விருதுநகர்: விருதுநகரில் நான்குவழிச்சாலையை யொட்டி கலெக்டர் அலுவலகம் அருகே 22 ஏக்கரில் அமைந்துள்ளது
அரசு மருத்துவ கல்லுாரி. முதன்மை கட்டடம், கலை அரங்கம், மாணவர்கள் விடுதி என ஆறு கட்டடங்களை கொண்டுள்ள இக்கல்லுாரியில், சோலார் அமைப்புகள் ஏற்படுத்தி அதன் மூலம் கல்லுாரிக்கு தேவையான மின்சாரத்தை பெறவும் வழிவகை செய்துள்ளது கூடுதல் சிறப்பு. ரூ.50 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள இந்த சோலார் பிளான்ட் மூலம் 270 கிலோ வோல்ட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும். இதனால் கல்லுாரியின் மின்சார செலவில் மாதத்திற்கு ரூ.3 லட்சம் வரை மிச்சமாகிறது.

இதோடு கல்லுாரியில் 5 ஆயிரம் மரக்கன்றுகள் நட்டும் பராமரிக்கப்படுகிறது. இவ்வளவு மரங்கள் இங்கு வளர்க்கப்படும் போது பல்வித பறவைகளுக்கு வசிப்பிடமாவதுடன், மாணவர்கள் மட்டுமன்றி சுற்று புறத்தினரும் மாசு இல்லா சுத்தமான காற்றை சுவாசிக்கலாம். மரங்கள் நன்கு வளர்ந்த பின் இவ்விடமே சோலை வனமாக காட்சியளிக்கும் என்பதில் ஐயமில்லை. கட்டடங்கள் இருக்கும் இடம் தவிர்த்து அனைத்து இடங்களிலும் புல்வெளிகளும் அமைக்கப்பட உள்ளன. இதன் மூலம் கல்லுாரி வளாகமே ஓர் பசுமை வளாகமாக மாறும் சூழல் உருவாகும். இவ்வளவு சிறப்பு பெற்ற இக்கல்லுாரியை ஜன.12ல் பாரதபிரதமர் நரேந்திரமோடி திறந்து வைக்க உள்ளார்.
புல் வெளியுடன் பசுமை வேலி

அரசு மருத்துவ கல்லூரியில் கூடுதலாக திருவள்ளுவர் சிலை, மாணவர்களுக்கு பயன் உள்ள வகையில் மருத்துவத்தின் பல துறைகளில் முன்னோடியாக திகழ்ந்தவர்கள் புகைப்படங்களை விளக்கங்களுடன் காட்சி படுத்தி உள்ளோம். சுற்றுசூழலை காக்கும் வகையில், கல்லூரி கலை அரங்கத்தின் அருகில் வள்ளுவர் கோட்டம் அமைத்து அதில் பல வகை மரக்கன்றுகள் நட்டு, அழகு செடிகளையும் வளர்த்து வருகிறோம். வளாகம் முழுவதும் பாரம்பரிய மரங்கள், கொரியன் கிராஸ் புல்வெளியும் அமைக்க உள்ளோம். இதோடு கல்லூரியை சுற்றி பசுமை வேலியும் அமைத்து உள்ளோம்.
சங்குமணி,
டீன்,
மருத்துவ கல்லூரி, விருதுநகர்
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE