தாம்பரம் : கிறிஸ்துமஸ் விடுமுறையை முன்னிட்டு, வண்டலுார் பூங்காவில் நேற்று கூட்டம் அதிகமாக காணப்பட்ட நிலையில், முக கவசம், சமூக இடைவெளி ஆகிய மருத்துவ வல்லுனர்களின் எச்சரிக்கையை, பூங்கா நிர்வாகம் பின்பற்றாதது அதிருப்தியை ஏற்படுத்தியது.
கொரோனா முதல் மற்றும் இரண்டாம் அலை தீவிரமாக இருந்த போது, மூடப்பட்டிருந்த வண்டலுார் உயிரியல் பூங்கா, தளர்வுகளால் மீண்டும் திறக்கப்பட்டது. இதனால் நாள்தோறும் பார்வையாளர்கள், விலங்குகளை ரசித்து வருகின்றனர்.இந்நிலையில், கிறிஸ்துமஸ் விடுமுறையை முன்னிட்டு, பூங்காவில் நேற்று மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.பலரும் சைக்கிள் மற்றும் பேட்டரி வாகனங்களில் பூங்காவை வலம் வந்தனர். பெரும்பாலானோர் நடந்தே சென்று விலங்குகளை பார்த்து ரசித்தனர்.பறவைகள், வெள் ளைப் புலி, சிங்கம், காட்டுமாடு, நீர் யானை ஆகியவற்றை குழந்தைகள் நீண்ட நேரம் கண்டு ரசித்தனர். பூங்காவிற்கு கார்களில் வந்தவர்களுக்கு, முறையான வழிகாட்டுதல் இல்லாததால், வாகனங்களை வண்டலுார் - கேளம்பாக்கம் சாலையில் நிறுத்தினர்.
இதனால், அச்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மற்றொரு புறம், நேற்று முன்தினம் முதல்வர் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில், ஒமைக்ரான் பரவல் அதிகமாக இருப்பதால், முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும். சமூக இடைவெளி யை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என, மருத்துவ வல்லுனர்கள் எச்சரிக்கை விடுத்து இருந்தனர்.அந்த எச்சரிக்கை, பூங்கா நிர்வாகம் முறையாக பின்பற்றவில்லை.

பூங்காவினுள் 5 - 0 சதவீதம் பேர் முக கவசம் அணியாமல் விலங்குகளை ரசித்தபடி சுற்றி வந்தனர். பொதுமக்களை அறிவுறுத்த ஊழியர்கள் யாரும் இல்லை. அரசின் கட்டுப்பாடுகளை மீறி, அதிக கூட்டம் கூடியதுடன், சமூக இடைவெளி, முக கவசம் அணிய வலியுறுத்த கூட ஊழியர்கள் இல்லாதது தொற்று பரவலுக்கு வழிவகுப்பதாக இருந்தது.
கட்டுடல் மலைப்பாம்பு!

பூங்கா பாம்பு கூண்டில், விஷமில்லா பாம்புகளான சாரை, மண்ணுளி, நீர்க்கத்தான், அழகு, பச்சை, மலை பாம்புகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இவற்றில், உலகின் அதிக நீளமாக வளரக்கூடிய கட்டுடல் மலைப்பாம்புகள் அடங்கும்.சிறிய கூண்டில் அவை விடப்பட்டிருந்ததால், பார்வையாளர்களால் முழுமையாக ரசிக்க முடியவில்லை. அதனால், கூண்டை புதுப்பிக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்தது.இதையடுத்து, பாம்புகளுக்கு ஏற்றவாறு கூண்டை புதுப்பித்து, அந்த கூண்டில் நேற்று பாம்புகள் விடப்பட்டன. மொத்தம், 10 முதல் 15 அடி நீளம் கொண்ட, 14 கட்டுடல் மலைப்பாம்புகள் பார்வைக்கு விடப்பட்டுள்ளன. அதிக நீளமான மலைப்பாம்புகளை பூங்காவிற்கு வரும் பார்வையாளர்கள் வியப்புடன் பார்த்து ரசித்தனர்.