுதியில் விரிசல் ஏற்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் மாலை 6:45 மணி முதல் பாலத்தில் ரயில்கள் இயக்கப்படுவது நிறுத்தப்பட்டது.
அதற்கு பதில், ஒருவழி பாதையாக மாற்றி, அனைத்து ரயில்களும் இயக்கப்பட்டன.
23 ரயில்கள்
பாலத்தில் விரிசல் காரணமாக ஜோலார்ப்பேட்டை, சென்னை, வேலூர், பெங்களூரு, மைசூரு, மங்களூரு, கோவை, ரேணிகுண்டா, அரக்கோணம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் 23 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஏற்கனவே புறப்பட்டு சென்ற ரயில்கள் வேறு வழித்தடத்தில் இயக்கப்பட்டு வருகின்றன.
ஜோலார்ப்பேட்டை - சென்னை
வேலூர் கண்டோன்மென்ட்- சென்னை கடற்கரை
ஜோலார்ப்பேட்டை- அருக்கோணம்
பெங்களூரு- சென்னை சதாப்தி
சென்னை - கோவை சதாப்தி
சென்னை -மங்களூரு
ரேணிகுண்டா- மைசூரு
சென்னை சென்ட்ரல்- திருவணந்தபுரம் ரயில்கள் இரு மார்க்கத்திலும் இன்று ரத்து செய்யப்பட்டது.
நாளை (டிச.,25)
மங்களூரு- சென்னை
ஆலப்புழா - சென்னை
ரேணிகுண்டா- மைசூரு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
ரத்து செய்யப்பட்ட ரயில்களுக்கான முன்பதிவு கட்டணம் திருப்பி அளிக்கப்படும் எனவும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
ரயில்கள் ரத்து செய்யப்பட்டதால், கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட ஊர்களுக்கு செல்லவிருந்த பயணிகள் அவதி அடைந்துள்ளனர்.
வெள்ளம்:
ரயில்வே ஊழியர்கள் விரிசலை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 156 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பாலத்தில், போதிய பராமரிப்பு இல்லாததாலும், கடந்த மாதம் பொன்னையாற்றில் வெள்ளம் வந்ததால், பாலத்தின் பில்லர்களில் மண் அரிப்பு ஏற்பட்டு, விரிசல் ஏற்பட்டு உள்ளதும் தெரியவந்தது.