சென்னை : ""ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜிவ் நினைவிடத்துக்கு, 800 கோடி ரூபாயில் ரயில் சேவை துவங்கப்படும்,'' என, மத்திய ரயில்வே இணையமைச்சர் முனியப்பா தெரிவித்தார். தமிழக காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில், "வெள்ளையேனே வெளியேறு' தியாகிகள் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதில் பங்கேற்று அமைச்சர் முனியப்பா பேசியதாவது: சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜிவ் காந்தி நினைவிடத்திற்கு, பொதுமக்கள் சென்று வரும் வகையில், ரயில் சேவை துவங்கப்பட வேண்டும் என, தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு கோரினார். அவரது கோரிக்கை ஏற்கப்படும்.சென்னை ஆவடியில் இருந்து, ஸ்ரீபெரும்புத்தூர் வழியாக கூடுவாஞ்சேரி வரை, புதிய ரயில் பாதை அமைக்க, 800 கோடி ரூபாய் செலவில் புதிய திட்டம் தயாராகி உள்ளது. அதற்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.மாநில அரசு, நிலங்களை கையகப்படுத்தி கொடுத்தால், விரைவில் இந்த திட்டம் நிறைவேற்றப்படும். மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட்டால், அந்த மாநிலம் வேகமாக வளர்ச்சியடையும். இந்த திட்டத்தை அமல்படுத்த, தமிழக அரசு ஒத்துழைக்க வேண்டும்.இவ்வாறு முனியப்பா பேசினார்.தங்கபாலு பேசியதாவது: வெள்ளையர் ஏகாதிபத்தியத்தை ஓட ஓட விரட்டிய இயக்கம் காங்கிரஸ். இன்று சோனியா தலைமையில், பல மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. எத்தனை பதவிகள் வந்தாலும் அதை எல்லாம் ஏற்காமல் நாட்டு மக்களுக்கு உழைப்பவர் சோனியா. சென்னை ஆவடியில் இருந்து, ஸ்ரீபெரும்புத்தூர் வழியாக கூடுவாஞ்சேரி வரை, புதிய ரயில் சேவை துவக்க வேண்டும் என, ரயில்வே அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தேன். இந்த கோரிக்கையை, மத்திய ரயில்வே இணையமைச்சர் முனியப்பா ஏற்று, ரயில்வே அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தி, இந்த திட்டத்தை செயல்படுத்த உத்தரவிட்டுள்ளார். இத்திட்டத்திற்கு மத்திய, மாநில அரசுகளின் நிதியுதவி தேவை. தற்கு முதல்வர் முழு ஒத்துழைப்பு தர வேண்டும். இவ்வாறு தங்கபாலு பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE