அமராவதி: ஆந்திராவில் பா.ஜ., ஆட்சிக்கு வந்தால் ரூ.50க்கு மது வழங்கப்படும் என அம்மாநில பா.ஜ., தலைவர் வாக்குறுதி அளித்துள்ளார்.
ஆந்திராவில் தற்போது ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சியமைத்து வருகிறது. இந்நிலையில், அமராவதியில் பா.ஜ., சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மாநில பா.ஜ., தலைவர் சோமு வீர்ராஜூ பங்கேற்று பேசியதாவது: ஆந்திராவில் ஆந்திராவில் ஏராளமான வளங்கள், நீண்ட கடற்கரை இருக்கின்றன. ஆனால், ஆளும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் அரசும், இதற்குமுன் ஆட்சி செய்த தெலுங்கு தேசம் கட்சியும் எதுவும் மேம்படுத்தவில்லை.

ஆந்திராவில் ஒரு கோடி பேர் மது அருந்துகின்றனர். அவர்களுக்கு நான் ஒரு வாக்குறுதியளிக்கிறேன். அனைவரும் 2024ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் பா.ஜ.,வுக்கு வாக்களித்தால், உங்களுக்கு ரூ.75க்கு மதுவை விற்பனை செய்வோம். நல்ல வருவாய் கிடைத்தால் ரூ.50க்கு கூட கொடுப்போம். அதேபோல், நிச்சயம் தரமான மதுவாக இருக்கும்.
ஆந்திராவில் மதுவின் விலை அதிகமாக உள்ளது. இங்கு மதுகுடிக்கும் ஒரு நபர் சராசரியாக மாதத்திற்கு ரூ.12 ஆயிரம் செலவு செய்கிறார். இந்த பணத்தை வசூலித்து, வேறு திட்டங்களுக்கு முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி வழங்குகிறார். பா.ஜ., ஆட்சிக்கு வந்தால் அமராவதி நகரை தலைநகராக்கி, அடுத்த 3 ஆண்டுகளில் சிறப்பானதாக மாற்றுவோம். இவ்வாறு அவர் பேசினார். வீர்ராஜூவின் இந்த பேச்சு, அம்மாநில ‛குடிமகன்'களிடையே மகிழ்ச்சி போதையை ஏற்றியுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE