திருப்பூர்:அமெரிக்காவின் அதிரடியால், சீனாவின் ஆடை வர்த்தக சாம்ராஜ்யம் சரிகிறது; இந்திய ஆயத்த ஆடை ஏற்றுமதி துறைக்கு, உலகளாவிய சந்தை வாய்ப்புக்கள் கூடிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சர்வதேச ஆயத்த ஆடை ஏற்றுமதியில், காலம் காலமாக சீனா கோலோச்சி வருகிறது. கொரோனா பரவலுக்குப்பின், உலக நாடுகள் மத்தியில் சீனாவின் மதிப்பு குறைந்துள்ளது. பெரும்பாலான நாடுகள், சீனாவுக்கு மாற்றாக, இந்தியா, வியட்நாம், வங்கதேசம் போன்ற மற்ற நாடுகளிலிருந்து பொருட்களை இறக்குமதி செய்ய முன்னுரிமை அளிக்கத் துவங்கிவிட்டன. இந்நிலையில், சீனாவின் சின்ஜியான் மாகாணத்தில் தயாரிக்கப்படும் பொருட்கள் இறக்குமதிக்கு தடை விதிக்கும் முடிவுக்கு, தற்போது அமெரிக்க செனட் சபை ஒப்புதல் அளித்துள்ளது.சீனாவின் உள்ளூர் தேவைக்கான பருத்தியில், 87 சதவீதம் சின்ஜியானில் உற்பத்தியாகிறது. அமெரிக்காவின் அதிரடியால், சீனாவின் ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தக சாம்ராஜ்யம் சரியும் நிலை உருவகியுள்ளது.
திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியாளர் குமார் துரைசாமி கூறியதாவது:தற்போது, சின்ஜியானில் இருந்து அனைத்து பொருட்கள் இறக்குமதிக்கு தடைவிதிக்கும் முடிவுக்கு, அமெரிக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. சில ஐரோப்பிய நாடுகளும், சீன பொருட்கள் புறக்கணிப்பை படிப்படியாக செயல்படுத்தி வருகின்றன.கொரோனா பரவலை தொடர்ந்து, மனித உரிமை மீறல்கள், உலக நாடுகள் மத்தியில் சீன எதிர்ப்பை மேலும் வலுப்படுத்தியுள்ளது. சர்வதேச வர்த்தகர்கள், சீன நிறுவனங்களுக்கு ஆடை தயாரிப்பு ஆர்டர் வழங்குவதை குறைத்து விடுவர்.மூலப்பொருள் தேவைக்கு பிற நாடுகளையே சார்ந்திருக்கும் நிலை உருவாவதால், சீனாவின் ஆடை தயாரிப்பு செலவினம் அதிகரிக்கும்; இதனால், அந்நாட்டின் போட்டி திறன் குறையும்.

இது, இந்தியா, வியட்நாம் நாடுகளின் ஆடை ஏற்றுமதி துறைக்கு அதிக வர்த்தக வாய்ப்புகளை பெற்றுத்தரும். மத்திய அரசு, பருத்தி, நுால் ஏற்றுமதிக்கு கட்டுப்பாடு விதிக்கவேண்டும். மூலப்பொருட்களுக்கு பதில் ஆடை தயாரித்து ஏற்றுமதி செய்வதன் வாயிலாக, நாட்டுக்கு அன்னிய செலாவணி அதிகரிக்கும்; வேலை வாய்ப்பும் பெருகும்.இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE