பா.ஜ., மூத்த தலைவர் சுப்ரமணியசாமி அறிக்கை: ஒமைக்ரான் காரணமாக, அடுத்ததாக ஒரு முழு ஊரடங்கு உத்தரவு வந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. அதுபோல, உ.பி., சட்டசபை தேர்தல், அடுத்த ஆண்டு செப்டம்பருக்கு தள்ளிவைக்கப்பட்டு, அங்கு, ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்படலாம். பா.ஜ.,வில் ஒழுங்காக கட்டுப்பட்டு இருந்திருந்தால், இப்படி யூக அரசியல் செய்திகளை வௌியிட வேண்டி வந்திருக்காதே; ஏதாவது ஒரு மாநிலத்தின் கவர்னராக இருந்திருக்கலாமே!
தமிழக காங்., முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலு பேட்டி: கடந்த ஏழாண்டுகளாக பார்லிமென்டில் விவாதங்கள் நடைபெறவில்லை. பிரதமர், பிறரின் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும். ஆனால், மோடி அதை விரும்புவதில்லை. இது அவரின் அனுபவமின்மையையும், சர்வாதிகாரத்தையும் காட்டுகிறது.காங்கிரஸ் கூட்டத்தில் உங்களையும் பேச விடுகின்றனரா... ஏனெனில், பேட்டி கொடுக்கவும், அறிக்கை அளிக்கவும் ஏராளமான கோஷ்டி தலைவர்கள் மும்முரமாக உள்ளனரே. அந்த ஏக்கம் உங்கள் பேச்சில் தென்படுகிறதே!
தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச் செயலர், பி.ஆர்.பாண்டியன் பேட்டி: காவிரியில் தமிழக நலன்களை புறக்கணிக்கும் வகையிலும், உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராகவும், மேகதாதுவில் அணை கட்ட வலியுறுத்தி, காங்கிரசார் பேரணி நடத்த அறிவிப்பு வெளியிட்டுள்ளதை வன்மையாக கண்டிக்கிறோம்.அப்படியே கொஞ்சம், கேரளா பக்கம் திரும்பி பாருங்கள். தமிழக அரசுக்கு எதிராக, அந்த மாநிலத்திலும் காங்கிரஸ் செயல்படுவதை காணலாம். இது தான் அவர்களின் மாநிலத்திற்கு மாநிலம் வேலை என்றாகி விட்டது!
தி.மு.க., - எம்.பி., - ஆ.ராஜா பேச்சு: தமிழகத்தின், தி.மு.க., ஆட்சியை ஆங்கில பத்திரிகைகள் வெகுவாக பாராட்டியுள்ளன. 'நாட்டின் நம்பர் 1 முதல்வர்' இவர் தான் என சொல்லும் அளவுக்கு சிறப்பான இடத்தை, முதல்வர் ஸ்டாலின் பிடித்துள்ளது நமக்கெல்லாம் பெருமையான விஷயம்.பிற மாநில ஆங்கில பத்திரிகைகள், பல காரணங்களுக்காக அப்படி சொல்லும். தமிழக மக்கள் சொல்ல வேண்டுமே... அதற்கு வாய்ப்பு இருக்கிறதா?
தமிழக பா.ஜ., செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி அறிக்கை: நாம் தமிழர் என்ற கட்சியின் பொதுக்கூட்ட மேடையில் ஏறி தாக்குதல் நடத்திய, தி.மு.க.,வினரை கண்டித்து, 'அரசியல் கருத்துக்கு, கருத்தை தான் முன்வைக்க வேண்டும்; வன்முறையை அல்ல' என, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். 'அடங்க மறு, அத்து மீறு' என்று தொண்டர்களை துாண்டி விடாமல், 'அடக்கமாக இரு; சட்டத்தை மதித்து நட' என்று கருத்தை முன்வைத்தால் அரசியலில் வன்முறை இருக்காது.உண்மை தான். உங்களின் விருப்பம், கோரிக்கை நிறைவேற விடுதலை சிறுத்தைகள் கட்சி மனது வைக்க வேண்டுமே!
