அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் அறிக்கை: அ.தி.மு.க., ஆட்சி முடியும்போது, மார்ச், 31ம் தேதி, 4.82 லட்சம் கோடி ரூபாய் கடன் இருந்தது. நடப்பாண்டில், 5.70 லட்சம் கோடி ரூபாய் கடன் இருக்கும் என, இடைக்கால பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது. அரசின் வருவாயை பெருக்குவதில், சிக்கனத்தை கடைபிடிப்பதில் எந்த நடவடிக்கையையும், தி.மு.க., அரசு எடுத்ததாக தெரியவில்லை.
நீங்க 4.82 லட்சம் கோடி ரூபாய் கடன் வைச்சீங்க... இவங்க மேலே 90 ஆயிரம் கோடி சேர்க்கிறாங்க... இலவசங்களைக் கொடுக்கச் சொன்னது யார்? மக்களை முட்டாளாக்கி, 'டாஸ்மாக்'கை வயிறு முட்டக் குடிக்க வைத்து, வயிற்றைக் காயப் போடுவதில் இரண்டு கட்சிகளும் சளைத்தவர்களே இல்லை, போங்க!
பா.ஜ., தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் கடிதம்: வால்பாறை தேயிலை எஸ்டேட்களில், 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள், நிரந்தர மற்றும் தற்காலிக தொழிலாளர்களாக பணியாற்றுகின்றனர். கடந்த ஆகஸ்ட், 28ம் தேதி அரசு தோட்ட தொழிலாளர்களுக்கு தினக்கூலியாக, 425 ரூபாய் 40 பைசா அளிக்க வரைவு அரசாணை வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து, கடந்த அக்., 25ல் அது குறித்து இறுதி அரசாணை வெளியிட்டிருக்க வேண்டும்.
நீங்க, மாநில அரசை குற்றம் சாட்டுவதும், மாநில அரசு உங்க கட்சியின் மத்திய ஆட்சியைக் குறை சொல்வதும் வாடிக்கையாகி விட்டது. இந்த, 'ஆவரேஜ் பாலிட்டிக்ஸ்'லேர்ந்து நீங்களாவது வெளியே வந்து, தீர்க்கமாகச் செயல்படுங்களேன்!
தலைமை அறிக்கை: தமிழக மீனவர்கள் கைது தொடர்பாக, அன்புமணி கோரிக்கையை ஏற்று, மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், 'தமிழக மீனவர்கள் 69 பேரையும் விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகள், ஏற்கனவே துவங்கி விட்டன. வெகுவிரைவில் 69 மீனவர்களும் விடுதலை செய்யப்படுவர்' என உறுதியளித்தார்.
இதென்ன 'டுபாக்கூர்' கதையா இருக்கு... 'முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியதன் அடிப்படையில், உடனடியா நடவடிக்கை எடுத்தோம்'ன்னு மத்திய அரசே சொல்லிடிச்சே!
இந்திய கம்யூ., மாநில செயலர் முத்தரசன் பேட்டி: தேர்தல் ஆணையம் சுதந்திரமாக செயல்படாத நிலையை பா.ஜ., உருவாக்கி இருக்கிறது. தேர்தல் ஆணையம் யாருக்கும், எந்த கட்சிக்கும் அச்சப்பட வேண்டிய அவசியமில்லை.

தேர்தல் நாள் அன்று, யாருடைய கை ஓங்கி இருக்கும் என்பது உங்களுக்கு தான் தெரியுமே... பிறகு ஏன், இப்படி வெத்து பேட்டியெல்லாம் குடுக்குறீங்க?
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அறிக்கை: திருக்கோவிலுாரில் போலீஸ் துறையினரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட, 4 பெண்கள் உள்ளிட்ட, 15 இருளர் மக்கள் விவகாரத்தில், வழக்கை விரைந்து முடித்து நீதி வழங்க வேண்டும். குற்றப்பத்திரிகையில் உள்ள பிழைகளை திருத்தி, மீண்டும் தாக்கல் செய்யும் பணியை கூட செய்யாமல், போலீஸ் துறை இழுத்தடித்து வருகிறது.
இது போன்ற சம்பவங்கள் நடக்கும்போதெல்லாம், அரசியல்வாதியாகிய நீங்க எல்லாரும், ஒரு அறிக்கை விட்டுட்டு, அதன் பின், அதை, 'பாலோ' செய்து கண்காணிப்பதில்லை. அரசியல்வாதிகளின் பணி தான் என்ன? எல்லாருமே தடம் மாறி விட்டது கண்கூடாகத் தெரிகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE