கடலுார் ; புதுச்சேரியில் இருந்து மது பாட்டில்கள் கடத்தி வந்த பெண் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.கடலுார் கலால் இன்ஸ்பெக்டர் பத்மா தலைமையில், ஆல்பேட்டை சோதனை சாவடியில் போலீசார் வாகன சோதனை நடத்தினர்.
அப்போது, ஒரு வாலிபருடன் பைக்கில் கையில் பையுடன் பெண் ஒருவர் வந்தார். சோதனை சாவடியை கடந்ததும், அங்கு தயாராக நின்றிருந்த காரில் ஏறிச் சென்றார்.சந்தேகமடைந்த போலீசார் காரை விரட்டி சென்று, திருப்பாதிரிபுலியூர் உழவர் சந்தை அருகில் மடக்கினர். சோதனையில் காரில் மதுபாட்டில்கள் மற்றும் சாராயம் கடத்தி வந்தது தெரியவந்தது.விசாரணையில், அரியலூர் மாவட்டம், ஆண்டிமடத்தை சேர்ந்த மரியஆரோக்கியம், 19; பொன்ராஜ், 23; கார்த்திக், 26, ஆகியோர் என்பதும், புதுச்சேரி மாநிலத்தில் இருந்து குறைந்த விலைக்கு மதுபாட்டில்கள் மற்றும் சாராயத்தை வாங்கி, அரியலுார் மாவட்டத்திற்கு கடத்தி சென்றது தெரியவந்தது.போலீசார் வழக்குப்பதிந்து மூவரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்த 100 மதுபாட்டில்கள், 10 லிட்டர் சாராயம் மற்றும் காரை பறிமுதல் செய்தனர்.