சென்னை: ஸ்ரீபெரும்புதுார் சுற்றியுள்ள சிப்காட் தொழிற்சாலைகளில், சென்னை ரவுடிகளின் ராஜ்ஜியம் சமீபகாலமாக அதிகரித்து வருவதாக புகார் எழுந்துள்ளது. இதனால் தொழிலை நிம்மதியாக நடத்த முடியவில்லை என, தொழிற்சாலை நிர்வாகிகள் புலம்பி வரும் நிலையில், முதல்வர் ஸ்டாலின் இந்த விஷயத்தில் நேரடியாக கவனம் செலுத்தி, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார் அருகே இருங்காட்டுக்கோட்டை, பிள்ளைப்பாக்கம், வல்லம், ஒரகடம், ஸ்ரீபெரும்புதுார் ஆகிய ஐந்து சிப்காட் தொழிற் பூங்காக்களில், 1,200 தொழிற்சாலைகள் உள்ளன.
இங்கு ஆண்டிற்கு பல ஆயிரம் கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடக்கிறது. சென்னை துறைமுகம், விமான நிலையம், எண்ணுார் துறைமுகம் ஆகியவற்றில் நடைபெறும் சரக்கு போக்குவரத்தில், ஸ்ரீபெரும்புதுார் சுற்றியுள்ள தொழிற்சாலைகள் 60 சதவீதம் பங்கு வகிக்கின்றன.
கான்ட்ராக்ட்
இந்த பகுதிகளில் புதிய தொழிற்சாலைகள் வருகையை ஊக்குவிக்க, அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சாலைகளை விரிவாக்கம் செய்வதுடன், பிரத்யேக சாலைகளும் அமைக்கப்படுகின்றன.
கட்டுமானம், மின்சாரம், தளவாட பொருட்கள் எளிதாக கிடைக்க வழி செய்வது, உரிமம் பெறும் நடைமுறையை எளிதாக்குவது என, பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகிறது. மறுபுறத்தில், தொழிற்சாலைகளை நிம்மதியாக இயங்க விடாமல், பணியாளர் நியமனம் முதல், கழிவுப்பொருட்கள் கான்ட்ராக்ட் வரை எல்லா விஷயத்திலும் மூக்கை நுழைக்கும் ரவுடிகளின் அட்டகாசம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.
புதிய அரசு பொறுப்பேற்றதில் இருந்து, சென்னையில் கோலோச்சி வரும் சில ரவுடி கும்பல், ஸ்ரீபெரும்புதுார் சிப்காட் தொழிற்பேட்டையில் களம் இறங்கி இருப்பது, நிறுவனங்களுக்கு கூடுதல் தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.
சில அரசியல் கட்சி மற்றும் ஆளும்கட்சி பிரமுகர்கள் ஆதரவுடன், ஒவ்வொரு நிறுவனமாக செல்லும் சென்னை ரவுடி கும்பல், நிறுவனத்தின் முன்னணி நிர்வாகிகளை நேரடியாக சந்தித்து பேசுவதும், நிறுவனத்தின் ஒப்பந்த பணிகள், கழிவு எடுக்கும் ஒப்பந்தம் ஆகியவற்றை இனி தங்களுக்கு வழங்க வேண்டும் என்றும் மிரட்டுகின்றனர்.
நிர்ணயிக்கும் விலை
அமைச்சர், எம்.எல்.ஏ., - எம்.பி.,க்களின் பெயர்களை பயன்படுத்தி, 'அவர்கள் சொல்லி தான் நாங்கள் வந்திருக்கிறோம்' என பேசுவதால், நிறுவனத்தினரும் செய்வதறியாது தவித்து வருகின்றனர்.இதனால் போக்குவரத்து செலவு அதிகரித்தாலும் பரவாயில்லை என, தொழிற்சாலைகளை வேறு மாவட்டங்களுக்கு மாற்றலாமா என, இரண்டாம் நிலை தொழிற்சாலை உரிமையாளர்கள் சிலர் ஆலோசித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து பெயர் கூற விரும்பாத தொழிற்சாலை நிர்வாகி ஒருவர் கூறியதாவது:
ஸ்ரீபெரும்புதுார் சுற்றியுள்ள அனைத்து சிப்காட் தொழிற்சாலைகளிலும், ஒரு நிறுவனத்தில் கூட, உலகளாவிய டெண்டர், வெளிப்படையான டெண்டர் வாயிலாக எங்களால் எந்த ஒரு பணிகளையும் செய்ய முடியவில்லை.
உள்ளூர் ரவுடிகள், அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் அவர்களை சார்ந்தவர்களுக்கு, அவர்கள் நிர்ணயிக்கும் விலைக்கு தான் கட்டுப்பட வேண்டியுள்ளது.
மீறி உண்மையான வியாபாரிகளுக்கு 'ஆர்டர்' கொடுத்தால், வாகனங்களை வழிமறிப்பது, தொழிலாளர்களை துாண்டிவிட்டு பிரச்னை செய்வது,அரசு நிர்வாகங்கள் வாயிலாக விதிமீறல் போன்ற புகார்கள் கொடுத்து குடைச்சல் ஏற்படுத்துவது போன்றவற்றை கையாண்டு, வழிக்கு கொண்டு வருகின்றனர்.
உற்பத்தி பாதிக்கக் கூடாது என்பதற்காக, சில விஷயங்களில் உள்ளூர் பிரமுகர்களை அனுசரித்து சென்றோம். தற்போது சென்னையில் இருந்து சில ரவுடி கும்பல் புதிதாக வருகின்றனர்.ஏற்கெனவே உள்ளூர் ரவுடிகளை சமாளிக்க முடியாமல் திணறி வரும் நிலையில், இது புதிய பிரச்னையாக உள்ளது. தொழில் நடத்தவே சிரமமாக உள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.
என்ன செய்ய வேண்டும்?
தொழிற்சாலைகள் சுதந்திரமாக செயல்பட மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி தலைமையில் குழு அமைத்து கண்காணிக்க வேண்டும். தொழிற்சாலை டெண்டர்கள், நிர்வாகத்தில் அரசியல் பிரமுகர்கள் மற்றும் ரவுடிகள் தலையீடு இருந்தால், தொழிற்சாலைகள் ரகசியமாக இந்த குழுவிடம் புகார் அளிக்க வசதி ஏற்படுத்த வேண்டும்.பெறப்படும் புகார்களை நியாயமாக விசாரித்து, சம்பந்தபட்டவர்கள் மீது, அரசு இரும்புகரம் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே, தொழில் வளர்ச்சியில் தமிழகம் வெற்றி நடைபோட முடியும் என, சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
தப்பிக்கும் பெரிய நிறுவனங்கள்!
ஹூண்டாய், நிசான், டைம்லர், செயின்கோபைன் போன்ற பெரிய நிறுவனங்கள், மத்திய அமைச்சர்கள் மற்றும் முதல்வர் ஸ்டாலினுடன் நேரடி தொடர்பில் உள்ளனர். அந்த நிறுவனங்களை எல்லாம் ரவுடிகள் நெருங்குவது கிடையாது. இரண்டாம், மூன்றாம் நிலை தொழிற்சாலைகள் முதல் சிறு தொழிற்சாலைகள் வரை மற்ற அனைத்திலும் ரவுடிகள் தலையீடு உள்ளது. இவர்களுக்கு அரசின் மேல்மட்டத்தில் செல்வாக்கு இருப்பதில்லை என்பதால், ரவுடிகள் ஆட்டுவிக்கின்றனர்.
போராட்டத்தின் பின்னணி என்ன?
சமீபத்தில் ஸ்ரீபெரும்புதுார் சிப்காட் தொழிற்பூங்காவில் உள்ள பாக்ஸ்கான் தொழிற்சாலை பெண் ஊழியர்கள் தங்கியிருந்த விடுதியில், உணவு அருந்தியதில் உடல் நலக்குறவு ஏற்பட்டு 200க்கும் மேற்பட்ட பெண்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.
இதில், எட்டு பெண் ஊழியர்கள் இறந்ததாக வதந்தியை பரப்பினர்.இதன் பின்னணியிலும் இதுபோன்ற ரவுடி கும்பல் இருப்பதாக தெரியவந்துள்ளது. இந்த தொழிற்சாலையில் மாமுல் கிடைக்காததாலும், உணவு மற்றும் விடுதி ஒப்பந்தத்தை தற்போது நடத்தி வருபவரிடமிருந்து தட்டி பறிக்கும் நோக்கிலும், அப்பாவி ஊழியர்களை துாண்டிவிட்டு போராட்டத்திற்கு வழிவகுத்ததாக கூறப்படுகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE