கெய்ரோ: 16-ம் நூற்றாண்டில் பண்டைய எகிப்தை ஆண்ட முதலாம் அமென்ஹோதேப் மன்னரின் பதப்படுத்தப்பட்ட உடலை (மம்மி) முதல் முறையாக சி.டி., ஸ்கேன் மூலம் முழுமையாக டிஜிட்டல் முறையில் ஆய்வுக்குட்படுத்தியுள்ளனர். அவரது முக அமைப்பை அதன் மூலம் அறிய முடிந்தது. அவரது பற்கள் இன்னமும் நல்ல நிலையில் உள்ளன.
எகிப்தில் வாழ்ந்து மறைந்த அரசர்கள், பிரபுக்கள் போன்றோரின் உடல்கள் பதப்படுத்தி துணியால் சுற்றப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இதனை மம்மிக்கள் என்றழைக்கிறார்கள். அழிந்துப் போன எகிப்து நாகரீகத்தை பற்றிய ஒரு பார்வையை இந்த மம்மிக்கள் அளிக்கின்றன. எகிப்திய மம்மிகள் புராண நம்பிக்கைகளுடன் தொடர்புடையவை. மம்மியாக்கப்பட்டால் அவர்களுக்கு மரணமில்லை என கருதினார்கள். இதை வைத்து நிறைய ஹாலிவுட் படங்கள் வெளியாகி பிரபலமாகியுள்ளன.

இந்த நிலையில் கி.மு., 11ம் நூற்றாண்டுக்கு பின் முதன் முறையாக ஒரு அரசரின் மம்மியை டிஜிட்டல் முறையில் அவிழ்த்துள்ளனர். முதலாம் அமென்ஹோதேப் எனும் அவர் கி.மு., 1525 முதல் 1504 வரை 21 ஆண்டுகள் பண்டைய எகிப்தை ஆண்டுள்ளார். நவீன காலத்தில் திறக்கப்படாமல் இருந்த ஒரே மம்மி இவருடையது மட்டுமே. அதற்கு புராணக் காரணங்கள் எதுவுமில்லை, அவரது மம்மியானது கச்சிதமாக தயாரிக்கப்பட்டு, அழகான மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு, உயிரோட்டமான முகமூடியால் அவரது முகம் கழுத்து மூடப்பட்டிருந்ததால் அதனை சேதப்படுத்தி திறக்க வேண்டாம் என இருந்தனர்.

இந்நிலையில் தான் சி.டி., ஸ்கேன் உதவியுடன் டிஜிட்டல் முறையில் ஊடுருவி பார்த்துள்ளனர். கெய்ரோ பல்கலைக்கழக கதிரியக்கவியல் மருத்துவப் பிரிவின் பேராசிரியரும், இந்த ஆய்வின் தலைவருமான டாக்டர் சஹர் சலீம், ஆய்வுப் முடிவுகளை முன்னணி மருத்துவ இதழில் வெளியிட்டுள்ளார். அதில் உடல் தோற்றம், உடல்நிலை, இறப்புக்கான காரணம் மற்றும் அரச குடும்பத்தின் மம்மியாக்கும் முறை ஆகியவற்றை பற்றி விவாதித்துள்ளனர்.
ஸ்கேன் மூலம் செய்த ஆய்வில் முதலாம் அமென்ஹோதேப் குறுகிய கன்னம், சிறிய மூக்கு, சுருள் முடி மற்றும் லேசான நீண்ட பற்கள் கொண்டவர் என தெரிந்துள்ளது. மரணத்திற்கான காரணத்தை தற்போது கண்டறிய முடியவில்லை. உடலில் காயங்கள் ஏதுமில்லை என அறிக்கை கூறுகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE