கோவை: 'டிரோன்' எனப்படும் ஆளில்லா குட்டி விமானங்கள் இப்போது பரவலாக விற்பனைக்கு வந்து விட்டன. திருமண சுப காரியங்களுக்கு போட்டோ, வீடியோ எடுப்பவர்கள் முதல் ஊர்வலம், ஆர்ப்பாட்டம் நடத்தும் அரசியல் கட்சியினர், பொழுதுபோக்குக்காக படம் எடுப்பவர்கள் வரை, பலரும் 'டிரோன்' வாங்க ஆரம்பித்து விட்டனர்.
இவ்வாறு படம் எடுப்பதை ஒழுங்குபடுத்தும் நோக்கத்துடன் மத்திய அரசு, 'டிரோன்' விதிமுறைகளை இந்தாண்டு வெளியிட்டது. அதன்படி 'டிரோன்' உபயோகிப்பாளர்கள் அரசின் டிஜிட்டல் ஸ்கை இணையதளத்தில் பதிவு செய்து, பிரத்யேக பதிவு எண் பெற்றிருக்க வேண்டும்.
ரிமோட் பைலட் லைசென்ஸ் பெற்றவர் தவிர, வேறு எவரும் 'டிரோன்' இயக்கக்கூடாது என்றும் விதிமுறைகள் உள்ளன. 'டிரோன்' இயக்குவோர் பலருக்கும் அந்த விதிமுறைகள் தெரிவதில்லை.
இது குறித்து கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பிரதீப் குமார் கூறியதாவது:
'டிரோன்' இயக்குவோர் செய்யக்கூடியவை என்ன, செய்யக்கூடாதவை என்ன, எந்தெந்த இடங்களில் 'டிரோன்' மூலம் படம் பிடிக்கலாம், எந்த இடங்களில் படம் பிடிக்கக்கூடாது. என்று தெளிவான விதிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன.
'டிரோன்' உபயோகிப்பாளர்கள் அனைவரும் கட்டாயம் அந்த விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். இது தொடர்பாக கோவை மாநகரில் 'டிரோன்' பயன்படுத்தும் அனைவரையும் அழைத்து ஒரு கூட்டம் நடத்தி, புதிய விதிமுறைகளை கடைபிடித்து நடக்குமாறு அறிவுரை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
கோவையில் பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் உள்ளன. அவற்றின் மீதும், அவற்றுக்கு அருகிலும் 'டிரோன்' பறக்க விடக்கூடாது. மீறினால் நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும்.
இவ்வாறு, கமிஷனர் தெரிவித்தார்.
'நேனோ'வுக்கு மட்டும் விலக்கு
டிரோன்களில் 250 கிராம் எடைக்கு குறைவானவை நேனோ, 250 கிராம் முதல் 2 கிலோ எடை வரையிலானவை மைக்ரோ, 2 கிலோ முதல் 25 கிலோ வரையிலானவை சிறிய டிரோன், 25 கிலோ முதல் 150 கிலோ வரையிலானவை நடுத்தர டிரோன், 150 கிலோவுக்கு மேற்பட்டவை பெரிய டிரோன் என சிவில் விமான போக்குவரத்துத் துறை இயக்குனரகம் வகைப்படுத்தியுள்ளது.
இவற்றில் நேனோ எனப்படும் 250 கிராம் எடைக்கு குறைவான டிரோன்களுக்கு மட்டும் லைசென்ஸ் அவசியமில்லை.
தடை விதிப்பு
கோவை மத்திய சிறை வளாகத்தில் அமைந்துள்ள சி.ஆர்.பி.எப்., முகாம் பாதுகாப்பு கருதி, 2 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு 'டிரோன்' கேமரா பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை மீறுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
விதிமுறைகள் சொல்வது என்ன?
டிரோன் இயக்குவது பற்றி உள்ளூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.மற்றவர்களின் அந்தரங்கத்தை படம் பிடிக்கக்கூடாது.
படம் எடுப்பதற்காக டிரோன் பறக்க விடுவதை பதிவு செய்ய வேண்டும். ஏதேனும் விபத்து, சம்பவங்கள் நேரிட்டால், உள்ளூர் போலீஸ், சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகத்துக்கு தெரிவிக்க வேண்டும்.
விமான நிலையங்கள் அருகே படம் பிடிக்கக்கூடாது.
பறக்க தடை விதிக்கப்பட்ட பகுதிகள் பற்றி அறிந்திருக்க வேண்டும். அங்கே எக்காரணம் கொண்டும் டிரோன் பறக்க விடக்கூடாது.
கண் பார்வையில் இருக்கும் வகையில் மட்டுமே டிரோன் பறக்க விட வேண்டும்.
பகல் வேளையில், வெளிச்சம் இருக்கும்போது மட்டுமே டிரோன் இயக்கப்பட வேண்டும்.
ஒவ்வொரு முறை டிரோன் பறக்கும்போதும், டிஜிட்டல் ஸ்கை தளத்தில் அனுமதி பெற வேண்டும்.ஆளில்லா விமான இயக்குனர் பர்மிட் பெற்றுக்கொள்ள வேண்டும். 'நோ பர்மிஷன் - நோ டேக் ஆப்' என்ற டிஜிட்டல் ஸ்கை உத்தரவுக்கு கீழ்படிந்து நடக்க வேண்டும்.அரசு வளாகங்கள், ராணுவ தளங்கள் மீதோ, அருகிலோ டிரோன் பறக்கக்கூடாது.தனியாரிடம் அனுமதி பெறாமல் அவர்களது கட்டடம், வளாகம் மீது டிரோன் பறக்கக்கூடாது.நகரும் வாகனத்தில் இருந்தபடி டிரோன் இயக்குதல் கூடாது.மக்கள் கூட்டம், பொது நிகழ்ச்சிகளில் அனுமதி பெறாமல் டிரோன் இயக்குதல் கூடாது.