வேலுார்: திருவலம் பாலத்தில் சீரமைப்பு பணிகள் முடிந்த நிலையில், மீண்டும் ரயில்கள் இயக்கப்பட்டது.
வேலுார் மாவட்டம், திருவலத்தில் பொன்னையாற்றின் குறுக்கே, 1865ல் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட ரயில்வே மேம்பாலத்தில், 38, 39வது துண் பகுதியில் கடந்த 23 ம் தேதி விரிசல் ஏற்பட்டது. இதனால், பாலத்தில் ரயில் இயக்கப்படுவது நிறுத்தப்பட்டது. அருகில் உள்ள மற்றொரு ரயில் பாலத்தை ஒரு வழிப்பாதையாக மாற்றி, ரயில்கள் இயக்கப்பட்டது. அந்த பாலத்திலும் கடந்த 26ல் வரை ரயில்கள் ரத்து செய்யப்பட்டதால் முன்பதிவு செய்திருந்த பயணிகள் அவதிக்குள்ளாயினர்.
ரயில்வே ஊழியர்கள் 38, 39வது துாண்களில் ஏற்பட்ட விரிசலை சரி செய்த போது, பாலத்தின் அடியில் 10 அடிக்கு மேலாக பள்ளங்கள் ஏற்பட்டது. இதனால் ஜல்லி கற்கள், மணல் மூட்டைகள் அடுக்கி பள்ளங்கள் சமன்படுத்தப்பட்டது. சென்ட்ரிங் பொருத்தி விரிசல் ஏற்பட்ட பகுதிகளை இரும்பு பிளோட்டால் சீரமைக்கப்பட்டது. அப்போது 21, 22 வது துாண்களிலும் ஏற்பட்ட விரிசல் சரி செய்யப்பட்டது. நான்கு நாட்கள் நடந்த பராமரிப்பு பணிகள் முடிந்த நிலையில், நேற்று நள்ளிரவு 12:00 மணிக்கு ரயில் என்ஜின் மட்டும் இயக்கி பரிசோதித்தனர்.

பிறகு 40 காலி பெட்டிகளுடன் சரக்கு ரயில் இயங்கி சோதனை ஓட்டம் நடந்தது. அதில் திருப்தி ஏற்பட்டதால், தென்னக ரயில்வே சென்னை கோட்ட மேலாளர் கணேஷ் தலைமையில் கணபதி ஹோமம் செய்து ரயில்கள் இயக்க அனுமதி அளிக்கப்பட்டது. இன்று காலை ராணுவ வாகனம் ஏற்பட்டப்பட்ட சரக்கு ரயில் சென்றது. தொடர்ந்து சென்னையில் இருந்து கோவைக்கு செல்லும் சபாப்தி, பெங்களூரு செல்லும் டபுள் டக்கர் என வரிசையாக ரயில்கள் சென்றன.
இது குறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: சீரமைக்கப்பட்ட திருவலம் பாலத்தின் மீது 10 கி.மீ., வேகத்தில் ரயில்கள் இயக்கப்படும். இரண்டு தொழில் நுட்ப குழுவினர் பாலத்தை 24:00 மணி நேரமும், தொடர்ந்து 45 நாட்கள் கண்காணிப்பார்கள். செஸ் மீட்டர் என்ற கருவியின் மூலம் பாலத்தில் ரயில்கள் செல்லும் போது அதிர்வுகள் கண்காணிக்கப்படும்.
அதிர்வுகள் அதிகரித்தால் உடனடியாக பாலத்தில் ரயில்கள் செல்வது நிறுத்தப்படும். 56 துாண்கள் உடைய இந்த ரயில்வே பாலத்தின் நீளம் 511 மீட்டர். பாலத்தின் அடியில் அதிகளவு மணல் அள்ளப்பட்டதால் வெள்ளத்தில் தண்ணீரில் ஊறி மணல் அரிப்பு ஏற்பட்டதும் விரிசலுக்கான காரணம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
ரத்து:
ஜோலார்பேட்டை- சென்னை ஏலகிரி எக்ஸ்பிரஸ், வேலுார் கன்ட்டோமண்ட்- சென்னை கடற்கறை மின்சார யூனிட் ரயில், திருவனந்தபுரம்- சென்னை எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
மாற்றி அனுப்பல்:
கேரளா, பெங்களூரு பகுதியில் இருந்து சென்னைக்கு சென்ற 40க்கும் மேற்பட்ட சரக்கு ரயில்கள், காட்பாடி, ரேணிகுண்டா, அரக்கோணம் மார்க்கத்தில் திருப்பிவிடப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE