கான்பூர்: கான்பூர் மெட்ரோ ரயில் திட்டத்தை துவக்கி வைத்து, ரயிலில் கங்கை நதிக்கரையில் பயணம் மேற்கொண்டார். அவருடன் உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத், மத்திய அமைச்சர் ஹர்தீப்சிங்புரி உடன் சென்றனர்.

உ.பி., மாநிலம் கான்பூரில் கங்கை நதிக்கரையோரம் சுமார் 32 கி.மீ., தூரம் கொண்ட மெட்ரோ ரயில் திட்டம் நிறைவேற்றப்பட்டது. 2 கட்டங்களாக நிறைவேற்றப்பட்ட இந்த திட்டத்தின் மதிப்பு 11 ஆயிரம் கோடி ரூபாய் ஆகும். வரும் 2024ம் ஆண்டில், தினமும் 6 லட்சம் பேர், இந்த மெட்ரோ ரயில் சேவையை பயன்படுத்துவார்கள் என கணக்கிடப்பட்டுள்ளது.

மெட்ரோ ரயில் சேவையை துவக்கி வைத்த பின்னர் மோடி, ஐஐடி.,யில் இருந்து கீதாநகர் வரை 9 கி.மீ., தூரம் பயணம் மேற்கொண்டார். அவருடன் முதல்வர் யோகி ஆதித்யநாத் , பாதுகாப்பு அதிகாரிகள் உடன் சென்றனர்.

ஸ்டார்ட் அப் மையம்
முன்னதாக கான்பூர் ஐ.ஐ.டி.,யில் நடந்த பட்டமளிப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: கான்பூருக்கு இன்று இரட்டிப்பு மகிழ்ச்சி கிடைத்துள்ளது.

ஒரு புறத்தில், கான்பூருக்கு மெட்ரோ ரயில் வசதி கிடைத்த நிலையில், மற்றொருபுறம், ஐஐடி கான்பூரில் இருந்து தொழில்நுட்ப உலகிற்கு விலை மதிக்க முடியாத பரிசு கிடைத்துள்ளது.

ஐஐடி கான்பூரில் நீங்கள் இணைந்த முடியாத போது, அடையாளம் தெரியாத பயம் உங்களுக்கு இருந்திருக்கும். ஆனால், அதனை அகற்றி, உங்களுக்கு பல விஷயங்களை ஐஐடி கற்று கொடுத்துள்ளது. இன்று உலகத்தை ஆராய்வதற்கும், சிறந்த வற்றை தேடுவதற்குமான நம்பிக்கை உங்களுக்கு கிடைத்துள்ளது.

இந்தியா சுதந்திரம் அடைந்த 75 ஆண்டுகள் நிறைவு பெற்ற நிலையில், 1 பில்லியன் டாலருக்கு மேல் முதலீடு கொண்ட 75 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், 50 ஆயிரம் 'ஸ்டார்ட் அப் ' நிறுவனங்கள் உள்ளன. அவற்றில், 10 ஆயிரம் நிறுவனங்கள் கடந்த 6 மாதங்களில் துவங்கி உள்ளது. இன்று, உலகிலேயே 2வது ஸ்டார்ட் அப் மையமாக இந்தியா மாறி உள்ளது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
வளர்ச்சியை தடுத்த எதிர் கட்சி
கான்பூரில் நடந்த காஸ் பைப்லைன் விழாவில் பேசியதாவது: உபி வளர்ச்சிக்காக நாங்கள் கடுமையாக பாடுபட்டுள்ளோம். ஏழை மக்களுக்கு தண்ணீர், ரேஷன் எல்லாம் வழங்கி உள்ளோம். போக்குவரத்து, தொலைதொடர்பு, கட்டமைப்புகள் மேம்பட்டுள்ளன. ஏழைகளுக்கு இலவச காஸ் வழங்கியுள்ளோம். கடந்த ஆட்சியாளர்கள் உபி வளர்ச்சியை தடுத்தனர். சுயநலத்திற்காக கடந்த ஆட்சியாளர்கள் பணியாற்றினர். வளர்ச்சியே எங்களது நோக்கம்.