லண்டன் : ஐரோப்பிய நாடான பிரிட்டனின் ராணி இரண்டாம் எலிசபெத்தை, 95, கொல்லப் போவதாக, சீக்கியர் ஒருவர் சமூக வலை தளத்தில் வெளியிட்டுள்ள 'வீடியோ' பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வீடியோ வெளியிட்ட சீக்கியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத், வின்ட்சர் கேசில் அரண்மனையில் தற்போது வசித்து வருகிறார். கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின்போது, 19 வயது வாலிபர் ஒருவர் அரண்மனைக்குள் நுழைய முயன்றதாக கைது செய்யப்பட்டார். அவரிடம், துாண்டிலுடன் இணைந்த வில் மற்றும் அம்பு இருந்தது.
மருத்துவப் பரிசோதனையில் அவருக்கு மனநோய் இருப்பதாக தெரியவந்துள்ளது. அதையடுத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், ராணியைக் கொல்லப் போவதாக சமூக வலை தளத்தில் ஒருவர் 'வீடியோ' வெளியிட்டுஉள்ளது தெரியவந்துள்ளது. தன்னை இந்திய சீக்கியர் என்று கூறும் அந்நபர் முகத்தை முழுதும் மறைத்துள்ளார்.

வீடியோவில் அவர் கூறி உள்ளதாவது: ஆங்கிலேயர் ஆட்சியின்போது, 1919ல் பஞ்சாபின் அமிர்தசரசில் உள்ள ஜாலியன்வாலா பாகில், சுதந்திரம் கேட்டு போராடியவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதற்கு பழிவாங்கும் வகையில், பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத்தை கொலை செய்ய உள்ளேன். அதற்காக என்னை மன்னிக்கவும். நான் ஒரு இந்திய சீக்கியர். என்னுடைய முந்தைய பெயர் ஜஸ்வந்த் சிங் சாயில். தற்போது என்னுடைய பெயர் டார்த் ஜோன்ஸ். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
இந்த வீடியோ வெளியானது மற்றும்மர்ம நபர் அரண்மனைக்குள் நுழைந்துள்ளது குறித்து, ஸ்காட்லாந்து போலீசார் விசாரித்து வருகின்றனர். அரண்மனைக்குள் நுழைய முயன்ற நபரின் வீட்டில் போலீசார் விசாரணை நடத்திஉள்ளனர். ராணியைக் கொல்லப் போவதாக கூறும், 'வீடியோ'வை அந்த இளைஞர் தன் சமூக வலை தள கணக்கில் பகிர்ந்துள்ளது தெரியவந்துள்ளது.
கைது
இந்த வீடியோவை வெளியிட்ட நபர் தற்போது பிரிட்டன் காவல் துறையால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இவர் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர்கள், தற்போது இந்த நபரை மருத்துவமனைக்கு அனுப்பி சிகிச்சை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE