கோவை: மோசடி செய்யப்பட்ட பல்கலை மானியக்குழு நிதி ரூ.14.30 லட்சத்தை வசூலிக்க, மண்டல கல்லுாரி கல்வி இணை இயக்குனருக்கு உத்தரவிடப்பட்டுள்ள நிலையில் அதற்கான பணி துவங்கியுள்ளது.
![]()
|
கோவை, கோவைபுதுார் பகுதியில் அரசு நிதியுதவி பெறும் தனியார் கல்லுாரி செயல்படுகிறது. கல்லுாரிக்கு, 2011 - 2014ம் ஆண்டு வரையிலான காலத்தில், பல்கலை மானியக்குழு (யு.ஜி.சி.,) சார்பில், கல்லுாரி மேம்பாட்டுக்காக ரூ.45 லட்சம் ஒதுக்கப்பட்டது.
குறிப்பிட்ட காலத்தில் ரூ.22.50 லட்சம் வழங்கப்பட்டது. இதில், பல்கலை மானியக்குழு விதிகளுக்கு புறம்பாக, ரூ.14.30 லட்சம் செலவு செய்யப்பட்டதாக கணக்கெழுதி, மோசடி நடந்திருப்பது தணிக்கைக் குழு ஆய்வில் தெரிந்தது. தொகையை மீட்க பல்கலை மானியக்குழு கல்லுாரி கல்வி இயக்குனரகத்துக்கு அறிவுறுத்தி பல மாதங்களாகியும் நடவடிக்கை இல்லை.
![]()
|
இதுகுறித்த செய்தி கடந்த, நவ., 7ம் தேதி 'தினமலர்' நாளிதழில் வெளியானது. இந்நிலையில், சென்னை கல்லுாரி கல்வி இயக்ககத்தின் இணை இயக்குனர் (நிதி) மீனா, மோசடி செய்யப்பட்ட ரூ.14.30 லட்சத்தை, கல்லுாரியின் அப்போதைய முதல்வரிடமிருந்து வசூலிக்க, கோவை மண்டல கல்லுாரி கல்வி இணை இயக்குனர் உலகிக்கு அறிவுறுத்தினார்; இதற்கான நடவடிக்கை துவங்கப்பட்டுள்ளது.
கோவை மண்டல கல்லுாரி கல்வி இணை இயக்குனர் உலகி கூறுகையில், ''சம்மந்தப்பட்ட முதல்வருக்கு ரூ.14.30 லட்சத்தை வட்டியுடன் செலுத்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. குறிப்பிட்ட அவகாசத்துக்குள் தொகையை செலுத்தவில்லை எனில், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement