தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை அறிக்கை: தி.மு.க., அரசு தமிழகத்தில் ஆட்சிக்கு வந்த பின், 24 வழக்குகளை எங்கள் மீது தொடர்ந்துள்ளது. வழக்கு தொடரப்பட்டவர்களின் ஒரே குற்றம், அவர்கள் தி.மு.க., அரசை எதிர்த்து பேசியது மட்டும் தான்!அவர்கள் எத்தனை வழக்குகள் போட்டாலும், அத்தனையும் நீதிமன்றங்களில் தவிடுபொடியாகி விடுகின்றனவே... எனவே, வெற்றி உங்கள் அணிக்கு தான்!
தமிழக நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் வேலு பேச்சு: முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் மனுக்கள் அளித்தால் கோரிக்கை நிறைவேறும் என்ற எண்ணம் மக்களிடையே ஏற்பட்டுள்ளது. விதிகளுக்கு உட்பட்டு, மனு கொடுத்தவர்களின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டு வருகிறது. நிறைவேற்ற முடியாத பட்சத்தில் அந்த மனுவுக்கு உரிய பதில் அளிக்கப்படுகிறது.இது தான், அரசு சம்பளம் வாங்கும் அலுவலர்களின் அடிப்படை பணி. குறிப்பாக, அமைச்சர்களின் பணியும் கூட. இதை செய்வது கூட, பெரிய வேலையாக குறிப்பிட்டுள்ளீர்களே?
தமிழ்நாடு கள் இயக்க கள ஒருங்கிணைப்பாளர் செ.நல்லசாமி அறிக்கை: கள் இறக்குவதும், பருகுவதும் இந்திய அரசியல் அமைப்பு சட்டம் மக்களுக்கு கொடுத்துள்ள உணவு தேடும் உரிமை; உலகளாவிய நடைமுறை. இந்நிலையில், 'கள் ஒரு போதைப்பொருள் என நிரூபிக்க தயார்' என, காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் குமரி அனந்தன் அறிக்கை வெளியிட்டுள்ளார். கள் இயக்கம் இதை வரவேற்கிறது.உங்களிடம் கேட்டால் கள் போதைப் பொருள் இல்லை என்பீர்கள். எதிரணியினரிடம் கேட்டால், போதை பொருள் தான் என்பர். இந்த விவாதம் பல காலமாக நிலவுகிறதே!
மாநில மார்க்சிஸ்ட் செயலர் கே.பாலகிருஷ்ணன் அறிக்கை: தமிழ்நாடு பாடநுால் கழகம் வெளியிடும் பாடநுால்கள் அச்சிடும் பணி அனைத்தையும் தமிழக அச்சக நிறுவனங்களுக்கே வழங்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசை கேட்டுக் கொள்கிறது.தமிழகத்திலேயே வாய்ப்புகள் இருக்கும் போது, பிறமாநிலங்களுக்கு கொடுப்பது நியாயமில்லை தான். எனினும், முந்தைய அரசில் அதை செய்தனரா என்பதை விசாரிக்க வேண்டும்!
புதிய தமிழகம் கட்சியின் இளைஞரணி தலைவர் ஷியாம் கிருஷ்ணசாமி அறிக்கை: 6மாதமாக ஹிந்துக்களின் ஆன்மிக பூமியான ரிஷிகேசில் இருக்கிறேன். இங்கே யாரும் மாட்டு மூத்திரத்தை பொருட்படுத்தி பார்த்ததில்லை. ஆனால், தமிழகத்தில் இருக்கிற, தி.மு.க., மற்றும் தி.க.,காரனுங்க தான் எந்நேரமும் கோமியம், மூத்திரம்னு அதே நினைப்பாவே இருக்காங்க; அவங்க மூத்திரத்தில் ஏதாவது பிரச்னையோ?ஹிந்துக்கள் என்றாலே, அவர்கள் அப்படித் தான் நினைக்கின்றனர், சொல்கின்றனர். அவர்களுக்கு நிச்சயம் இது தக்க பதிலடியாக இருக்கும்!
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE