புதுடில்லி: கோவிட் தொற்றை தடுக்க பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்துவது குறித்த எனது பரிந்துரையை மத்திய அரசு ஏற்று கொண்டுள்ளதாக காங்கிரஸ் எம்.பி., ராகுல் கூறியுள்ளார்.
ஒமைக்ரான் பரவல் நாடு முழுவதும் அதிகரித்து வருகிறது. இதுவரை 422 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன்னர் காங்கிரஸ் எம்.பி., ராகுல் வெளியிட்ட அறிக்கையில், பெரும்பான்மையான மக்களுக்கு இன்னும் தடுப்பூசி போடப்படவில்லை. பூஸ்டர் டோஸ் தடுப்பூசி எப்போது போடப்படும் எனக்கேள்வி எழுப்பி இருந்தார்.

இந்நிலையில் நேற்று நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி, 'நாட்டில் 15 முதல் 18 வயது வரை உள்ளவர்களுக்கு ஜன., 3ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடப்படும். முன்கள பணியாளர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு 'பூஸ்டர் டோஸ்' எனப்படும் கூடுதல் தடுப்பூசி வரும் 10ம் தேதி முதல் போடப்படும். உலகின் முதல் மரபணு தடுப்பூசியும் விரைவில் அறிமுகமாக உள்ளது என தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக காங்கிரஸ் எம்.பி., ராகுல் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்துவது பற்றிய என்னுடைய பரிந்துரையை மத்திய அரசு ஏற்று கொண்டுள்ளது. இது சரியான முடிவு. பூஸ்டர் டோஸ் பாதுகாப்பு நாட்டு மக்கள் அனைவரையும் சென்றடைய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE