புதுக்கோட்டை: மீமிசல் அருகே கோபாலபட்டினம் பகுதியில் வெளிநாட்டில் வசித்து வரும் ஒருவர் வீட்டில் 750 சவரன் நகை திருடுப்போன நிலையில், வீட்டின் பின்பக்கம் உள்ள கிணற்றில் 559 சவரன் நகைகள் மீட்கப்பட்டது. கிணற்றில் நகையைப் போட்டது யார், மீதி நகை எங்கே என போலீசார் குழம்பிப் போய் உள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம், மீமிசல் அருகே கோபாலபட்டினம் பகுதியை சேர்ந்த ஜாபர்சாதிக்(55) என்பவர் பல ஆண்டுகளாக புருனை நாட்டில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். மேலும், அவரது குடும்பத்தினரும் அங்கு தான் வசித்து வருகின்றனர். இந்நிலையில், கோபாலபட்டணத்தில் உள்ள அவரது சொந்த வீட்டில் கடந்த 27ம் தேதி பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இது குறித்து அவரது உறவினரான முகமது உசேன்(50) என்பவர் மீமிசல் போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் அந்த வீட்டில் 750 சவரன் நகைகள் திருடி செல்லப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
வீட்டின் பின்பக்க கதவும் உடைக்கப்பட்டு உள்ளே சென்ற மர்ம நபர்கள் அனைத்து அறைகளும் உடைத்துள்ளனர். பின்னர், நகைகள் இருந்த அறையில் உள்ள பீரோ உடைக்கப்பட்டு, 750 சவரன் நகைகளை திருடி சென்றுள்ளனர். மேலும், அந்த அறை முழுவதும் மிளகாய் பொடி தூவப்பட்டு இருந்தது. இது குறித்து, மீமிசல் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் குறித்து, புதுக்கோட்டை மாவட்ட எஸ்.பி., நிஷாபார்த்தீபன் உத்தரவின் பேரில் இரண்டு தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.

இந்நிலையில், இன்று காலை ஜாபர்சாதிக் வீட்டின் பின்புறம் உள்ள பாழடைந்த கிணற்றில் திருடு போன நகைகள் பிளாஸ்டிக் பையில் கிடந்தது. இதனை மீட்ட போலீசார், அந்த நகைகளின் எடையளவை கணக்கிட்டனர். அதில், 559 சவரன் தங்க நகைகள் மட்டுமே இருப்பது தெரியவந்தது. மீதமுள்ள தங்க நகைகள் எங்கே? திசை திருப்புவதற்காக, யாரேனும் இது போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளனரா? என போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE