பிரியாணியில் புழு; சாப்பாட்டில் பிளாஸ்டிக்!
''கலெக்டர் உத்தரவையே, ஊழியர்கள் நிறுத்தி வைச்சிருக்காங்களாம் பா...'' என்றபடியே பெஞ்சில் அமர்ந்தார், அன்வர்பாய்.
''அவ்வளவு அதிகாரம் அவாளுக்கு இருக்கா ஓய்...'' எனக் கேட்டார் குப்பண்ணா.
''சேலம் மாவட்டத்துல இருந்த, 33 பேரூராட்சிகள்ல தாரமங்கலம், இடங்கணசாலை பகுதிகளை, நகராட்சிகளாக தரம் உயர்த்துனாங்க பா...
''மீதி, 31 பேரூராட்சிகள்ல பணிபுரியிற செயல் அலுவலர்களை தவிர்த்து, குடிநீர் குழாய் பொருத்துனர், மேஸ்திரி, 'கிளர்க், பில் கலெக்டர்' உள்ளிட்ட ஊழியர்களில், 20 பேருக்கும் மேலாக, கலெக்டர் கார்மேகம் நவ., 24ம் தேதி
இடமாத்தம் செஞ்சாரு பா...
''அதுல சிலர், அந்த உத்தரவை மதிக்காமல், தி.மு.க., மாவட்ட செயலரை பார்த்து, பேசியிருக்காங்க பா...
''இதையடுத்து பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் மூலம், கலெக்டரின் இடமாற்ற உத்தரவை தற்காலிகமாக நிறுத்திவைக்க, வாய்மொழி உத்தரவு போட்டுருக்காங்க...
''இதுவரை, கலெக்டர் உத்தரவு செல்லுபடியாகலையாம் பா...'' என முடித்தார், அன்வர்பாய்.
''கிருஷ்ணகிரி மாவட்ட ேஹாட்டல் கள் மேல புகார் வந்துண்டே இருக்கு ஓய்...'' என்ற குப்பண்ணாவே, தொடர்ந்தார்....
''மூணு வாரத்துக்கு முன்னால சூளகிரி அடுத்த சின்னார் பகுதியில இருக்கற, பிரபல கடையில வாங்கின பிரியாணியில புழு இருந்துது ஓய்...
''பா.ம.க., மாவட்ட நிர்வாகி ஒருத்தர், ஹோட்டல் நிர்வாகத்திடம், 'பிரச்னையை நான் முடிச்சு தரேன்'னு சொல்லி, ஒன்றரை லட்சம் ரூபாய் கேட்டுருக்கார் ஓய்...
''இவருக்கு பணம் குடுக்கறதை விட, அதிகாரிகளை சரிகட்டலாம்ன்னு, ேஹாட்டல் நிர்வாகத்தினர் முடிவு பண்ணிட்டா... நினைச்ச மாதிரியே, அதிகாரிகளை, 'கவனிச்சு' பிரச்னையையும் முடிச்சுட்டா...
''கடந்த, 18ம் தேதி கிருஷ்ணகிரி ஸ்டேடியம் பக்கத்துல இருக்கற தனியார் ேஹாட்டல்ல, சரவணன் என்பவர், தன் குடும்பத்துடன் மதியம் சாப்பிட்டுருக்கார் ஓய்...
''அந்த சாப்பாட்டுல தலைமுடி, பிளாஸ்டிக் கழிவு எல்லாம் கிடந்துருக்கு... இது பத்தி, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள்ட்ட பலமுறை புகார் செஞ்சும் நடவடிக்கை எடுக்கலையாம் ஓய்...
''கிருஷ்ணகிரி மாவட்டத்துல இருக்கற ேஹாட்டல்கள்ல சாப்பாடு தரமா இல்லை... அதிகாரிகளும் முறையா ஆய்வு செய்யறதில்லை... உயிர்பலி நடந்தா தான், அரசு நடவடிக்கை எடுக்குமோன்னு மக்கள் கேள்வி கேட்கறா ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா.
''எஸ்.பி., மட்டும் கறாரு... போலீஸ்காரர்கள் கோளாறு செய்யிதாவ வே...'' என கடைசி தகவலுக்கு மாறினார், அண்ணாச்சி.
''என்ன, ஏதுன்னு விபரமா சொல்லுங்க...'' எனக் கேட்டார் அந்தோணிசாமி.
''கிருஷ்ணகிரி எஸ்.பி.,யா, சாய்சரண் தேஜஸ்வி பொறுப்புக்கு வந்ததுல இருந்து லாட்டரி, குட்கா விற்பனையை அடியோடு ஒழிக்க நடவடிக்கை எடுத்துட்டு வர்றார்... ரெண்டு மாசத்துல, குட்கா மற்றும் லாட்டரி விஷயத்துல மட்டும், 300க்கும் மேற்பட்டோரை கைது பண்ணியிருக்காவ வே...
''எஸ்.பி., அதிரடி சோதனை நடத்தி, கள்ள மது விற்பனை மற்றும் உரிமம் இல்லாத, 'பார்'களை மூட உத்தரவு போட்டாரு... ஒரு வாரத்துக்கு பின், அந்த பார் எல்லாம் உள்ளூர் போலீஸ்காரங்க அனுமதியோடு திறந்துட்டு வர்றாவ வே...
''எஸ்.பி., மட்டும் கறாராக இருந்து என்ன புண்ணியம்... எல்லா போலீசும் அப்படி இல்லையேன்னு மக்கள் புலம்புதாவ வே....'' என முடித்தார், அண்ணாச்சி.
நண்பர்கள் கிளம்பவே, பெஞ்ச் அமைதியானது!
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE