தி.மு.க.,வின் கேள்வி - பதில் நாடகம்!
''எதுக்காக தாமதம் செய்யறான்னு தெரியலையே ஓய்...'' என்றபடியே பெஞ்சில் அமர்ந்தார், குப்பண்ணா.
''என்னனு, விபரமா சொல்லுங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.
''தமிழகத்துல மின் கட்டணம் நிர்ணயம், மின் வாரிய செயல்பாட்டை கண்காணித்தல், மின் வாரியம் மற்றும் மின் நிறுவனங்கள் இடையில ஏற்படுற பிரச்னைகள் தொடர்பான வழக்குகளை விசாரிப்பது உள்ளிட்ட பணிகளை, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் செய்யறது ஓய்...
''ஆணையத்துல, மின் வாரியத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்படற வழக்குகள்ல ஆஜராக, மின் வாரியம் சார்புல வழக்கறிஞர் நியமிப்பா ஓய்...
''ஆட்சி மாற்றம் நடந்த நிலையில, புதியவரை நியமிக்க முடிவு செஞ்சு, அதற்கான பட்டியலையும் மின் வாரியத்துக்கு அனுப்பி இருக்கா... ஆனா இன்னும், புதிய வழக்கறிஞரை நியமிக்கலை ஓய்...'' என விளக்கினார்
குப்பண்ணா.
''கோவை மாவட்டத்துல இருக்குற 10 தொகுதியிலயும், தி.மு.க., தோத்துடுச்சு... அதனால, உள்ளாட்சி தேர்தல்ல எப்படியாவது ஜெயிச்சு, மேயர் பதவியை கைப்பற்ற நினைக்கிறாங்க பா...'' என்ற அன்வர்பாயே, அடுத்த தகவலை சொல்ல ஆரம்பித்தார்...
''ஆனா, களநிலவரம் தி.மு.க.,வுக்கு சாதகமா இல்லைன்னும், இப்போதைக்கு, 30 சதவீத இடங்களை தான் கைப்பற்ற முடியும்னும், ஆளுங்கட்சி தலைமைக்கு உளவுத்துறை, 'ரிப்போர்ட்' கொடுத்திருக்காம் பா...
''கோவைக்கு முதல்வர் ஸ்டாலின் நேரடியா வந்து நலத்திட்ட உதவி கொடுத்தாலும், என்னதான் வாக்குறுதி கொடுத்தாலும், மக்கள்கிட்ட அது பெரிய அளவுல எடுபடலையாம் பா...
''இந்த நேரத்துல ஆளுங்கட்சியை கண்டித்து, அ.தி.மு.க.,வினர் கோவையில நடத்திய ஆர்ப்பாட்டத்துல, ஆயிரக்கணக்கான தொண்டர்களை திரட்டி, 'மாஜி' அமைச்சர் வேலுமணி, 'கெத்து' காட்டியிருக்காரு பா...
''இந்த விஷயம் தெரிஞ்சதும், தி.மு.க., தலைமை, அக்கட்சியின் கோவை நிர்வாகிகள் மீது கடும் கோபத்துல இருக்குது... மற்ற இடங்களை விட, கோவை மீது தான் ஆளுங்கட்சிக்கு அதிக கவனம் இருக்காம்... என்ன நடக்குதுன்னு பொறுத்திருந்து பார்க்கலாம் பா...'' என முடித்தார், அன்வர்பாய்.
''நாடகத்தை ஆரம்பிச்சுட்டாவ வே...'' என கடைசி தகவலுக்கு மாறினார், அண்ணாச்சி.
''எந்த கம்பெனியிலங்க...'' என அப்பாவியாக கேட்டார், அந்தோணிசாமி.
''முழுசா கேளும்... முதல்வர் ஸ்டாலின் மகனும், தி.மு.க., இளைஞரணி செயலருமான உதயநிதி, முதல் முறையா எம்.எல்.ஏ., ஆகியிருக்காருல்லா...
''அவருக்கு அமைச்சர் பதவி கொடுக்க தலைமை முடிவு பண்ணிட்டு... அதுக்காக, ஒரு நாடகத்தை ஆரம்பிச்சிருக்காவன்னு, அரசியல் விமர்சகர்கள் பேசிக்கிடுதாவ வே...
''தி.மு.க., - ஐ.டி., அணி சார்புல, மாவட்ட வாரியா ஒவ்வொரு அமைச்சரிடமும், 'உதயநிதிக்கு எப்ப அமைச்சர் பதவி கிடைக்கும்'ன்னு ஒரு கேள்வியை போடுதாவ...
''அதுக்கு அமைச்சர்களும், உதயநிதி பற்றி அரை மணி நேரத்துக்கு புகழ்ந்து தள்ளி, உடனே பதவி கொடுக்கணும்னு சொல்லுதாவ...
''அந்த, 'வீடியோவை' உள்ளூர் நிருபர்களுக்கு, ஐ.டி., நிர்வாகிகள் அனுப்பி வைக்காங்க... இந்த கேள்வி - பதில் நாடகத்துக்கு, 'ஐடியா' கொடுத்ததே, தி.மு.க., தலைமை தானாம் வே...'' என்றார்
அண்ணாச்சி.நண்பர்கள் சிரித்தபடியே கிளம்ப, பெஞ்ச் அமைதியானது.
டிரான்ஸ்பார்மருக்கு ரூ.200 வாங்கும் அதிகாரிகள்!
''ரெண்டு பேருக்கும் முட்டல், மோதல்னு கிளப்பி விடுறாங்க பா...'' என்றபடியே பெஞ்சில் அமர்ந்தார் அன்வர்பாய்.
''யார், என்னன்னு விளக்கமா சொல்லுங்க...'' என்றார் அந்தோணிசாமி.
''தி.மு.க., மகளிர் அணி செயலர் கனிமொழி துாத்துக்குடி எம்.பி.,யாகவும் இருக்காங்க... இந்த மாவட்டத்தைச் சேர்ந்த கீதா ஜீவன் அமைச்சரா இருக்காங்க... தொகுதியில நடக்கிற எல்லா அரசு விழாக்கள்லயும் ரெண்டு பேரும் சேர்ந்தே
கலந்துக்கிறாங்க பா...
''ஆனா, அமைச்சருக்கு எதிர் கோஷ்டி, ரெண்டு பேரையும் பிரிக்க பிளான் பண்ணி, 'ரெண்டு பேருக்கும் சுமுக உறவு இல்லை'ன்னு சமூக வலைதளங்கள்ல பரப்புறாங்க பா... அதெல்லாம் பொய்னு காட்டிக்க, சமீபத்துல கோவில்பட்டியில 10 நாள் நடந்த ஹாக்கி போட்டி திருவிழாவுல கனிமொழியும், கீதா ஜீவனும் கைகோர்த்து கலந்துக்கிட்டாங்க... வீரர்களுக்கு ரெண்டு பேரும் சேர்ந்து பரிசுகள் வழங்கி பாராட்டிஇருக்காங்க பா...''
என்றார் அன்வர்பாய்.
''சேர்மனுக்கும், பி.டி.ஓ.,வுக்கும் பனிப்போர் நடந்துட்டு இருக்குதுங்க...'' என, அடுத்த மேட்டருக்கு மாறினார் அந்தோணிசாமி.
''எந்த ஊருல வே...'' எனக் கேட்டார் அண்ணாச்சி.
''சேலம் மாவட்டம், மேச்சேரி ஒன்றியத்துல ஒன்பது பெண்கள் உட்பட 15 கவுன்சிலர்கள் இருக்காங்க... வழக்கமா ஒன்றிய கூட்டம் நடக்கிறப்ப, பெண் கவுன்சிலர்களின் கணவர்கள், பார்வையாளர்
பகுதியில வந்து அமர்ந்திருப்பாங்க...
''ஒன்றிய சேர்மனா அ.தி.மு.க.,வைச் சேர்ந்த தனலட்சுமி இருக்காங்க... போன வாரம் நடந்த ஒன்றிய கூட்டத்துல, பெண் கவுன்சிலர் கணவர்கள் உட்பட பார்வையாளர்கள் யாரையும் அனுமதிக்காம, போலீஸ் பாதுகாப்பு போட்டுட்டாங்க...
''தனலட்சுமி தான் இதுக்கு காரணம்னு, அவங்க கட்சி கவுன்சிலர்களே குற்றம் சாட்டினாங்க... தனலட்சுமியோ, 'என் அனுமதியில்லாம பி.டி.ஓ., ரேவதி தான், போலீசாரை அழைச்சிட்டாங்க'ன்னு புகார் சொல்றாங்க... 'சேர்மனுக்கும், பி.டி.ஓ.,வுக்கும் சரிப்பட்டு வரலை... அதான், மாறி மாறி புகார் சொல்லிக்கிறாங்க'ன்னு கவுன்சிலர்கள் புலம்புறாங்க...'' என முடித்தார் அந்தோணிசாமி.
''டிரான்ஸ்பார்மருக்கு 200 ரூபாய் வசூல் பண்ணிடறா ஓய்...'' என்றார் குப்பண்ணா.
''மின் வாரிய தகவலாங்க...'' என்றார் அந்தோணிசாமி.
''ஆமாம்... சென்னை மின் வாரிய தலைமை அலுவலகத்துல, 'மெட்டீரியல் மேனேஜ்மென்ட்' எனப்படும் பொருட்கள் மேலாண்மை பிரிவு இருக்கு... இந்த பிரிவு தான், வாரியத்துக்கு தேவையான மின் கம்பி, டிரான்ஸ்பார்மர், மீட்டர் உள்ளிட்ட உபகரணங்களை கொள்முதல் செய்யறது ஓய்...
''ஒரே இடத்துல, மூணு வருஷத்துக்கு மேலா பணியில இருக்கறவாளை இடமாற்றம் செய்யணும்னு, மின் வாரியத்துல விதி இருக்கு... ஆனா, இந்த மேலாண்மை பிரிவுல ரெண்டு பொறியாளர்கள், பல வருஷமா பெஞ்ச் தேய்ச்சுண்டு இருக்கா ஓய்...
''யாராவது காரியம் இல்லாம சும்மா இருப்பாளா... சப்ளை நிறுவனங்களிடம் இருந்து, ஒரு டிரான்ஸ்பார்மருக்கு தலா 200 ரூபாய் வீதம் கமிஷன் வாங்கிக்கறா... இதுல லட்சக்கணக்குல சம்பாதிச்சுண்டு இருக்கா ஓய்...'' என முடித்தார் குப்பண்ணா.அரட்டை முடிய அனைவரும் கிளம்பினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE