அஜித்குமார் நடித்துள்ள வலிமை படம் பொங்கலுக்கு வெளியாகிறது. இதன் இறுதிக்கட்ட பணிகளுக்கு இடையில் இயக்குனர் எச்.வினோத் நம் நாளிதழுக்கு அளித்த சிறப்பு பேட்டி:
வலிமை உருவான விதம்?
நேர்கொண்ட பார்வை படத்திற்கு பின், அஜித்தின் இன்னொரு படம் இயக்க முடிவானது. 'மாஸ் ஹீரோ' என்றால், அதில் அனைத்து விஷயங்களும் இருக்க வேண்டும். இன்றைய வாழ்க்கை ஓட்டத்தில் நாம் கவனிக்க தவறிய சில முக்கியமான விஷயங்களும், அதனால் குடும்பத்தில் ஏற்படும் பிரச்னைகளின் பின்னணியில், 'ஆக் ஷன்' கலந்து வலிமை படத்தை கொடுத்துள்ளோம்.
படப்பிடிப்புக்கு அதிக நாட்களாகி விட்டதே...
படப்பிடிப்பை 100 நாட்களில் முடிக்க திட்டமிட்டோம். அதன்படி, 2019 டிசம்பரில் ஆரம்பமானது. இடையில் கொரோனாவால் ஓராண்டு இடைவெளி ஏற்பட்டது. படக்குழுவால் எந்த தாமதமும் இல்லை. தீபாவளிக்கு வெளியிட திட்டமிட்டோம். தியேட்டர் பிரச்னையால் தற்போது வெளியிடுகிறோம். போனிகபூர் 40 படங்களுக்கு மேல் தயாரித்தவர். கொரோனாவால் படப்பிடிப்பு தாமதமானாலும், இந்தியா முழுக்க இருந்த பணியாளர் அனைவருக்கும், ஒரு மாதம் கூட சம்பளத்தை நிறுத்தவில்லை. முழு சம்பளத்தையும் கொடுத்து விட்டார். வலிமைக்கே வலிமை தந்தவர் அவர் தான்.
இப்படம் அஜித் ரசிகர்களுக்கு பொங்கல் விருந்தாக அமையுமா?
அஜித்தின் முந்தைய நேர்கொண்ட பார்வை ஒரு 'ரீமேக்' படம். எனவே, இப்படித்தான் இருக்கும் என அனைவருக்கும் தெரியும். ஆனால் வலிமை படத்தை அவரது ரசிகர்கள் கொண்டாடுவர். எதிர்பார்க்கும் அனைத்துமே கூடுதலாகவே இருக்கும்.
வில்லனாக புதுமுகத்தை தேர்வு செய்தது ஏன்?
வில்லனாக, நாயகனை விட இளம் வயது உடையவராக, 30 வயதுக்குள் உள்ள நபரை தேடினோம்; கார்த்திகேயா கனகச்சிதமாக அமைந்துவிட்டார்.
அஜித்தின் பைக் சாகச காட்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி விட்டதே...
படத்தில் பயன்படுத்திய பைக், இத்தாலி நாட்டைச் சேர்ந்தது. இன்ஜின் சூடாகிவிட்டால், ஸ்டார்ட் ஆகாது. 'இன்டிகேட்டர்' உடைந்தால் கூட, 30 ஆயிரம் ரூபாய் செலவாகும். அஜித்தை பார்த்துக் கொள்வதை போலவே, வண்டியையும் பார்த்துக் கொள்ள வேண்டியிருந்தது. அதேபோல், சாலையில் பைக் காட்சியை எடுக்க, புனே அருகே சோலாப்பூர், ஐதராபாத், லக்னோ உள்ளிட்ட எங்கேயும் அனுமதி கிடைக்கவில்லை. கடைசியில், சென்னை அருகே மீஞ்சூர் சாலையில் அனுமதி கிடைத்தது. 'சேஸிங்' காட்சிகள் எடுப்பது அவ்வளவு சுலபமல்ல. அதனால், மிக கவனமாக இருந்தோம். அஜித்துக்கு விபத்து ஏற்பட்டது கூட, முடிக்கப்படாமல் இருந்த மண் நிறைந்த சாலையால் தான்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE