சம்பளம் கிடைக்காமல் ஊராட்சி பணியாளர்கள் தவிப்பு!
''நாளுக்கு நாள் குளிரு அதிகமாகிகிட்டே இருக்கே பா...'' என்றபடியே நாயர் கொடுத்த இஞ்சி டீயை உறிஞ்சினார், அன்வர்பாய்.
''கோவையில, 'பூத் கமிட்டி' கூட்டத்தையே, மாநாடு மாதிரி நடத்தி காட்டியிருக்காங்க...'' என்றபடியே முதல் தகவலுக்கு வந்தார், அந்தோணிசாமி.
''எந்த கட்சிக்காரா ஓய்...'' எனக் கேட்டார் குப்பண்ணா.
''கொஞ்ச நாளைக்கு முன்னாடி, தமிழக அரசை கண்டிச்சு, அ.தி.மு.க.,வினர் ஆர்ப்பாட்டம் நடத்துனாங்க... அதுக்கு முன்னாடி, அக்கட்சி அலுவலகத்துல நடந்த ஆயத்தக் கூட்டத்துக்கே, ஏகப்பட்ட கட்சிக்காரங்க வந்தாங்க... 100க்கும் மேற்பட்டோர் ரோட்டுல நின்னாங்கன்னா பார்த்துக்குங்க...
''அப்போ பேசுன அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள், 'இனி ஆலோசனை கூட்டத்தையும், வ.உ.சி., மைதானத்துல தான் நடத்தணும் போலிருக்கே'ன்னு சிலாகித்து பேசியிருக்காங்க...
''இது, ஆளுங்கட்சியான தி.மு.க.,வினரை ரொம்பவே உசுப்பேத்தி விட்டுருச்சுங்க... அதனால, தி.மு.க., பூத் கமிட்டி கூட்டத்தை, 'கொடிசியா' பக்கத்துல இருக்கற மைதானத்துல நடத்தினாங்க...
''அங்கே, 20 ஆயிரம் பேரை திரட்டி, 'மாஸ்' காட்டியிருக்காங்க... குளிருக்கு போட்டியா, கோவை அரசியல்ல, 'அனல்' பறக்குதுங்க...'' என முடித்தார்,
அந்தோணிசாமி.
''பிளாஸ்டிக் மறுசுழற்சிதொழிற்சாலையால மக்கள் ரொம்ப சிரமபடறா ஓய்...'' என்ற குப்பண்ணாவே தொடர்ந்தார்...
''சேலம் மாவட்டம்பனமரத்துப்பட்டி பேரூராட்சி லட்சுக்காடு பகுதியில, பிளாஸ்டிக் குடோன் இருக்கு... வெளியிடங்கள்ல இருந்து பிளாஸ்டிக் குப்பையை எடுத்து வந்து இங்கே கொட்டறா ஓய்...
''அந்த பிளாஸ்டிக் குப்பையை உருக்கி, மறுசுழற்சி செய்யறா... அதனால காத்துல நச்சு பரவி, மக்களுக்கு மூச்சு திணறல், கண், தொண்டை எரிச்சல் எல்லாம் ஏற்படறது ஓய்...
''மேலும் அப்பகுதியில கடுமையா துர்நாற்றம் வீசறது... சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கறது ஓய்...
''தமிழக அரசு பிளாஸ்டிக்கை ஒழிக்க, 'மீண்டும் மஞ்சப்பை' திட்டத்தை அறிவிக்கறது... மறுபக்கம், முறைகேடாக இயங்கும் பிளாஸ்டிக் பேக்டரியை, அதிகாரிகள் கண்டுக்க மாட்டேங்கறா... என்ன கொடுமை ஓய்...'' என விளக்கினார்,
குப்பண்ணா.
''சம்பளத்தை மாசக்கணக்கா கொடுக்காம இருக்காவ வே...'' என கடைசி தகவலுக்கு மாறினார், அண்ணாச்சி.
''அய்யோ, பாவம்... எங்கே அப்படி நடக்குது பா...'' எனக் கேட்டார் அன்வர்பாய்.
''தமிழகத்துல, 12 ஆயிரத்து, 524 ஊராட்சிகள் இருக்கு... இதுல ஊராட்சி உதவியாளர், துப்புரவு பணியாளர், குடிநீர் மோட்டார் இயக்குபவர், மின்விளக்கு பராமரிப்பாளர் என ஆயிரக்கணக்கானோர் வேலை பார்க்குறாவ வே...
''இதுல ஊராட்சி உதவியாளர்களை தவிர, மத்தவங்களுக்கு மாதந்தோறும், 4,500 ரூபாய் வரை தான், அதிகபட்ச சம்பளம் கொடுக்குறாவ வே...
''தமிழக அரசு கடும் நிதி நெருக்கடியில இருக்குன்னு சொல்லி, மூணு மாசமாக ஊராட்சி பணியாளர்களுக்கு சம்பளம் முறையாக கொடுக்குறதே இல்லையாம் வே...
''பல ஊராட்சிகள்ல இரண்டு நாளைக்கு முன்னாடி தான் சம்பளத்தை விடுவிச்சு இருக்காவ... நுற்றுக்கணக்கான ஊராட்சிகள்ல இரண்டு மாசமா சம்பளம்
கொடுக்கலையாம் வே...
''குறைஞ்ச அளவுல கொடுக்குற சம்பளத்தை கூட, ஊரக வளர்ச்சி துறை முறையாக ஒதுக்கீடு செய்யுறதே இல்லை... சம்பளம் சரியா கிடைக்காம, ஊராட்சி பணியாளர்கள் ரொம்ப கஷ்டப்படுறாவ வே...'' என முடித்தார், அண்ணாச்சி.
நண்பர்கள் கிளம்ப பெஞ்ச் அமைதியானது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE