டில்லி: உத்ராகண்ட் மாநிலத்தின் இந்து புனித நகரான ஹரித்வார் நகரில் இஸ்லாமியர்களுக்கு எதிராக இந்துமத ஆதரவாளரும், கோவில் அர்ச்சகருமான யதி நரசிம்மானந்த சரஸ்வதி சுவாமி தனது பேரணியின்போது இஸ்லாமியர் குறித்துப் பேசிய கருத்து சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது.
முன்னாள் பொறியாளரான 58 வயது நரசிம்மானந்த் பாஜகவின் ஆதரவில் செயல்பட்டு வருகிறார். தீவிர வலதுசாரி இந்து மதப்பற்றாளரான இவர் இஸ்லாமியர்களை இந்த உலகத்தை விட்டே ஒழிப்பதுதான் தனது லட்சியம் என்று வெளிப்படையாக அறிவித்தவர்.
இவர் தொடர்ந்து இஸ்லாமியர்களுக்கு எதிராக கருத்து தெரிவித்து வருவது வழக்கம். இவர் சார்ந்திருக்கும் கோவிலில் ஓர் இஸ்லாமிய சிறுவன் தண்ணீர் பருகியதால் இவரது ஆட்கள் சிறுவனை தாக்கிய வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது.
ஹரித்வார் நகரின் வேத நிகேதன் பகுதியில் தர்ம சனாதன கூட்டமொன்றை நரசிம்மானந்த் ஏற்பாடு செய்திருந்தார். இந்தக் கூட்டத்தில் இவர் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக காங்கிரஸ் தலைவர் பிரியங்கா மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சாகேப் கோகலே ஆகியோர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
மேலும் நரசிம்மானந்த் மீது ஜவல்பூர் காவல் நிலையத்தில் வழக்கு பதியப்பட்டுள்ளது. இஸ்லாமியர்களுக்கு எதிராக பேசிய நரசிம்மானந்தா மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இது இந்திய அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்றும் பிரியங்கா குற்றம் சாட்டியுள்ளார். மேலும் இந்து இஸ்லாமியர் இடையே மதக்கலவரத்தை தூண்டும் வகையில் இவர்களது கூட்டத்தில் விவாதங்கள் நடைபெறுவதாக தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE