சீனா மூலம் இலங்கை தமிழர்களுக்கு ஆபத்து? | Dinamalar

சீனா மூலம் இலங்கை தமிழர்களுக்கு ஆபத்து?

Updated : டிச 29, 2021 | Added : டிச 27, 2021 | கருத்துகள் (63) | |
இலங்கை தமிழர்களை பகடையாக்கி, அந்நாட்டை வெற்றி கொள்ளவும்; பொருளாதார ரீதியாகவும், ராணுவ ரீதியாகவும் இந்தியாவுக்கு நெருக்கடி கொடுத்து, 2050க்குள் உலகிலேயே மிகப்பெரிய வல்லரசாக மாறவும், சீனா திட்டமிட்டிருப்பது தெரிய வந்துள்ளது. இலங்கையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் யாழ்ப்பாணம் பகுதியை, ஹாங்காங் போல மாற்றவும், அந்நாட்டு மீனவர்கள் இந்திய கடல் பகுதியில் சுதந்திரமாக மீன்
 சீனா , இலங்கை தமிழர்கள், ஆபத்து

இலங்கை தமிழர்களை பகடையாக்கி, அந்நாட்டை வெற்றி கொள்ளவும்; பொருளாதார ரீதியாகவும், ராணுவ ரீதியாகவும் இந்தியாவுக்கு நெருக்கடி கொடுத்து, 2050க்குள் உலகிலேயே மிகப்பெரிய வல்லரசாக மாறவும், சீனா திட்டமிட்டிருப்பது தெரிய வந்துள்ளது.

இலங்கையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் யாழ்ப்பாணம் பகுதியை, ஹாங்காங் போல மாற்றவும், அந்நாட்டு மீனவர்கள் இந்திய கடல் பகுதியில் சுதந்திரமாக மீன் பிடிக்கும் வசதியை ஏற்படுத்தி கொடுக்கவும், சீனா தயாராகி வருகிறது. இது குறித்து பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோருக்கு, தேசிய பாதுகாப்பு ஆலோசகரான அஜித் தோவல் விளக்கி உள்ளார். இலங்கைக்கான இந்திய துாதர் கோபால் பாக்லே, தமிழகம் மற்றும் புதுச்சேரி கவர்னர்களிடமும் இது குறித்து தெரியப்படுத்தி உள்ளார்.


இலங்கையில் விடுதலை புலிகள் மற்றும் ராணுவத்திற்கு இடையே நடந்த போர், ௨௦௦௯ல் முடிந்ததும், தமிழர்கள் தனித்து விடப்பட்டனர். அவர்களுக்கான மறு வாழ்வு குறித்து, அடுத்தடுத்து அரசு அமைத்த ஆட்சியாளர்கள் பெரிய அளவில் கவலைப்படவில்லை. அதனால், தமிழர்கள் பலரும் வெளிநாடுகளில் தஞ்சம் அடைந்தனர். தற்போது, 10 ஆயிரம் தமிழக குடும்பங்கள் மட்டுமே, இலங்கையில் உள்ளன.இலங்கை அரசானது, பொருளாதார ரீதியாக மிகப்பெரிய அளவில் சீனாவை சார்ந்து உள்ளது. இதை வசதியாக பயன்படுத்திக் கொள்ளும் சீனா, இலங்கையை மேம்படுத்துவதாகக் கூறி, சாலைகள், மேம்பாலங்கள் அமைத்து, வர்த்தகத்தை கைக்குள் போட்டுள்ளது. மிகப் பெரிய துறைமுகத்தையும் கட்டியுள்ளது.இந்தியாவை சுற்றி ஆப்கானிஸ்தான் வழியே, பாகிஸ்தான் வரை மிக நீண்ட சாலை அமைத்துள்ள சீனா, இந்தியாவின் கிழக்கு பகுதியில் இலங்கையை வசமாக்கி வருவதால், இந்தியாவுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.இலங்கை முழுதும் தன்வசமாகி விட்டால், யாழ்ப்பாணம் நகரை ஹாங்காங் போல மேம்படுத்தி, அரசு அமைக்க சீனா திட்டமிட்டுள்ளது.

அதற்காக, இலங்கை தமிழர்களுக்கு வாழ்வாதாரம் ஏற்படுத்தி, அவர்களுக்கு சீன மொழியான மாண்டரினை கற்றுத் தந்து, சகல வசதிகளையும் செய்து கொடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இவர்களை வைத்தே, நாளடைவில் இலங்கை அரசை கைப்பற்ற முடிவு செய்துள்ளது.இலங்கை மீனவர்களை இந்திய எல்லைக்குள் சகஜமாக மீன்பிடிக்க அனுப்பி வைத்து, நமக்கு மண்டைக் குடைச்சல் ஏற்படுத்தவும் தீர்மானித்துள்ளது. இந்த திட்டத்திற்கு அடிபணியாதவர்களை, இலங்கையை விட்டே துரத்தும் நடவடிக்கையில் ஈடுபடவும் ரகசிய திட்டம் தீட்டி வருகிறது.

சமீப காலமாக, மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் திடீரென காணாமல் போவதும், இலங்கையால் சிறை பிடிக்கப்படுவதும் அதிகரித்து வருகிறது. இது, இலங்கை அரசு வாயிலாக சீனாவின் மறைமுக மிரட்டலாக இருக்கலாமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.மேலும், தமிழகத்தின் ராமேஸ்வரம் பகுதியில், சீன துாதர், அதிகாரிகள் என சிலரின் நடமாட்டம் அடிக்கடி தென்படுவதை, தமிழக மீனவர்களும் சுட்டிக் காட்டி வருகின்றனர்.இவ்விஷயங்கள் அனைத்தையும் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோருக்கு, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் விளக்கி இருக்கிறார்.
இலங்கைக்கான இந்திய துாதர் கோபால் பாக்லே, புதுச்சேரி மற்றும் தமிழக கவர்னர்களுக்கும், தமிழக முதல்வருக்கும் இது குறித்து தெரிவித்துள்ளார்.

எனவே, இலங்கை வாழ் தமிழர்களின் நலனை பாதுகாக்கவும், அவர்கள் அங்கு நிம்மதியாக வாழவும், நம் பார்லிமென்ட்டில் தமிழக எம்.பி.,க்களும், அடுத்து வரும் சட்டசபை அமர்வுகளில் எம்.எல்.ஏ.,க்களும் விவாதம் நடத்தி, சீனாவின் முயற்சிகளை முறியடிக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.இதற்கு வழிகோலும் வகையில், தமிழக கவர்னர் வரும் 5ம் தேதி துவங்க உள்ள சட்டசபை கூட்டத்தில், இது குறித்து முதல் உரை நிகழ்த்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. - புதுடில்லி நிருபர் -

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X