கான்பூர்: போலி பில்கள் மூலம் ஜி.எஸ்.டி வரிஏய்ப்பில் ஈடுபட்ட உத்தர பிரதேசத்தை சேர்ந்த தொழிலதிபர் வீட்டில் சோதனையிட்டதில், கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை எண்ணும் பணி நேற்று (டிச.,23) முதல் துவங்கி நடைபெறுகிறது. தற்போது வரை ரூ.150 கோடி பணம் எண்ணப்பட்டுள்ளன. இன்னும் எண்ணும் பணி தொடர்கிறது.
உத்தரபிரதேசம் மாநிலம் கான்பூரை சேர்ந்த வாசனை திரவியம் தயாரிக்கும் தொழில் ஈடுபட்டுள்ள பியூஷ் ஜெயின் தொடர்புடைய இடங்களில் நேற்று (டிச.,23) ஜி.எஸ்.டி., அதிகாரிகள் சோதனையிட்டனர். போலி பில் மோசடியில் ஈடுபட்டு வரிஏய்ப்பு செய்ததாக வந்த புகாரை அடுத்து சோதனையை துவக்கிய ஜி.எஸ்.டி., அதிகாரிகள், அவரது வீட்டில் பீரோ முழுவதும் 30க்கும் மேற்பட்ட பார்சல்களில் பணக்கட்டுகள் அடுக்கி வைக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதனைத்தொடர்ந்து வருமான வரித்துறை அதிகாரிகளும் சோதனையில் இணைந்துக்கொண்டனர்.

தொடர்ந்து, குஜராத், மும்பையில் உள்ள அவருக்கு சொந்தமான இடங்களிலும் சோதனையை துவங்கினர். பியூஷ் ஜெயின் வீட்டில் கைப்பற்றப்பட்ட பணத்தை எண்ணும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர். நேற்று முதல் பணத்தை எண்ணும் பணிகள் இன்னும் தொடர்ந்து வருகிறது. தற்போது வரை ரூ.150 கோடி அளவிற்கு பணம் எண்ணப்பட்டுள்ளது. இந்த மதிப்பு மேலும் அதிகரிக்கும். இது தொடர்பான படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது. பணத்தை பாதுகாக்க துணை ராணுவப்படை வரவழைக்கப்பட்டுள்ளது.