கோவை: காதல் தகராறில் பொறியாளரின் கட்டை விரலை துண்டித்த வாலிபரை, சரவணம்பட்டி போலீசார் தேடி வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன், 23. பொறியாளர். இவர், சின்னவேடம்பட்டியில் வேலை பார்த்தபோது, உடன் வேலை பார்த்த அருள் பிரகஸ்பதி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் ஒரே அறையில் தங்கியிருந்தனர்.
அருள் பிரகஸ்பதி ஒரு பெண்ணை காதலித்து வந்தார். அந்த பெண்ணுடன், கார்த்திகேயன் அடிக்கடி போனில் பேசுவதாக அருள் பிரகஸ்பதிக்கு சந்தேகம் ஏற்பட்டது. மோதல் ஏற்பட்ட நிலையில் இருவரும் சின்னவேடம்பட்டி நிறுவனத்தில் இருந்து விலகி விட்டனர்.
கார்த்திகேயன், துடியலுார் அருகே வேறொரு நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்து விட்டார். அவருடன் நேற்று முன்தினம் போனில் பேசிய அருள் பிரகஸ்வதி, சிவானந்தபுரம் வருமாறு கூறினார்.
அதை நம்பிச்சென்ற கார்த்திகேயனை, 'என் காதலியுடன் இனி போனில் பேசக்கூடாது' என்று மிரட்டியபடியே கத்தியால் சரமாரியாக தாக்கினார். தடுக்க முயற்சித்தபோது, கார்த்திகேயனின் வலது கை கட்டை விரல் துண்டானது. அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். சரவணம்பட்டி எஸ்.ஐ., கமலக்கண்ணன், தப்பிய வாலிபர் அருள் பிரகஸ்பதியை தேடி வருகிறார்.