''போலீஸ் ஸ்டேஷன் பக்கத்துலயே கள்ளச்சந்தையில சரக்கு விற்குறாங்க பா...'' என்றபடியே பெஞ்சில் அமர்ந்தார், அன்வர்பாய்.
''என்னங்க சொல்லுறீங்க...'' எனக் கேட்டபடியே, நாயர் கொடுத்த இஞ்சி டீயை உறிஞ்சினார், அந்தோணிசாமி.
''தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி மற்றும் எட்டிமரத்துப்பட்டியில் இருந்த 'டாஸ்மாக்' கடைகளை கொஞ்ச வருஷத்துக்கு முன்னாடி மூடிட்டாங்க பா...
''இதனால் அந்த பகுதியில கள்ளச்சந்தையில சரக்கு விற்பனை கனஜோரா நடக்குதுங்க... போலீசாரின், 'ஆசியோட' எந்நேரமும் கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்றாங்க பா...
''இதுல என்ன கொடுமைன்னா, அதியமான்கோட்டை போலீஸ் ஸ்டேஷன் பக்கத்துலையே கள்ளச்சந்தையில மது விற்குறது தான்...
''போலீசாருக்கு இன்னும் கொஞ்சம் கூடுதலாக லஞ்சம் கொடுத்தால், ஸ்டேஷனிலேயே விற்கலாமுன்னு, அப்பகுதி மக்கள் சொல்லுறாங்க பா...'' என விளக்கினார், அன்வர்பாய்.
''எப்போதும், 'மீட்டிங்' நடந்துகிட்டே இருந்தா, வேலை எப்போ பார்க்குறது வே...'' என்றபடியே அடுத்த தகவலுக்கு மாறினார், அண்ணாச்சி.
''விஷயத்தை சொல்லுங்க பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.
''தமிழக தொழில் முன்னேற்ற நிறுவன திட்டங்கள் குறித்து, தொழில் துறை செயலருடன் ஆலோசனை நடத்துறதுக்காக, 'சிப்காட்' நிர்வாக இயக்குனர், பொது மேலாளர்கள் அடிக்கடி தலைமைச் செயலகம் போறாவ வே...
''வாரத்துல மூணு நாட்கள், தலைமைச் செயலகத்துக்கு போறதால, அலுவலக பணி பாதிக்குதுன்னு, ஊழியர்கள் புலம்புறாவ வே...
''தொழில் துவங்க நிலம் கேட்டு வர்ற தொழில் துறையினரும், அதிகாரிகளை சந்திக்க முடியாமல் ரொம்ப நாள் காத்திருக்காவ வே...
''இதே போல தொழில் வழிகாட்டி நிறுவனம், தகவல் தொழில்நுட்பத் துறை என, தொழில் துறைக்கான அனைத்து உயர் அதிகாரிகளும், தலைமைச் செயலகத்துக்கு அடிக்கடி போறதால, அன்றாடப் பணி ரொம்ப பாதிக்குதுன்னு குற்றச்சாட்டு வருது வே...'' என முடித்தார், அண்ணாச்சி.
''தலைமைச் செயலர் உத்தரவு காத்துல பறக்கறது ஓய்...'' என கடைசி தகவலுக்கு மாறிய குப்பண்ணாவே தொடர்ந்தார்...
''பேரூராட்சி நிர்வாகத்துல ஒளிவுமறைவற்ற நிர்வாகத்தை ஏற்படுத்தணுமுன்னு, வளர்ச்சிப் பணிக்கு தேவையான, 5 லட்சம் ரூபாய்க்கும் அதிகமான மதிப்புல பொருட்களை வாங்கும் போது, 'டெண்டர்' அடிப்படையில தான் வாங்கணுமுன்னு, தலைமை செயலர் உத்தரவு போட்டிருந்தார் ஓய்...
''இதுதொடர்பாக, அனைத்து பேரூராட்சிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியிருந்தார்... ஆனால் கோவை, திருப்பூர், நீலகிரி உள்ளிட்ட பல மாவட்டங்கள்ல இருக்கற பேரூராட்சிகள்ல இந்த உத்தரவை மதிக்கறது இல்லையாம் ஓய்...
''கொசுமருந்து, 'மோட்டார், டைமர் சுவிட்ச்' ஆகியவற்றை டெண்டர் இல்லாமலே, குறிப்பிட்ட சில நிறுவனங்கள்கிட்ட வாங்கியிருக்கா ஓய்...
''இதுல முக்கியமான விஷயம் என்னன்னா, இந்த நிறுவனங்கள் தான், கடந்த அ.தி.மு.க., ஆட்சியிலும் அந்த பொருட்களை சப்ளை செஞ்சது ஓய்...
''ஆட்சி மாறியும், காட்சி மாறலை... தலைமை செயலரின் உத்தரவும் காத்துல பறக்கறது ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா.நண்பர்கள் கிளம்ப, பெஞ்ச் அமைதியானது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE