சென்னை: ''நாடு முழுதும் மோடி அலை வீசுகிறது. வரும் 2024ல், 400 எம்.பி.,க்களுடன், மூன்றாவது முறையாக மோடி தான் பிரதமராவார்,'' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
பிரதமர் மோடி வானொலியில் பேசிய, 'மனதின் குரல்' நிகழ்ச்சி, சென்னை அடையாறில் உள்ள பா.ஜ., நிர்வாகியும், முன்னாள் மேயருமான கராத்தே தியாகராஜன் வீட்டில் அமைக்கப்பட்டு இருந்த பிரமாண்டமான எல்.இ.டி., திரைகளில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.இந்நிகழ்ச்சியை, மாநில தலைவர் அண்ணாமலை, துணை தலைவர்கள் வி.பி.துரைசாமி, சக்கரவர்த்தி, எம்.என்.ராஜா, மாநில பொது செயலர் கரு.நாகராஜன் உட்பட, 1,500க்கும் மேற்பட்ட
பா.ஜ., நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பார்த்தனர்.
ஒளிபரப்பு
பின், அண்ணாமலை அளித்த பேட்டி:பிரதமர் மோடி வானொலியில் பேசிய மனதின் குரல் நிகழ்ச்சி, தமிழகம் முழுதும் 15 ஆயிரம் இடங்களில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இந்த ஆண்டின் இறுதி நிகழ்ச்சி என்பதால், சென்னையில் திருவிழா போல நடத்தப்பட்டுள்ளது.தமிழகத்தில் நான்கு மாதங்களில், பல கொலைகள் உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் நடந்துள்ளன. தி.மு.க., மாவட்ட செயலர் களால் சட்டம் - ஒழுங்கு சீர்குலைய ஆரம்பித்துள்ளது. இதை, உடனே
கட்டுப்படுத்த வேண்டும்.
தமிழக காவல்துறை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும்.'நீட்' தேர்வால் தான், ஏழை மாணவர்களுக்கு அரசு மருத்துவ கல்லுாரிகளில் இடம் கிடைத்துள்ளது. தமிழகத்தில் சில கட்சிகளுக்கு வேலையே இல்லை. சில கட்சிகள், தி.மு.க., என்ற கட்டுமரத்தை கெட்டியாக பிடித்து, கடலில் சென்று தத்தளித்து தப்பிக்க நினைக்கின்றன.
![]()
|
திணிக்கக் கூடாது
நாடு முழுதும் மோடி அலை வீச ஆரம்பித்து விட்டது. வரும், 2024ல் 400 எம்.பி.,க்களுடன் மூன்றாவது முறையாக மோடி தான் பாரத பிரதமராவார். அதன் தாக்கம் தான் தற்போது தெரிகிறது.இதனால், மம்தா கூட செல்லலாமா; தி.மு.க., உடன் போகலாமா என்று சிலர் பார்க்கின்றனர். அவர்கள் மோடிக்கு எதிரான பிரசாரம் செய்தாலும், பா.ஜ., அணி தான் வெற்றி பெறும்.தமிழகத்தில் இருந்து அதிக எம்.பி.,க்கள் சென்று, மத்திய அமைச்சர்களாக பதவி வகிப்பர். அப்போது, தமிழகம் அடுத்த கட்டத்திற்கு செல்லும்.
நாங்கள் இரண்டாவது, மூன்றாவது என எந்த அணியை பற்றியும் கவலைப்பட போவதில்லை. ஹிந்தி திணிப்பை பா.ஜ.,வும் எதிர்க்கிறது; எந்த மொழியையும் திணிக்கக் கூடாது என்பது தான் பா.ஜ.,வின் நிலைப்பாடு. புதிய கல்வி கொள்கை, கல்வியை அடுத்தகட்டத்திற்கு கொண்டு செல்லும்.இவ்வாறு அவர் கூறினார்.
மட்டன் பிரியாணி வஞ்சிரம் வறுவல்!
பா.ஜ., நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் தொண்டர்களுக்கு, சாம்பார் சாதம், தயிர் சாதம் போன்ற சைவ உணவு வகைகள் வழங்குவது வழக்கம். நேற்று நடந்த நிகழ்ச்சியில், திராவிட கட்சிகள் பாணியில், அனைத்து தொண்டர்களுக்கும் மட்டன் பிரியாணி, வஞ்சிரம் மீன் வறுவல், சிக்கன் குருமா, முட்டை, பிரட் அல்வா என தடபுடல் விருந்து வழங்கப்பட்டது. இதற்காக தனி சமையல் கலைஞர்களை அழைத்து வந்து, சுடச்சுட உணவுகள் பரிமாறப்பட்டன. தனியே சைவ உணவும் பரிமாறப்பட்டது.