எம்.சேகர், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'வாக்காளர் அடையாள அட்டையுடன், ஆதார் எண்ணை இணைப்பதால் மட்டும், தேர்தல் சீர்திருத்தம் வந்து விடாது. ஒரு கள்ள ஓட்டைக் கூட ஒழிக்க முடியாது' என்று, கம்யூ., மாநில செயலர் பாலகிருஷ்ணன், மத்திய அரசின் நடவடிக்கையையும், தேர்தல் ஆணையத்தின் நிர்வாகத்தையும் எள்ளி நகையாடி, ஏளனம் செய்து இருக்கிறார். பாலகிருஷ்ணன் முதலில் ஒரு விஷயத்தை தெளிவாக, விளக்கமாக, விரிவாக புரிந்து கொள்ள வேண்டும்...உலகில், 100 சதவீத ஆண்களும் கிடையாது; பெண்களும் கிடையாது. ஆணிடம், பெண் தன்மையும்; பெண்ணிடம், ஆண் தன்மையும் இருந்தே தீரும். இது இயற்கை நியதி; விதி! உணவு பொருட்கள், கிருமி நாசினி விற்போர் கூட, 99.9 சதவீதம் சுத்தமானது, பாதுகாப்பானது என்று தான் குறிப்பிடுவர்.அதாவது, உலகில் எந்த பொருளுமே, 100 சதவீதம் பரிசுத்தமானது கிடையாது. கள்ள ஓட்டுகளை தடுக்க, தேர்தல் ஆணையம் தலையால் தண்ணீர் குடித்து தான் பார்க்கிறது.மத்தியில் காங்., ஆட்சி நடந்தபோது, பீஹார் போன்ற மாநிலங்களில் தேர்தல் அன்று, மொத்த ஓட்டு சீட்டுக்களையும் கைப்பற்றி, வேண்டிய வேட்பாளரின் சின்னத்தில் முத்திரையிட்டு, பெட்டியில் திணித்து கள்ள ஓட்டு போட்டதெல்லாம் வரலாறு.ஒவ்வொரு அனுபவத்தின் மூலம், தேர்தல் ஆணையம் மேம்பட்டு வருகிறது. ஓட்டு சீட்டுக்கு மாற்றாக, இயந்திரத்தை அறிமுகப்படுத்தியது. இன்று சட்டசபை, லோக்சபா தேர்தல்கள் அனைத்தும், ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் தான் நடக்கிறது.
தோல்வி அடையும் அரசியல் கட்சிகள், அந்த இயந்திரத்தின் மீதும் குற்றம், குறை சொல்லிக் கொண்டே தான் இருக்கின்றனர்.சரி... வாக்காளர் அடையாள அட்டையுடன், ஆதார் எண்ணை இணைத்தால், 99.9 சதவீதம் கள்ள ஓட்டு போடுவதை தடுக்கலாம் என்ற நம்பிக்கையில், மத்திய அரசு இந்த மசோதா நிறைவேற்றியுள்ளது. அந்த திட்டம் இன்னும் நடைமுறைக்கு வரவில்லை; வந்தால் தான், கள்ள ஓட்டை முற்றிலுமாக ஒழிக்க முடியுமா, முடியாதா என்ற விபரம் தெரியவரும்.அதற்குள், கம்யூ., பாலகிருஷ்ணன் ஏன் கதறுகிறார்?பாலகிருஷ்ணனைப் பார்த்து நாம் கேட்கிறோம்... கள்ள ஓட்டு கலாசாரத்தை, கம்யூனிஸ்ட் ஆதரிக்கிறதா? அப்படி ஆதரித்தும், உங்களால் குறிப்பிடத்தக்க வெற்றி எதையும் பெற முடியவில்லையே ஏன்?தேர்தலில், 100 சதவீதம் கள்ள ஓட்டுகளை தடுக்க, பாலகிருஷ்ணனிடம் ஏதாவது 'ஐடியா' இருந்தால், அதை அவிழ்த்து விடுங்களேன்... பார்க்கலாம்!
முதலில் காங்கிரசை காப்பாற்றுங்கள்!
அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை, நாகை மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'பாகிஸ்தானை பிளந்து வங்கதேசத்தை உருவாக்கிய காளி, இந்திரா. சீனா, கேரள மாநிலம் அளவிற்கு இந்திய நிலத்தை ஆக்ரமித்திருக்கும் போது, அது பற்றி பேசவே அச்சப்படும் பிரதமர் மோடிக்கு, இந்திராவின் வெற்றி பயமுறுத்தவே செய்யும்...' என, காங்., - எம்.பி., ஜோதிமணி
கொக்கரித்திருக்கிறார்.கிழக்கு பாகிஸ்தானுக்கு ஆபத்து என்றவுடன், சகோதர பாசத்தில் இந்தியா படை பலத்துடன் சென்று, தனிநாடாக்கிக் கொடுத்தது வரலாற்று பெருமை தான்.அந்த சாதனையின் போது, 'இந்திராவை, பராசக்தியின் வடிவமாக பார்க்கிறேன்' என்று பா.ஜ.,வை சேர்ந்த மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் புகழ்ந்தார்.அந்த பரந்த மனப்பான்மையோடு, காங்கிரஸ் என்றைக்காவது, பா.ஜ.,வை ஒரு வரியாவது பாராட்டியதுண்டா?அதெல்லாம் சரி ஜோதிமணி அவர்களே... கேரள மாநிலத்தை விட பெரிதான பரப்பை காஷ்மீரில், பாகிஸ்தான் கைப்பற்றிய போது, இந்திராவின் அப்பா நேரு என்ன செய்தார் என்று
சொல்லுங்களேன்.டில்லி வரை சீனா ஆக்கிரமித்ததே, அப்போது நேரு என்ன செய்தார் என்று சொல்லுங்களேன்.இன்று அதே வங்கதேசத்தில், ஹிந்துக்களுக்கு எதிரான கலகக் குரல் வலுத்து அடிக்கடி கலவரம் நடக்கிறதே... இது குறித்து, சோனியாவும், ராகுலும் ஏன் வாய் திறக்க அச்சப்
படுகின்றனர்?சீனாவையும், பாகிஸ்தானையும் எப்படி சமாளிப்பதென்பது நம் பிரதமர் மோடிக்கு ரொம்ப நல்லாவே தெரியும். அயல் நாடுகளுடன் அவர் போடும் ஒப்பந்தங்களை கவனித்தாலே, அவரது ராஜ தந்திரத்தை உணரலாம்.சமீபத்தில், இலங்கை விவகாரத்தை கவனித்தால் கூட புரிந்து கொள்ளலாம்.
அது சரி, ஜோதிமணியம்மா... உங்க காங்கிரஸ், தலைமை இல்லாமல் ரொம்ப நாளாக, 'கோமா' நிலையில் இருக்கிறதே... அதனால் தானே, சக எதிர்க்கட்சிகள் காங்கிரசை கை கழுவி, புதிய கூட்டணி காண அடிக்கடி கூடி பேசி வருகின்றன.வரலாறும், எதிர்காலமும் காங்கிரசுக்கு சாதகமாக இல்லை. எனவே, முதலில் காங்கிரசை காப்பாற்ற வழியை தேடுங்கள்... நம் தேசத்தின் பாதுகாப்பை, பிரதமர் மோடி பார்த்து கொள்வார்.
மக்களின் ஒத்துழைப்பு அவசியம்!
ம.அன்புச்செல்வன், வீரபாண்டி, தேனி மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கடந்த, 2019- டிசம்பரில் சீனாவில் உருவான கொரோனா தொற்று நோய் முதல் அலை, இரண்டாம் அலை என்று உலக நாடுகள் முழுவதிலும் கோர தாண்டவத்தை
ஆடியுள்ளது; அதன் ஆட்டம் இன்னும் அடங்கவில்லை.தற்போது அது தன் உருவத்தை மாற்றி, ஒமைக்ரான் எனும் பெயரில் தென்னாப்ரிக்காவில் துவக்கி, பிரிட்டன், அமெரிக்கா என்று வலம் வந்து, தற்போது நம் நாட்டிற்குள்ளும் மூக்கை நுழைத்து விட்டது.
தொற்று அதிகரித்துள்ள நிலையில், 'தடுப்பூசி போடுவது உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் வாயிலாக மட்டுமே பாதிப்பில் இருந்து காத்துக் கொள்ள முடியும்' என, 'எய்ம்ஸ்' மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர் ரன்தீப் குலேரியா எச்சரித்துள்ளார்.மத்திய அரசு எடுத்த தீவிர நடவடிக்கை காரணமாக, நாடு முழுதும், 130 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டிருப்பது, இமாலாய சாதனை என்பதில் சந்தேகம் இல்லை.அதே நேரம் தமிழகத்தில் இன்னும் 90 லட்சம் பேர் தடுப்பூசி போடாமல் அலட்சியமாக இருக்கின்றனர் என்ற செய்தி, மிகவும் வேதனை அளிக்கிறது.கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு மத்திய, மாநில அரசுகள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் பாராட்டும் வண்ணம் இருந்தாலும், பொதுமக்களின் ஒத்துழைப்பு இல்லை என்றால், அனைத்தும் பயனற்று போய் விடும்.மக்களின் வாழ்வாதாரம் பாதிக்க கூடாது என்பதற்காக தான், அரசு பல தளர்வுகளை அறிவித்தது என்பதை, மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். சமூக இடைவெளி, தடுப்பூசி போடுதல், முக கவசம் அணிதல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மக்கள் தாங்களாக முன் வந்து பின்பற்ற வேண்டும். அரசின் கட்டுப்பாட்டுக்கு பயந்து அல்ல; நம் பாதுகாப்புக்காக!
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE