இன்றைய கிரைம் ரவுண்ட் அப்: ரூ.23.50 லட்சம் கொள்ளை முகமூடி கும்பல் அட்டகாசம் 

Updated : டிச 24, 2021 | Added : டிச 24, 2021 | |
Advertisement
தமிழக நிகழ்வுகள்:வாலிபர் கொலையில் நால்வர் சரண்கோவை: கோவை, ரத்தினபுரியைச் சேர்ந்தவர் ஸ்ரீராம், 22. இவரும், நண்பர் கவாஸ்கான் என்பவரும், சின்னவேடம்பட்டி அஞ்சுகம் நகர் அருகே 20ம் தேதி இரவு பைக்கில் சென்றனர். அப்போது, நான்கு பேர் கும்பல் வழிமறித்து ஸ்ரீராமை வெட்டி கொன்று தப்பியது.விசாரணையில், இரு கோஷ்டிகள் இடையிலான மோதலில் கொலை நடந்தது தெரிந்தது. போலீசாரால்
கிரைம்  ரவுண்ட் அப், கொள்ளை, முகமூடி, கும்பல், அட்டகாசம்


தமிழக நிகழ்வுகள்:
வாலிபர் கொலையில் நால்வர் சரண்


கோவை: கோவை, ரத்தினபுரியைச் சேர்ந்தவர் ஸ்ரீராம், 22. இவரும், நண்பர் கவாஸ்கான் என்பவரும், சின்னவேடம்பட்டி அஞ்சுகம் நகர் அருகே 20ம் தேதி இரவு பைக்கில் சென்றனர். அப்போது, நான்கு பேர் கும்பல் வழிமறித்து ஸ்ரீராமை வெட்டி கொன்று தப்பியது.விசாரணையில், இரு கோஷ்டிகள் இடையிலான மோதலில் கொலை நடந்தது தெரிந்தது. போலீசாரால் தேடப்பட்ட சுஜிமோகன், கோகுல், ரவீந்திரன், மணிகண்டன் ஆகிய நால்வர், சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நேற்று சரண் அடைந்தனர்.


காமுக தந்தை கைது


கோவை: கோவை மாவட்டம், அன்னுாரில் 37 வயது நபர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது 10 வயது மகள், ஐந்தாம் வகுப்பு படித்து வந்தார். நேற்று அந்த சிறுமி, தந்தை பாலியல் தொந்தரவு செய்ததாக தன் தாயிடம் தெரிவித்தார். கடந்த மூன்று ஆண்டுகளாக இந்த கொடுமை நிகழ்ந்துள்ளது. தாய் கொடுத்த புகாரின்படி, அன்னுார் போலீசார் 'போக்சோ' சட்டத்தில் தந்தையை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.ரூ.23.50 லட்சம் கொள்ளை


சிவகங்கை: சிவகங்கை அருகே, காரில் கொண்டு வந்த 23.50 லட்சம் ரூபாயை, முகமூடி அணிந்த மர்ம நபர்கள் கொள்ளையடித்து தப்பினர்.

மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே நேசநேரியைச் சேர்ந்த சகோதரர்கள் குருசாமி, ஆறுமுகம். இருவரும், சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே, சருகணியில் உள்ள மூத்த சகோதரர் வாங்கிய விவசாய நிலத்திற்கு பத்திரம் பதிவதற்காக, திருமங்கலத்தில் இருந்து நேற்று காலை காரில் 23.50 லட்சம் ரூபாயுடன் சிவகங்கை வந்தனர்.இவர்களுடன் நில புரோக்கர்கள் திருச்சி அப்துல் ரகுமான், 60; உடுமலைப்பேட்டை சாமிநாதன், 60 வந்தனர். கார் 9:30 மணிக்கு சிவகங்கை அருகே சித்தலுார் விலக்கில் வந்தபோது, புரோக்கர் அப்துல் ரகுமான், சித்தலுாரில் நிலம் இருப்பதாகவும் அதை பார்த்து வரலாம் எனவும் கூறியுள்ளார். இதை நம்பி, காரை சித்தலுாருக்கு ஓட்டியுள்ளனர்.

அங்கு சென்றபோது, நிலத்தை காட்டுவதாக முனியாண்டி, 60 என்பவர் வந்தார். அப்போது, இரண்டு டூ - வீலரில் முகமூடி அணிந்து வந்த மூன்று பேர், வாள் மற்றும் கத்தியை காட்டி ஆறுமுகத்திடம் இருந்த பணத்தை கொள்ளையடித்து, அவருடன் நின்ற முனியாண்டியை மட்டும் டூ - வீலரில் ஏற்றி தப்பினர்.பணத்தை பறிகொடுத்த ஆறுமுகம், பூவந்தி போலீசில் புகார் அளிக்க சென்றபோது, சம்பவம் நடந்த இடம் சிவகங்கை தாலுகா ஸ்டேஷனுக்கு உட்பட்டது எனக் கூறி திருப்பி அனுப்பி விட்டனர். இதனால், பல மணி நேர தாமதத்திற்கு பின், சிவகங்கை போலீசில் ஆறுமுகம் புகார் அளித்தார். மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.'மரண வாக்குமூலம்' மனு அளித்த பெண் தற்கொலை


அவிநாசி:பண மோசடி தொடர்பாக, திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் மனு வழங்கிய பெண், விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
திருப்பூர் மாவட்டம், அவிநாசி, வேட்டுவபாளையம் கிராமம், அ.குரும்பபாளையம் பகுதியில் வசித்தவர் ஷீலாதேவி, 36; கணவர் பொன்னுசாமி. கடந்த 13ம் தேதி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர் கூட்டத்திற்கு தன் 9 வயது மகளுடன் வந்த ஷீலாதேவி, தர்ணாவில் ஈடுபட்டார்.
'மரண வாக்குமூலம்' எனக் குறிப்பிட்டு, கலெக்டரிடம் அவர் வழங்கிய மனுவில், 'குரும்பபாளையத்தில், 45 சென்ட் நிலம் எங்களுக்கு இருந்தது. திருப்பூரைச் சேர்ந்த சிவராஜ் என்பவரிடம் இந்த நிலத்தை வைத்து பணம் வாங்கினேன். 'நிலத்தை விற்பனை செய்த வகையில் எனக்கு வர வேண்டிய, 60 லட்சம் ரூபாயை தராமல் இழுத்தடித்து வருகிறார்' என கூறியிருந்தார்.
இந்நிலையில், கடந்த 22ம் தேதி காலை, தன் வீட்டில் விஷமருந்தி ஆபத்தான நிலையில், திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி ஷீலாதேவி இறந்தார்.
ஷீலாதேவி தற்கொலை தொடர்பாக, திருப்பூர் போயம்பாளையத்தைச் சேர்ந்த சிவராஜ், 40; அவரது சகோதரர் கதிர்வேல், 35; இவர்களது தந்தை நாச்சிமுத்து, 70 ஆகியோர் மீது, சேவூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். சிவராஜ், கதிர்வேல் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.அரசு பஸ் - கார் மோதல் 3 வாலிபர்கள் பலி


திருப்பூர்: சேலம் மாவட்டம், இரும்பாலை பகுதியைச் சேர்ந்தவர்கள் அறிவழகன், 25; செந்தில்குமார், 24; பிரபு, 23 உட்பட ஏழு நண்பர்கள் காரில் கொடைக்கானல் சென்றனர்.
இதில், பிரபு உட்பட இருவர் கல்லுாரியில் படிக்கின்றனர்; மற்றவர்கள், டிரைவர்களாக பணிபுரிகின்றனர். கொடைக்கானலில் இருந்து நேற்று முன்தினம் இரவு திரும்பி கொண்டிருந்தனர். காங்கேயம் அருகே எதிரே வந்த அரசு பஸ் மோதியது. காரில் வந்த ஏழு பேரும் படுகாயம் அடைந்தனர். காரை ஓட்டி சென்ற அறிவழகன், செந்தில்குமார், பிரபு ஆகியோர் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் இறந்தனர்.ரூ.67.86 லட்சம் தங்கம் பறிமுதல்


சென்னை : வெளிநாட்டில் இருந்து கடத்தி வரப்பட்ட 67.86 லட்ச ரூபாய் மதிப்பிலான, 1.55 கிலோ தங்கத்தை, சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.இலங்கையின் கொழும்பு நகரில் இருந்து, நேற்றும் முன்தினமும் 'ஏர் - இந்தியா' விமானங்களில் வந்த ஆறு பயணியரை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.இதில், 1.55 கிலோ தங்கம் சிக்கியது. அதன் மதிப்பு, 67.86 லட்சம் ரூபாய். சுங்கத்துறை அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.


latest tamil news

மாலை போட மனைவி தடை: கணவர் துாக்கிட்டு தற்கொலை


சென்னை: பழநி முருகன் கோவிலுக்கு மாலை போடுவது தொடர்பாக மனைவியுடன் ஏற்பட்ட தகராறில், கணவர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நெற்குன்றம் ஜெய்ராம் நகர், ஒன்பது தெருவைச் சேர்ந்தவர் சுப்பிரமணி, 38; கார்பென்டர். இவரது மனைவி பிரியங்கா, 32. இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர்.இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு கணவன், மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அறைக்குள் சென்ற சுப்பிரமணி, துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.தகவலறிந்து வந்த கோயம்பேடு போலீசார் அவரது உடலை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.தொடர் விசாரணையில், சம்பவத்தன்று அவர், பழநி முருகன் கோவிலுக்குச் செல்வதற்காக, மாலை போடப் போவதாக மனைவியிடம் கூறியுள்ளார்.இதற்கு பிரியங்கா, 'அடுத்த நாள் காலையில் மாலை போடலாம்' எனக் கூறியுள்ளார். இதனால் ஏற்பட்ட தகராறில் சுப்பிரமணி தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது.யானை மிதித்து பணியாளர் பலி


தாண்டிக்குடி : தாண்டிக்குடி நல்லூர்காட்டில் காட்டு யானை மிதித்து ஊராட்சி குடிநீர் மோட்டார் ஆப்பரேட்டர் பழனிசாமி 51, பலியானார்.
திண்டுக்கல் மாவட்டம் நல்லூர்காட்டைச் சேர்ந்த இவர், பெரியூர் ஊராட்சியில் குடிநீர் மோட்டார் ஆபரேட்டராக உள்ளார். இவரது தோட்டத்தில் மனைவி கோமதியுடன் காபி பழம் பறிக்க சென்றார். நேற்று மதியம் அங்கிருந்த யானை தாக்கியதில் பழனிச்சாமி உடல் சிதைந்து பலியானார். கன்னிவாடி வனத்துறையினர், தாண்டிக்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.உலக நிகழ்வுகள்:
விமான விபத்து: 5 பேர் பலி


பெனி: மத்திய ஆப்ரிக்காவில் உள்ள காங்கோ நாட்டில் ஏற்பட்ட விமான விபத்தில் ஐந்து பேர் பலியாகினர்.
காங்கோ நாட்டின் 'மாலு ஏவியேஷன்' நிறுவனத்தின் சிறிய ரக விமானம் கோமா நகரில் இருந்து தெற்கு கிவு மாகாணத்தில் உள்ள ஷாபூந்தா நகருக்கு இரண்டு ஊழியர்கள் மற்றும் மூன்று பயணியருடன் நேற்று சென்றது.நடுவானில் ஏற்பட்ட கோளாறால் விமானம் விழுந்து நொறுங்கியது.
இந்த விபத்தில் விமானத்தில் இருந்த ஐந்து பேரும் உயிரிழந்தனர். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடக்கிறது.காங்கோ நாட்டில் விமான விபத்துக்கள் அடிக்கடி ஏற்பட்டாலும், பயங்கரவாத குழுக்களின் அச்சுறுத்தல் காரணமாக பெரும்பான்மையான மக்கள் விமான பயணத்தையே தேர்ந்தெடுக்கின்றனர்.இந்திய மாணவருக்கு தண்டனை


சிங்கப்பூர்: சட்டவிரோதமாக பணப்பரிமாற்ற தொழில் செய்த இந்திய மாணவருக்கு சிங்கப்பூர் நீதிமன்றம் ஆறு மாத சிறைத் தண்டனை விதித்தது.
இந்தியாவை சேர்ந்தவர் ஜஸ்பிரீத் சிங், 26. இவர் உட்பட மேலும் சில இந்திய மாணவர்கள் மேற்படிப்புக்காக தென் கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூர் சென்றிருந்தனர்.இங்கு அறிமுகமான சிலர், பணப்பரிமாற்ற தொழிலில் இணைந்தால் நல்ல வருமானம் கிடைக்கும் என ஜஸ்பிரீத் உள்ளிட்டோரிடம் ஆசை காட்டியுள்ளனர்.
இதையடுத்து ஜஸ்பிரீத் உள்ளிட்ட சிலர் தங்களது அலைபேசி எண் மற்றும் வங்கிக் கணக்கு எண் ஆகியவற்றை கொடுத்துள்ளனர்.அந்தக் கும்பல் சட்டவிரோதமாக பணப்பரிமாற்ற தொழில் செய்ததுடன், கனடா நாட்டை சேர்ந்த சிலரிடம் மோசடியும் செய்துள்ளது. இது குறித்து விசாரித்த போலீசார் மோசடிக் கும்பலை கைது செய்தனர்.
இந்த வழக்கில் ஜஸ்பிரீத் குடும்ப நிலை குறித்து அவரது வழக்கறிஞர் நீதிமன்றத்தில் விளக்கி, அறியாமையால் மோசடி கும்பலில் இணைந்து விட்டார் என வாதாடினார்.இதையடுத்து ஜஸ்பிரீத் சிங்குக்கு ஆறு மாத சிறைத் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். மோசடியில் ஈடுபட்ட பலருக்கு 40 மாதங்கள் வரை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.இந்திய நிகழ்வுகள்:
கோர்ட்டில் குண்டுவெடிப்பு: ஒருவர் பலி


லுாதியானா: பஞ்சாபில் நீதிமன்ற வளாகத்தில் குண்டு வெடித்ததில் ஒருவர் பலியானார்; மூன்று பேர் காயம் அடைந்தனர்.
பஞ்சாப் மாநிலம் லுாதியானாவில் உள்ள மாவட்ட நீதிமன்ற வளாகம், நேற்று காலை வழக்கம் போல் செயல்பட்டுக் கொண்டிருந்தது.அப்போது நீதிமன்றத்தில் இரண்டாவது தளத்தில் உள்ள கழிப்பறை பகுதியில் பயங்கர சத்தம் கேட்டது. கழிப்பறையில் இருந்த ஜன்னலின் கதவுகள் உடைந்து விழுந்தன; சுவரும் சேதமடைந்தது. நீதிமன்ற வளாகத்தில் இருந்த போலீசாரும், பொதுமக்களும் பதறியடித்து இரண்டாவது தளத்துக்கு சென்றனர்.

அங்கு நான்கு பேர் படுகாயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தனர். அவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அதில் ஒருவர் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். மற்றவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். பலியானவர் மற்றும் காயமடைந்தவர்கள் பற்றிய விபரங்களை போலீசார் தெரிவிக்க வில்லை. கழிப்பறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சக்தி வாய்ந்த குண்டு வெடித்து இருக்கலாம் என, சந்தேகிக்கப்படுகிறது. இது பற்றி போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

நீதிமன்றத்தின் இரண்டாவது தளத்துக்கு 'சீல்' வைக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் போலீசாரும், தடயவியல் நிபுணர்களும் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி பஞ்சாப் அரசுக்கு, மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.வங்கியில் மோசடி: ரூ.100 கோடி முடக்கம்


புதுடில்லி:தெலுங்கானாவில் வங்கிகளில் கடன் பெற்று தொடர் மோசடிகளில் ஈடுபட்டு வந்த நபருக்கு சொந்தமான 100 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது.
தெலுங்கானாவைச் சேர்ந்தவர் ரெபா சத்தியநாராயணா. இவர் தெலுங்கானா மற்றும் ஆந்திராவில் விவசாய நிலங்கள், மீன் வளர்ப்பு, ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். ஆந்திராவின் ராஜமுந்திரியில் உள்ள ஐ.டி.பி.ஐ., வங்கியில் விவசாய கடன் திட்டத்தின் கீழ் 143 பினாமி பெயர்களில் 112 கோடி ரூபாய் கடன் பெற்று மோசடி செய்துள்ளார்.
இதற்கு வங்கி அதிகாரிகளும் உடந்தையாக இருந்துள்ளனர். வங்கியில் பெற்ற கடன் தொகை வாயிலாக முந்தைய வங்கி கடன்களை அடைப்பது, புதிய சொத்துக்களை வாங்குவது போன்ற மோசடியில் ஈடுபட்டுள்ளார்.
அந்த சொத்துக்களை வங்கியில் அடமானமாக வைத்து மீண்டும் கடன் பெற்று தொடர் மோசடிகளில் ஈடுபட்டு உள்ளார்.இவர் மீது சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்துள்ளன. இவருக்கு சொந்தமான 100 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை நேற்று முடக்கியது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X