பார்லிமென்ட் முடக்கம் தீர்க்க காங்கிரஸ் குழு ஆலோசனை

Added : ஆக 11, 2011
Share
Advertisement

புதுடில்லி : எதிர்க்கட்சிகளின் ரகளை காரணமாக, இரண்டு நாட்களாக பார்லிமென்ட் முடங்கியுள்ளது குறித்தும், அதை முறியடிக்க பின்பற்ற வேண்டிய செயல் திட்டங்கள் குறித்தும் காங்கிரஸ் உயர்மட்டக் குழு நேற்று ஆலோசனை நடத்தியது. பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில், மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி, உள்துறை அமைச்சர் சிதம்பரம், ராணுவ அமைச்சர் அந்தோணி, சோனியாவின் அரசியல் ஆலோசகர் அகமது படேல், பார்லிமென்ட் விவகார அமைச்சர் பவன்குமார் பன்சால் ஆகியோர் பங்கேற்றனர். கடந்த 1ம் தேதி பார்லிமென்ட் துவங்கியது முதல், லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில் பாதிக்கும் மேற்பட்ட நேரம், எம்.பி.,க்களின் அமளி மற்றும் ரகளையால் வீணாகிவிட்டது. இதனால், குறைந்தபட்சம் 30க்கும் மேற்பட்ட மசோதாக்களை நிறைவேற்றுவது உட்பட, ஏராளமான சபை அலுவல்கள் நிலுவையில் உள்ளன. அதனால், எதிர்க்கட்சியினரின் ஒத்துழைப்பு இல்லாமல் இந்த மசோதாக்களை நிறைவேற்றுவது உட்பட பல விஷயங்கள் குறித்தும் உயர்மட்டக் குழு கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
துணை முதல்வர் பதவி கிடையாது: கர்நாடக முதல்வர் திட்டவட்டம்புதுடில்லி : ""கர்நாடகாவில் துணை முதல்வர் பதவியை உருவாக்குவதற்கான வாய்ப்பு இல்லை. அதேபோல், லோக் ஆயுக்தாவால் குற்றம் சுமத்தப்பட்ட ரெட்டி சகோதரர்களுக்கு அமைச்சரவையில் மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படாது,'' என, அம்மாநில புதிய முதல்வர் சதானந்த கவுடா கூறியுள்ளார். கர்நாடக முதல்வராக பதவியேற்ற பின், முதன்முறையாக டில்லி வந்த அவர், நிருபர்களிடம் கூறியதாவது: எங்களது கட்சியில், மத்திய தலைமையும் உண்டு; மாநில தலைமையும் உண்டு. அனைத்து பிரச்னைகளிலும் நானே முடிவெடுக்க முடியாது. கட்சியின் மத்திய தலைமை பிறப்பிக்கும் உத்தரவுகள், மாநில தலைமையுடன் கலந்து ஆலோசித்த பின்னர் அமல்படுத்தப்படும். பா.ஜ., ஆளும் மாநிலங்கள் எதிலும், துணை முதல்வர் பதவி கிடையாது. அதனால், கர்நாடகாவிலும் துணை முதல்வர் பதவி இருக்காது. சுரங்க ஊழல் பிரச்னையில், லோக் ஆயுக்தாவால் குற்றம் சுமத்தப்பட்ட ரெட்டி சகோதரர்கள், மீண்டும் மாநில அமைச்சரவையில் சேர்த்துக் கொள்ளப்படுவதற்கான வாய்ப்பு இல்லை. முதல்வர் பதவிக்கு எனக்கு எதிராக போட்டியிட்ட ஜெகதீஷ் ஷெட்டார் உடனான பிரச்னைகள், சுமுகமாகத் தீர்க்கப்படும். அடுத்த 15 நாட்களில் அமைச்சரவை விஸ்தரிக்கப்படும். இவ்வாறு சதானந்த கவுடா கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X