அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் பேட்டி: முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி குற்றம் சாட்டப்பட்டவர் மட்டுமே; அவர் ஒரு குற்றவாளி இல்லை. குற்றம் சாட்டப்பட்டவர் ஒரு தேசத் துரோகி போல, தனிப்படைகள் அமைத்து எதற்கு தேடுகின்றனர் என்று தான் புரியவில்லை. அவர், அ.தி.மு.க.,வை சேர்ந்தவர் என்பதாலேயே, தி.மு.க., பழிவாங்குகிறது.
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்களில் ராஜேந்திர பாலாஜி தான், சங் பரிவார் கொள்கையுடன், சாமி, கோவில், குளம் என பக்திப்பழமாக இருந்தார். அவர் மீது தொடுக்கப்படும் நடவடிக்கைகள், அரசின் கொள்கையை பிரதிபலிக்கிறதோ?
மார்க்சிஸ்ட் மாநில செயலர் கே.பாலகிருஷ்ணன் பேட்டி: நாட்டின் உயர்ந்த ஜனநாயக அமைப்பான பார்லிமென்டிலேயே ஜனநாயகத்தை சீரழிக்கும் விதமாக, எவ்வித விவாதமும் இன்றி, தேர்தல் சீர்திருத்த சட்ட மசோதாவை மோடி அரசு நிறைவேற்றியுள்ளது.
நீங்கள் சொல்வது படி பார்த்தால், பார்லிமென்ட் துவங்கி, நாட்டின் அனைத்து மட்டங்களிலும் ஜனநாயகம் இல்லை என்பது தெளிவாகிறது. அப்படியானால், பிரதமரை குறைசொல்லும் உங்கள் பேட்டி, ஜனநாயகத்தில் சேராதா?
தமிழக காங்., செய்தி தொடர்பாளர் பீட்டர் அல்போன்ஸ் பேட்டி:பேரிடர் காலங்களில், பிற மாநிலங்களுக்கு மத்திய அரசு உதவுவது போல, தமிழகத்திற்கு உதவுவதில்லை. எனினும், மத்திய அரசுடன் இணக்கமாகத் தான், தமிழக அரசு செயல்படுகிறது.
மாநில அரசின் ஊதுகுழல்களாக ஏராளமான அமைச்சர்கள், தி.மு.க., பிரமுகர்கள், அதிகாரிகள் உள்ளனர். அவர்களுடன் நீங்களும் சேர வேண்டுமா... சார்ந்திருக்கும் கட்சிக்கு கொஞ்சமாவது விசுவாசமாக செயல்பட்டால், உங்கள் கட்சியாவது சற்று வளருமே!
தமிழக பா.ஜ., மூத்த தலைவர் எச்.ராஜா பேட்டி: தமிழகத்தில் தி.க., - தி.மு.க., கம்யூனிஸ்ட் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சிகளை எதிர்ப்பவர்கள் அனைவருமே தேசியவாதிகள் தான்.

நல்ல விளக்கம். அப்போ, பா.ஜ.,வுடன் சேர்ந்துள்ள, அ.தி.மு.க.,வும் தேசியவாதிகள் தானா... இதை அவர்கள் ஒப்புக் கொள்வரா?
தமிழக மார்க்சிஸ்ட் பிரமுகர் அருணன் அறிக்கை: 'பாகிஸ்தானுக்கு போனவர்கள் உள்ளிட்ட வேறு மதங்களுக்கு சென்ற அனைவரையும் ஹிந்து மதத்திற்கு திரும்பச் செய்ய வேண்டும்' என, கர்நாடக பா.ஜ., - எம்.பி., தேஜஸ்வி சூர்யா கூறுகிறார். இதன் வாயிலாக, கட்டாய மதமாற்றத்திற்கு அடிபோடுகின்றனர்; நாட்டை நாசமாக்க போகின்றனர்.
கம்யூ.,க்கள் சொல்வதில்லையா, 'இந்த நாட்டையே கம்யூனிஸ்ட் நாடாக ஆக்க வேண்டும்' என்று... அதுபோலத் தான், தேஜஸ்வியும் சொல்லி இருப்பார்!
தி.மு.க., இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி: கோவை மக்கள், சட்டசபை தேர்தலில் ஏமாற்றி விட்டனர். கோவையில், 10 தொகுதிகளில் ஐந்து தொகுதியிலாவது வெல்வோம் என நினைத்தோம். ஆனால், 10ல் ஒன்றில் கூட வெல்லவில்லை. அதுபோல, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஏமாற்றி விடாதீர்கள்.
ஏற்கனவே, தி.மு.க., அரசால், கோவை புறக்கணிக்கப்படுகிறது என பேசப்படுகிறது. இதில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும், தி.மு.க., தோல்வி அடைந்தால், கோவைக்கு பாதிப்பு படுபயங்கரமாக இருக்குமோ?
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE