சென்னை : 'ரஜினி அறக்கட்டளை துவக்கம் சிறிய ஆரம்பம் மட்டுமே; இறுதியில் மகத்தான மாற்றத்திற்கு வழிவகுக்கும்' என ரஜினி ரசிகர் மன்றம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஜினி ரசிகர் மன்றத்தின் அறிக்கை: ரஜினி அறக்கட்டளையும், அதன் இணையதளமும் டிச., 26ல் துவக்கப்பட்டது. ஏழைகள் மற்றும் விளிம்பு நிலை மக்களின் கல்வியை மேம்படுத்த, இந்த அறக்கட்டளை ரஜினியால் துவக்கப்பட்டுள்ளது.கல்வி மேம்பாட்டின் வாயிலாக முற்போக்கான சிந்தனை, தலைமைத்துவம், அறிவியல் மனப்பான்மை, நிலையான பொருளாதார அமைப்பு ஆகியவற்றை கட்டமைக்க உருவாக்கப்பட்டது.

எங்களுக்கு உலகளாவிய பார்வை இருந்தாலும், எங்களின் ஆரம்ப முயற்சியை, தமிழகத்தில் மட்டுமே எடுக்க விரும்புகிறோம். தமிழக மக்களின் கருணையும், அன்பும் தான் ரஜினிக்கு இவ்வளவு பெயர், புகழை பெற்று தந்தது. நம் அறக்கட்டளை சிறிய ஆரம்பம். அடுத்து நிலையான முயற்சி; சுய திருத்தம். இறுதியில் இதுவே மகத்தான மாற்றத்திற்கு வழிவகுக்கும் என்ற கருத்தை நம்புகிறோம்.
ரஜினி ஆசியுடன்,இலவச டி.என்.பி.எஸ்.சி; போட்டி தேர்வு பயிற்சிக்கான, 'சூப்பர் 100 பிரிவு'க்கான பதிவை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். அறக்கட்டளையின், www.rajinikanthfoundation.org/tnpsc.html என்ற இணைய முகவரி வாயிலாக பதிவு செய்யலாம். அறக்கட்டளையின் வழிகாட்டுதல் மற்றும் நிர்வாகத்தின் முக்கிய பொறுப்புகளை வழக்கறிஞர் ம.சத்யகுமார், ம.சூர்யா ஆகியோர் கவனிப்பர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE