அட்டூழியம்! சென்னையில் அதிகரிக்கும் விளம்பர பலகைகள் : உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு அப்பட்டமாக மீறல்| Dinamalar

அட்டூழியம்! சென்னையில் அதிகரிக்கும் விளம்பர பலகைகள் : உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு அப்பட்டமாக மீறல்

Updated : டிச 26, 2021 | Added : டிச 26, 2021 | கருத்துகள் (10) | |
சுப்ரீம் கோர்ட் உத்தரவை அப்பட்டமாக மீறி, சென்னை மற்றும் புறநகரிலும், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களின் முக்கிய சாலைகளிலும், ராட்சத விளம்பர பலகைகள் அதிகளவில் முளைத்துள்ளன. இவற்றை கண்துடைப்பாக அவ்வப்போது அகற்றும் அதிகாரிகள், விளம்பர பலகைகள் வைப்பதை நிரந்தரமாக தடுக்க எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என, புகார் எழுந்துள்ளது.தமிழகத்தில், வாகன
அட்டூழியம், சென்னை, விளம்பர பலகைகள்,    உச்ச நீதிமன்றம், உத்தரவு, அப்பட்டமாக மீறல், Chennai, Supreme Court, உச்ச நீதிமன்றம்,சென்னை

சுப்ரீம் கோர்ட் உத்தரவை அப்பட்டமாக மீறி, சென்னை மற்றும் புறநகரிலும், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களின் முக்கிய சாலைகளிலும், ராட்சத விளம்பர பலகைகள் அதிகளவில் முளைத்துள்ளன. இவற்றை கண்துடைப்பாக அவ்வப்போது அகற்றும் அதிகாரிகள், விளம்பர பலகைகள் வைப்பதை நிரந்தரமாக தடுக்க எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என, புகார் எழுந்துள்ளது.

தமிழகத்தில், வாகன ஓட்டிகளின் கவனத்தை திசை திருப்பும் வகையில், போக்குவரத்து நிறைந்த சாலைகளில் வைக்கப்படும் விளம்பர பலகைகளால், பல விபத்துக்கள் ஏற்பட்டு, அப்பாவி உயிர்கள் தொடர்ந்து பலியாகின.பள்ளிக்கரணை


இதைத் தொடர்ந்து, விளம்பர பலகைகள் வைக்க உச்சநீதிமன்றம் தடை விதித்தது. இந்நிலையில், சென்னை, பள்ளிக்கரணை அருகே, 2019 செப்டம்பர் 12ம் தேதி, இருசக்கர வாகனத்தில் சென்ற சுபஸ்ரீ என்ற இளம் பெண், சாலையில் கட்சி பிரமுகர் இல்ல நிகழ்ச்சிக்காக வைக்கப்பட்ட பேனர் சரிந்து விழுந்ததில், லாரியில் சிக்கி இறந்தார்.இந்த விபத்து சம்பவத்தின் போது, சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது. அப்போது, நகரின் எந்த பகுதியிலும், விளம்பர பலகைகள், பேனர்கள் வைக்கக் கூடாது என, கண்டிப்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.இதுபோன்று ஏதேனும் அசம்பாவிதம் நடக்கும் போதும், நீதிமன்றங்கள் கண்டிப்புக்கு ஆளான அடுத்த சில நாட்களிலும் மட்டுமே, விளம்பர பலகைகளுக்கு எதிராக அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பர்.


latest tamil news


ஆனால், அடுத்த சில நாட்களிலேயே, அகற்றப்பட்ட இடத்தில் மீண்டும் விளம்பர பலகைகள் முளைத்துவிடும்.இது தொடர்கதையாக நடந்து வரும் நிலையில், சென்னை மற்றும் புறநகரில் சமீபகாலமாக, முன்னர் இருந்ததை விட, இருமடங்கு அளவிற்கு விளம்பர பலகைகள் அதிகரித்திருப்பதும், இதற்கு அரசு அதிகாரிகள் பலரும் ஆதரவாக இருப்பதும் தற்போது தெரியவந்து உள்ளது.மேலும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் இருப்பதால், மற்ற பணிகளை கவனிக்க முடியவில்லை என்ற காரணத்தை கூறியே, விளம்பர பலகைகள் அதிகரிப்பதற்கு அதிகாரிகளே மறைமுக காரணமாக இருப்பதாகவும் புகார் எழுந்து உள்ளது.

