சென்னை: திமுக இளைஞரணியில் பெண்களை சேர்த்த விவகாரம்., இளைஞரணி தலைவராக உள்ள உதயநிதிக்கும், மகளிரணி தலைவராக உள்ள கனிமொழிக்கும் இடையே நிலவி வந்த மறைமுக உரசல்களை வெளிக்கொண்டுவந்துள்ளது.
திமுக தலைவரும், முதல்வருமான ஸ்டாலினின் மகனான உதயநிதி, தற்போது சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ.,வாகவும், திமுக இளைஞரணித் தலைவராகவும் உள்ளார். கட்சியில் உதயநிதியை முன்னிலைப்படுத்த பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, உதயநிதியை அமைச்சராக்குவதற்கு பல அமைச்சர்களும் ஆதரவு கருத்தை தெரிவித்துள்ளனர். இப்படி, கட்சியில் உதயநிதியின் செல்வாக்கு அதிகரித்துவரும் சூழலில் புதிய பிரச்னை கிளம்பியுள்ளது.
கடந்த டிசம்பர் 26ம் தேதியன்று கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சுமார் 2,000 இளம் பெண்கள் உதயநிதி முன்னிலையில் இளைஞரணியில் இணைந்தனர். இதில் பெரும்பாலான பெண்கள் 18 முதல் 30 வயதுடையவர்கள். இந்நிகழ்ச்சி ஸ்டாலினின் ஒப்புதலுடன் நடைபெற்றதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பெண்களை மகளிரணியில் சேர்க்காமல் இளைஞரணியில் சேர்த்திருப்பது ஸ்டாலினின் தங்கையான கனிமொழிக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. கனிமொழிக்கும் உதயநிதிக்கும் இடையே மோதல் ஏற்படுவது இது முதல் முறையல்ல. தேர்தலுக்கு முன், இளைஞரணியின் கீழ், தனியாக இளம் பெண்கள் அணியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இளம்பெண்கள் அணி உருவாகும்பட்சத்தில் மகளிரணி என்பது வயதானவர்களின் அணி போல தோன்றும் என அச்சமயம் எதிர்ப்பு கிளம்பியது.

இப்பிரச்னை தலைமையிடம் கொண்டு செல்லப்பட்டது. பெண்கள் மகளிர் பிரிவில் மட்டுமே அங்கம் வகிக்க வேண்டும் என தலைமை தெளிவுப்படுத்தியதை அடுத்து, அப்பிரச்னை முடிவுக்கு வந்ததாக கட்சியினர் கூறுகின்றனர். இருவரும் தங்கள் அணியில் உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க செய்ய எடுக்கும் முயற்சிகளால், உதயநிதி - கனிமொழிக்கு இடையிலான பனிப்போர் தொடர்ந்து வருகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE