புதுடில்லி: காலையில் பேரணி, இரவு ஊரடங்கால் என்ன பயன் என்று உ.பி., அரசுக்கு பா.ஜ., எம்.பி., வருண் கேள்வி எழுப்பி உள்ளார்.
பா.ஜ.,வை சேர்ந்த எம்.பி., வருண் தொடர்ந்து பல காலமாக கட்சிக்குள் உள்ள தவறுகளை அவ்வப்போது சுட்டிக்காட்டி வருகிறார். அவரது இந்த செயலுக்கு ஆதரவும் எதிர்ப்பும் ஒருங்கே இணைந்து வருவது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் ஒமைக்ரான் தாக்கம் இந்தியாவில் அதிகரித்து வருவதை அடுத்து இந்தியாவின் பல்வேறு மாநில அரசுகள் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் மும்பை, உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் பாதுகாப்பு கருதி இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

அடுத்த ஆண்டு உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட ஏழு மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதனை அடுத்து பல்வேறு மாநிலங்களில் போட்டியிடும் மத்திய பா.ஜ., அரசு, காலையில் தொண்டர்களுடன் திரளாக அரசியல் பேரணி நடத்தி வருகிறது. உத்தரப்பிரதேசத்தில் இம்முறை யோகி ஆதித்யநாத் தனது ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ள தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறார். இதனையடுத்து தற்போது பிரசாரம் தீவிரம் அடைந்து உள்ளது. இது குறித்து வருண் கேள்வி எழுப்பியுள்ளார்.
காலை துவங்கி மாலை வரை ஆயிரக்கணக்கானோர் ஒன்றுகூடும் பேரணி நடத்திவிட்டு இரவு ஊரடங்கு அமல்படுத்துவதால் என்ன பயன் என்று அவர் யோகி அரசிடம் கேள்வி எழுப்பியுள்ளது விவாதத்துக்கு உள்ளாகியுள்ளது.