சென்னையில், கோடம்பாக்கம், அசோக் நகர், 11 வது அவென்யூ, ஜவஹர்லால் நேரு சாலை, ஜாபர்கான்பேட்டை, வடபழநி, ஆற்காடு சாலை, கோடம்பாக்கம் நெடுஞ்சாலை, சைதாப்பேட்டை பஜார் சாலை ஆகிய இடங்களில் ராட்சத விளம்பர பலகைகள் அதிகம் உள்ளன.அண்ணா நகரில், ஷெனாய் நகர், பிரிவாரி தெரு, அண்ணா நகர் கிழக்கு, 3வது அவென்யூ, அண்ணா நகர் ரவுண்டானா, கிழக்கு மெட்ரோ நிலையம், அமைந்தகரை நெல்சன் மாணிக்கம் சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை.வானகரம்அரும்பாக்கம் என்.எஸ்.கே., நகர், திருமங்கலம், காந்தி தெரு. கோடம்பாக்கம், என்.எஸ்.கே., சாலை, மகாலிங்கபுரம் பிரதான சாலை ஆகிய இடங்களிலும் தனியார் கட்டடங்களின் மீது விளம்பர பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. புறநகரில், தாம்பரம் பஸ் நிலையம், பெருங்களத்துார் பஸ் நிலையம், தாம்பரம் முடிச்சூர் சாலை, தாம்பரம் - - வேளச்சேரி சாலை, பல்லாவரம்: பல்லாவரம் -- குன்றத்துார் சாலை.மேலும், ஜி.எஸ்.டி., சாலை, குன்றத்துார் -- குமணன்சாவடி சாலை, பூந்தமல்லி டிரங்க் சாலை, சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வானகரம் உள்ளிட்ட பல இடங்களில் விளம்பர பலகைகள் காணப்படுகின்றன. விளம்பர பலகைகள் விவகாரத்தை கண்டுகொள்ளாமல் இருக்க, ஊராட்சிகளில் செயலர்கள் துவங்கி, மாநகராட்சி பகுதிகளில் பொறியாளர்கள், வருவாய் அலுவலர்கள் வரை ஒட்டுமொத்த அதிகாரிகளுக்கும் கணிசமான மாமூல் வழங்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து, சமூக ஆர்வலர் ஜி.தேவா, 48, கூறியதாவது:சென்னையில் நீதிமன்ற உத்தரவை மீறி, 30 இடங்களில் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி கமிஷனருக்கு புகார் அளித்தேன். பல இடங்களில் பேனர்கள் அகற்றப்பட்டன. இன்னும் 16 இடங்களில் அகற்றப்படாமல் உள்ளது. கள ஆய்வு செய்ய வேண்டிய உதவி பொறியாளர்கள் பணம் வசூல் செய்து, கண்டுகொள்ளாமல் உள்ளனர்.


கொசு தொல்லை


இந்த விளம்பர பலகைகள் விவகாரம், தனி மாபியா போல உருவெடுத்துள்ளது. விளம்பர பலகைகள் குறித்து மாநகராட்சியிடம் ஆன்லைனில் புகார் அளித்தால், சம்மந்தப்பட்ட வார்டு உதவி பொறியாளர், என்னை தொடர்பு கொண்டு மிரட்டுகிறார்.மாநகராட்சியின் 1913 எண்ணில் புகார் அளித்தால், கொசு தொல்லைக்கு புகார் அளித்துள்ளதாக குறுந்தகவல் வருகிறது. அடுத்த நாள் மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் போன் செய்து, 'கொசு தொல்லை என புகார் அளித்தீர்களா?' என, கேட்கின்றனர்.அந்த அளவிற்கு அதிகாரிகள் ஒருங்கிணைந்து ஆதரவு தெரிவிப்பதால் தான், பேனர், விளம்பர பலகைகள் கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க முடியாமல் இருக்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.

விதிமீறல் கட்டடங்கள் குறித்த ஒரு வழக்கில், நீதிமன்ற உத்தரவுகளை அமல்படுத்தாத அதிகாரிகளை, சிறைக்கு அனுப்ப வேண்டும். நீதிமன்ற உத்தரவுகளை பின்பற்றாத ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளின் பதவியை பறித்து, வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என, உயர் நீதிமன்றம் நேற்று முன்தினம் காட்டமாக கண்டித்தது.அதே போல, விளம்பர பலகைகள் விஷயத்திலும், அதிகாரிகளுக்கு பிடியை இறுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


latest tamil news


பேனர்கள், விளம்பர பலகைகள் அமைக்க உயர் நீதிமன்ற தடை உள்ளது. கொரோனா காரணமாக, விளம்பர பலகைகளை அகற்றும் பணியில் சற்று சுணக்கம் ஏற்பட்டுள்ளது.தொடர்ந்து விளம்பர பலகைகள் அகற்றப்படும். மாநகராட்சி சார்பில் விளம்பர பலகைகள் வைக்க எந்த இடத்திலும் அனுமதி வழங்கப்படவில்லை. -
ககன்தீப் சிங் பேடி,
மாநகராட்சி கமிஷனர்.

ஊராட்சி பகுதியில் சட்டவிரோதமாக வைக்கப்பட்ட விளம்பர பலகைகள் அனைத்தும் இரண்டு மாதங்களுக்கு முன் அகற்றப்பட்டது. தற்போது மீண்டும் பல இடங்களில் அவை முளைத்து உள்ளன. ஊராட்சி நிர்வாகம் சார்பில், விளம்பர பலகை வைக்க யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. விளம்பர பலகைகளை விரைவில் அகற்றுவோம். அவற்றை வைப்பவர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க உள்ளோம்.-
கருணாகரன்,
திருவள்ளூர் மாவட்டம்,
வானகரம் ஊராட்சி செயலர்.

விளம்பர பலகைகள் விவகாரத்தில், மாவட்ட பகுதியாக இருந்தால் வருவாய் துறையும், மாநகராட்சி பகுதியாக இருந்தால், மாநகராட்சி நிர்வாகமும் எங்களிடம் புகார் அளித்தால் மட்டுமே நாங்கள் நடவடிக்கை எடுக்க முடியும். விளம்பர பலகைகளை அகற்றும் போது, பாதுகாப்பு கேட்டாலும் அளித்து வருகிறோம்.
- காவல்துறை ஆய்வாளர்ரூ.25,000 அபராதம்!


மாநகராட்சி வருவாய் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:நீதிமன்ற தடை உத்தரவு இருப்பதால், விளம்பர பலகைகளை கட்டாயம் அகற்ற வேண்டும். நாங்கள் அவ்வப்போது விளம்பர பலகைகளை அகற்றி வருகிறோம். இந்த நடவடிக்கையின் போது, விளம்பர பலகைகள் வைப்பவர்களுக்கு முன்னர் 3,000 ரூபாய் அபராதம் விதித்தோம். தற்போது 25 ஆயிரம் ரூபாயாக அபராதத்தை உயர்த்தி உள்ளோம். விளம்பர பலகைகள் வைக்க அனுமதி வழங்கும் வீட்டு உரிமையாளர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை.விதிமீறல் விளம்பர பலகைகள் குறித்து காவல்துறையில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுத்துள்ளோம்.இவ்வாறு, அவர் கூறினார்.
நமது நிருபர் -

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X