தமிழக காங்., - எம்.பி., கார்த்தி சிதம்பரம் பேட்டி: நாங்கள் கருப்பசாமியை வணங்குபவர்கள். அந்த சாமிக்கு சுருட்டு, சாராயம் போன்றவற்றை வைத்து வணங்குவோம். ஆனால், பா.ஜ., மற்றும் அவர்கள் கூறும் ஹிந்துத்வா எல்லாம், மேல் தட்டு வர்க்கத்து பழக்கம்.அதனால் என்ன... 'கருப்பசாமியை வணங்குபவர்கள் நாங்கள்' என சொல்ல வைத்ததே, பா.ஜ.,வும், ஹிந்துத்துவாவும் தானே!
மார்க்சிஸ்ட் மாநில செயலர் பாலகிருஷ்ணன் பேட்டி: தேர்தல் சீர்திருத்தம் முறையாக செய்யப்பட வேண்டும். பணம் படைத்தவர்கள் மற்றும் பணக்கார கட்சிகள் மட்டும் தான் தேர்தலில் வெற்றி பெற முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது.பணக்கார கட்சியாக மாற, தி.மு.க., போன்ற கோடீஸ்வர கட்சிகளுடன் உறவை தொடர்கிறதா, ஏழைகள் கட்சியான, கம்யூ.,
தமிழக காங்., தலைவர் கே.எஸ்.அழகிரி அறிக்கை: மத்திய அரசின் தேர்தல் சீர்திருத்த சட்ட திருத்த மசோதா, வெகுஜன மக்களின் ஓட்டுரிமையை பறிக்கும்; மாநிலங்களின் அதிகாரத்தை ஆக்கிரமிக்கவும் வழி வகுக்கும்.சும்மா எதையாவது கொளுத்தி போடாதீங்க சார்... நம்ம மாநிலத்தில் பல கட்சிகள், அமைப்புகள் வேலையில்லாமல் இருக்கின்றன. எதிர்க்கிறோம் என்ற ரீதியில் அவை பிரச்னையை துவக்கிவிடப் போகின்றன!
தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை பேட்டி: கட்சியில் முடிவுகளை ஒன்றாக சேர்ந்து தான் எடுக்கிறோம். எல்லாரின் கருத்துகளையும் கேட்டு, கட்சியை முன்னெடுத்து செல்வதை தான், என் முக்கியமான தலைமை பண்பாக பார்க்கிறேன்.நல்ல பண்பு தான். எனினும், தமிழக, பா.ஜ.,வில் இருக்கும் பெருசுகள் சில, அண்ணாமலை மட்டுமல்ல, யாருக்குமே கட்டுப்படாதவர்களாகத் தான் குரல் கொடுக்கின்றனர்!
இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலர் இரா.முத்தரசன் பேட்டி: தமிழக அரசின், 'இல்லம் தேடி கல்வித் திட்டத்திற்கு' முதலில் எதிர்ப்பு தெரிவித்தோம். மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையிலிருந்து முற்றிலும் மாறுபட்டது என முதல்வர் விளக்கம் அளித்ததும், எதிர்ப்பை வாபஸ் பெற்றோம். அதற்கு, கூட்டணி நிர்ப்பந்தம் காரணம் என்பது உண்மையல்ல.'தி.மு.க.,வின் கொள்கை, திட்டத்தை எதிர்க்கும் திராணி, இந்திய கம்யூ.,வுக்கு இருக்கிறதா...' என, தி.மு.க.,வினர் கேட்டிருப்பர். அதற்கு பயந்து, வாபஸ் பெற்றிருப்பீர்களோ?
தமிழக பா.ஜ., மூத்த தலைவர் ஹெச்.ராஜா அறிக்கை: மதமாற்ற தடைச் சட்டம், தமிழகத்திற்கும் உடனடியாக தேவை. ஆனால், இந்த சட்ட மசோதா வரைவிற்கு, முதல்வராக இருந்து கையொப்பமிட்ட சித்தராமையா, இன்று எதிர்ப்பது, தி.மு.க., உடன் காங்., சேர்ந்ததன் விளைவோ?மத மாற்ற தடைச் சட்டம் மட்டுமின்றி, காங்கிரசின் பிற, 'பல்டி'கள் உலகம் அறிந்தது தானே... நல்ல வேளையாக, கர்நாடகாவில், காங்கிரசுக்கு நிலையான நட்பு கட்சி இல்லை!
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE