அரசியலில் வாரிசுகளை வளர்க்கும் அ.தி.மு.க., 'மாஜி!'
அந்தோணிசாமிக்கு, நண்பர்கள் கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்தனர். அவர் வழங்கிய கேக்கை கடித்தபடியே, ''முட்டை சேர்க்கலை தானே ஓய்...'' எனக் கேட்டு உறுதிப்படுத்திய குப்பண்ணா, ''உள்ளக்குமுறலை கொட்டிட்டார் ஓய்...'' என, விஷயத்திற்கு வந்தார்.
''யாருவே அது...'' எனக் கேட்டார் அண்ணாச்சி.
''திருப்பூர்ல சமீபத்துல, மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட மாநாடு நடந்தது... மத்திய குழு உறுப்பினர் ரங்கராஜன் துவக்கி வச்சார் ஓய்...
''அவர் பேசறச்சே, 2011 சட்டசபை தேர்தல்ல அமைத்த அ.தி.மு.க., கூட்டணி பத்தி சில ரகசியங்களை பகிர்ந்துண்டார்... 'போயஸ் கார்டன் வீட்டுல எங்களிடம் மிரட்டுற தொனியில, இன்டர்காம்ல பேசிய ஜெயலலிதாவிடம் நாசுக்கா பேசி, திருப்பூர் தெற்கு தொகுதியை வாங்கினோம்...
''ஆனா, இந்த முறை தி.மு.க.,விடம் கோவை, திருப்பூர், நாகர்கோவில்னு எந்த தொகுதியையும் நம்மால கேட்டு வாங்க முடியலை... அடுத்து வர்ற தேர்தல்லயும் இப்படி கோட்டை விட்டுடக் கூடாது'ன்னு சொல்லியிருக்கார் ஓய்...'' என்றார் குப்பண்ணா.
''அரிவாளோட தான் பள்ளிக்கு வர்றாவ வே...'' என, அடுத்த தகவலுக்கு வந்தார் அண்ணாச்சி.
''எங்க ஓய் இந்த அநியாயம்...'' எனக் கேட்டார் குப்பண்ணா.
''சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில சில பள்ளி மாணவர்கள், பள்ளிக்கு வீச்சரிவாள், கஞ்சா பொட்டலங்களோட வர்றாவ... ஆசிரியர்கள் தட்டிக் கேட்டா, அரிவாளை காட்டி
மிரட்டுதாவ வே...
''ஆசிரியர்களும், 'எக்கேடும் கெட்டு போங்க'ன்னு கண்டுக்காம விட்டுடுதாவ... மாவட்டம் முழுக்க கஞ்சா விற்பனை கொடி கட்டி பறக்கு வே... இந்த போதைக்கு அடிமையான பலர், சின்ன வயசுலயே கூலிப்படையா மாறி, குற்றச்செயல்கள்ல ஈடுபடுதாவ... போலீசார் கைகட்டி வேடிக்கை பார்த்துட்டு இருந்தா, மாவட்டத்துல நிறைய கிரிமினல்கள் உருவாகிறதை தடுக்க முடியாது வே...'' என்றார்
அண்ணாச்சி.
''தி.மு.க.,வை குடும்ப கட்சின்னு சொல்ற நாம மட்டும் சரியான்னு அ.தி.மு.க.,வினரே புலம்புறாங்க பா...'' என்றார் அன்வர்பாய்.
''எந்த ஊருலங்க...'' எனக் கேட்டார் அந்தோணிசாமி.
''திருவள்ளூர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க., முக்கிய புள்ளி, ஜெயலலிதா ஆட்சியில கலப்பட பால் விவகாரத்துல சிக்கி, அமைச்சர் பதவியை இழந்தவர்... இப்ப, உள்கட்சி தேர்தல் நடக்குதுல்ல...
''இதுல, தன் பதவியை தக்க வச்சுக்கிட்ட அவர், தன் இரண்டு மகன்களை அரசியல்ல வளர்த்துட்டு இருக்காரு பா... மூத்த மகன், ஏற்கனவே சென்னை மாநகராட்சி கவுன்சிலரா இருந்து, சர்ச்சையில சிக்கி ஜெயலலிதாவின் கண்டிப்புக்கு ஆளானவர்...
''இப்ப, இரண்டாவது மகனையும் கவுன்சிலர் தேர்தல்ல களமிறக்க காய் நகர்த்திட்டு இருக்காரு பா... தென்சென்னை மாவட்ட உட்கட்சி தேர்தல் பொறுப்பாளரா, தனக்கு வாய்ப்பு வாங்கியவர், ஆயிரம் விளக்கு வடக்கு பகுதி தேர்தல் பொறுப்பாளர்களா தன் இரண்டு மகன்களுக்கும் வாய்ப்பு வாங்கிட்டாரு பா... 'இப்படி குடும்பமே எல்லா பதவிகளையும் ஆக்கிரமிச்சா என்ன அர்த்தம்'னு அந்த மாவட்ட அ.தி.மு.க.,வினர் குமுறிட்டு இருக்காங்க பா...'' என முடித்தார், அன்வர்பாய்.
''சரிங்க... நான் சர்ச்சுக்கு போயிட்டு வந்துடுறேன்... எல்லாரும் மதியம் விருந்துக்கு வந்துடுங்க... மூர்த்தி, நீங்களும் தான்...'' என்றபடியே அந்தோணிசாமி கிளம்ப, மற்றவர்களும் எழுந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE