சென்னை: நாம் தமிழர் கட்சி கூட்ட மேடையில் ஏறி தகராறில் ஈடுபட்ட தி.மு.க., நிர்வாகி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வி.சி.க., தலைவர் திருமாவளவன் தந்த பேட்டி தி.மு.க., கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் தர்மபுரி மாவட்டம் மொரப்பூரில் முஸ்லிம் கைதிகள் மற்றும் ராஜிவ் கொலை குற்றவாளிகளை விடுதலைச் செய்யக் கோரி மத்திய, மாநில அரசை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் கண்டன பொதுக்கூட்டம் நடத்தினர். அதில் பேசிய இளைஞர்கள் தி.மு.க., தலைவர் ஸ்டாலினை தரக்குறைவாக விமர்சித்தனர். ஹிம்லர் என்ற பேச்சாளர் தி.மு.க., மற்றும் பா.ஜ.க., இரண்டையும் சரிசமமாக கருவறுக்க வேண்டிய காலக்கட்டத்தில் இருக்கிறோம் என நரம்பு புடைக்க கத்தினார்.
அப்போது மேடையேறிய மொரப்பூர் தி.மு.க., ஒன்றிய செயலாளர் செங்கண்ணன், மரியாதையாக பேசு என போடியத்தை தட்டிவிட்டு அவரை அடிக்க முயன்றார். ஹிம்லர் மேடையின் பின்னால் சென்று ஒளிந்துக்கொண்டார். போலீசார் வந்து தி.மு.க.,வினரை அப்புறப்படுத்தினர். இச்சம்பவம் குறித்து நேற்று (டிச., 23) திருமாவளவனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு அவர், “அரசியல் கட்சிகள் மாறுபட்ட கருத்துக்களை முன்மொழிந்தால், கருத்துக்கு கருத்தாக தான் அதனை அணுக வேண்டும். தகராறில் ஈடுபடுவது ஏற்புடையது அல்ல. தகாராறில் ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார். அதனைத் தொடர்ந்து “நியாயத்தின் பக்கம் நிற்கும் அண்ணன் திருமாவளவனுக்கு நன்றி” என சீமான் அறிக்கை வெளியிட்டார்.
இதனை தி.மு.க., நிர்வாகிகள், தொண்டர்கள் ரசிக்கவில்லை. பலர் சமூக ஊடகங்கள் மூலமாக திருமாவளவனுக்கு எதிரான கருத்தை தெரிவிக்க தொடங்கியுள்ளனர். திமிறி எழு.. திருப்பி அடி என்ற வசனம் எல்லாம் கருத்தை கருத்தால் எதிர்கொள்வது தானா என ஒரு தி.மு.க., தொண்டர் கேட்டுள்ளார்.

தொண்டர்களை சமாதானப்படுத்தும் வகையில், தி.மு.க., ஐ.டி., பிரிவு மாநில துணைச் செயலாளர், இசை என்பவர், திருமா சொல்லாத கருத்தை ஊடகங்கள் புனைவதாக கூறி புறக்கணிக்கச் சொல்லியுள்ளார். ஆனால் தி.மு.க., இணைய உ.பி.,க்கள் பிரச்னையை விடுவதாக தெரியவில்லை. இதனால் தி.மு.க., - வி.சி.க., கூட்டணியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பாக விரிசல் ஏற்படும் என தெரிகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE