பரங்கிப்பேட்டை ; பரங்கிப்பேட்டை அருகே, கோழி பண்ணை தீப்பிடித்து எரிந்து 5,000 கோழிக் குஞ்சுகள் தீயில் கருகின.கடலுார் மாவட்டம், பரங்கிப்பேட்டை அடுத்த சேந்திரக்கிள்ளை கிராமத்தை சேர்ந்தவர் முருகதாஸ், 40; கோழிப் பண்ணை வைத்து, கடந்த 10 ஆண்டாக கோழிக் குஞ்சுகள் வளர்த்து வருகிறார்.
இவரது கோழிப்பண்ணை நேற்று முன்தினம் அதிகாலை மர்மமான முறையில் தீப்பிடித்து எரிந்தது.அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைத்தனர். இருந்தும், கோழி பண்ணை முழுவதும் தீப்பிடித்து எரிந்து சாம்பலானது. இதில், 5,000 கோழிக் குஞ்சுகள் தீயில் கருகி இறந்தன. மேலும், மோட்டார், தீவனம் உள்ளிட்ட பொருட்களும் எரிந்து சாம்பலானது. இதன் மதிப்பு, ரூ. 5 லட்சம் ஆகும்.தீ விபத்து குறித்து, பரங்கிப்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.