புதுடில்லி: காங்கிரஸ் கட்சியின் 137 வது நிறுவன தினத்தை முன்னிட்டு டில்லியில் நடந்த விழாவில், கட்சி கொடியை அக்கட்சி தலைவர் சோனியா ஏற்றினார். அப்போது, கொடி அறுந்து, அவரது கைகளிலேயே விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மீண்டும் கொடியை ஏற்றும் முயற்சி வெற்றி பெறாததால், கொடியை மடித்து எடுத்து சென்றனர்.
காங்கிரசின் 137 வது நிறுவன தினம் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் கட்சி அலுவலகங்களில் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. டில்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் நடந்த விழாவில், இடைக்கால தலைவர் சோனியா கட்சி கொடியை ஏற்றினார். அப்போது கட்சிக்கொடி அறுந்து அவரது கைகளிலேயே விழுந்தது. தொடர்ந்து அங்கிருந்த சிலர் மீண்டும் கொடியை ஏற்ற முயன்ற போதும் அது சாத்தியமாகவில்லை. இதனையடுத்து கட்சி கொடியை எடுத்து சென்றனர்.

இந்த விழாவில், ராகுல், பிரியங்கா, மல்லிகார்ஜூனா கார்கே உள்ளிட்ட பல தலைவர்கள் கலந்து கொண்டனர்.
வரலாறு பொய்யாக்கப்படுகிறது
காங்கிரசின் 137வது நிறுவன தினத்தையொட்டி காங்., தலைவர் சோனியா வெளியிட்ட காணொலி வீடியோவில் கூறியதாவது: இன்று இந்தியாவின் வலுவான அடித்தளத்தை பலவீனப்படுத்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வரலாறு பொய்யாக்கப்படுகிறது. நாட்டின் கங்கை யமுனை கலாசாரத்தை அழிக்க அருவருப்பான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

வரலாற்றை மாற்றி எழுதுகிறார்கள். அவை உணர்ச்சிகளைத் தூண்டி, பயத்தை உண்டாக்கி, பகைமையை பரப்புகின்றன. நமது பாராளுமன்ற ஜனநாயகத்தின் மிகச்சிறந்த மரபுகள் திட்டமிட்டு சேதப்படுத்தப்படுகின்றன. இது போன்ற நேரங்களில் காங்கிரஸ் அமைதியாக இருக்காது. நாட்டின் பாரம்பரியத்தை அழிக்க யாரையும் அனுமதிக்க மாட்டோம். ஜனநாயக பாதுகாப்பிற்காக சமூக விரோத சக்திகளுக்கு எதிராக அனைத்து போராட்டங்களையும் மேற்கொள்வேன். இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE