புதுடில்லி: இணை நோய் உள்ளவர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட டாக்டர்களின் மருத்துவ சான்று கட்டாயமில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. தடுப்பூசி போடும் முன்னர், அவர்கள் தங்களின் டாக்டர்களிடம் ஆலோசனை பெற்று கொள்ளும்படி கூறியுள்ளது.
கடந்த சனிக்கிழமை(டிச.,25) அன்று நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி, நாட்டில் 15 முதல் 18 வயது வரை உள்ளவர்களுக்கு ஜன., 3ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடப்படும். முன்கள பணியாளர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு 'பூஸ்டர் டோஸ்' எனப்படும் கூடுதல் தடுப்பூசி வரும் 10ம் தேதி முதல் போடப்படும். உலகின் முதல் மரபணு தடுப்பூசியும் விரைவில் அறிமுகமாக உள்ளது. 60 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் இணை நோயுள்ளவர்கள் டாக்டர்களின் பரிந்துரையை பெற்று பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என தெரிவித்தார்.

இந்நிலையில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், மாநில அரசுகளுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில் கூறப்பட்டு உள்ளதாவது:60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் இணை நோய் உள்ளவர்கள் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடும் போது, டாக்டர்களின் பரிந்துரை சீட்டு அளிப்பது கட்டாயம் இல்லை. அவர்கள், தடுப்பூசி போட்டு கொள்வதற்கு முன்னர், தங்களின் டாக்டர்களிடம் ஆலோசனை பெற்று கொள்ளலாம். தேர்தல் நடக்கும் மாநிலங்களில், தேர்தல் பணியில் ஈடுபட உள்ள பணியாளர்கள் முன்கள பணியாளர்கள் பிரிவில் சேர்க்கப்படுவார்கள். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டு உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE