சென்னை: வடகிழக்கு பருவ மழையினால் ஏற்பட்ட பாதிப்பில் இருந்து மீளவும், சேதமடைந்த உள்கட்டமைப்புகளை புனரமைக்கவும் ரூ.6,230 கோடி வழங்கிட கோரி, பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
கடந்த நவம்பர் மாதத்தில் வடகிழக்கு பருவமழையால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. அதனை முழுமையாக ஆய்வு செய்து நிதியை ஒதுக்கவேண்டும் என முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடந்த மாதமே கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். கடந்த மாதம் 21ம் தேதி மத்திய குழு தமிழகத்தில் ஆய்வு மேற்கொண்டது. இந்நிலையில் இன்று (டிச.,29) பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:

தமிழகத்தில் தற்காலிக சீரமைப்பு பணிகளுக்காக ரூ.1,510.83 கோடியும், சாலைகள், பாலங்கள் மற்றும் பொதுக் கட்டடங்கள் போன்ற சேதமடைந்த உள்கட்டமைப்புகளை நிரந்தரமாக சரிசெய்வதற்காக ரூ.4,719.62 கோடியும் நிவாரணமாக வழங்கிடக் கோரி, மத்திய அரசுக்கு சேத விவரங்களுடன் கூடிய விரிவான அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. கொரோனா பெருந்தொற்று காரணமாக மாநில அரசின் நிதி நிலைமை பாதிக்கப்பட்டுள்ள இந்தச் சூழ்நிலையில், மழை, வெள்ள பாதிப்புகள் மேலும் அதை கடுமையாக்கியுள்ளது.
மாநிலப் பேரிடர் நிவாரண நிதியும் தற்போது முழுமையாக பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே, தமிழகத்தில் வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சரிசெய்யவும் சேதமடைந்த உட்கட்டமைப்புகளை புனரமைக்கவும் தேவையான நிதியினை ஒதுக்கீடு செய்து வழங்கிட உள்துறை அமைச்சகத்திற்கு அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE