கோவை: கூட்டுறவு வாணிப கிடங்குகளில் வைக்கப்பட்டுள்ள பொங்கல் தொகுப்புகளை, ரேஷன் கடைகளுக்கு ஊழியர்கள் தங்கள் சொந்தச் செலவில் எடுத்துச் செல்லவேண்டும் என, அதிகாரிகள் நிர்பந்திப்பதாக, ரேஷன் கடை ஊழியர்கள் புலம்பித்தீர்க்கின்றனர்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும், 16 பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு, ரேஷன் கடைகள் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட உள்ளது.இதற்கான பொருட்கள் கொள்முதல் செய்யப்பட்டு, அந்தந்த மாவட்ட நுகர்பொருள் வாணிப கிடங்குகளில் வைக்கப்பட்டுள்ளன.

கோவை மாவட்டத்தில் பூசாரிபாளையம், மாதம்பட்டி உள்ளிட்ட நான்கு இடங்களில் நுகர்பொருள் வாணிப கிடங்குகளில் வைக்கப்பட்டுள்ள பொங்கல் தொகுப்பு பொருட்கள், தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கம் மூலம், அனைத்து ரேஷன் கடைகளுக்கும் அனுப்பப்பட வேண்டும்.
ஆனால், கிடங்குகளில் உள்ள பொங்கல் தொகுப்புகளை, ஒவ்வொரு ரேஷன் ஊழியர்களும் தங்கள் சொந்தச் செலவில், வாடகைக்கு வாகனம் பிடித்து கடைகளுக்கு எடுத்து செல்ல வேண்டும் என, அதிகாரிகள் அறிவுறுத்தியிருப்பதாக ரேஷன் கடை ஊழியர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து, ரேஷன் கடை ஊழியர்கள் சிலர் கூறியதாவது:ஒவ்வொரு மாதமும், ரேஷன் கடைகளுக்கான பொருட்கள், தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கம் மூலம் சப்ளை செய்யப்படுகிறது. அதே போல் பொங்கல் தொகுப்பையும் சப்ளை செய்யாமல், கடை ஊழியர்களே வாகனம் பிடித்து வந்து எடுத்துச் செல்ல வேண்டும் என, அதிகாரிகள் கூறியுள்ளனர்.இதற்கு ஆகும் ஏற்றுக்கூலி, இறக்குக்கூலி மற்றும் வண்டி வாடகை அனைத்தையும் நாங்களே கொடுக்க வேண்டும் என கூறுகின்றனர். இதற்கு குறைந்தது, 8000 ரூபாய்க்கும் மேல் செலவாகும். கடந்த முறை கொரோனா நிவாரண தொகுப்பு வழங்கப்பட்ட போது, ஒவ்வொரு ரேஷன் கடை ஊழியர்களும், இதே தொகை செலவு செய்து, பொருட்களை எடுத்து வந்தோம். அந்த தொகையை எங்களுக்கு திரும்ப கொடுக்கவில்லை.

இந்த முறையும் எங்கள் சொந்த பணத்தை செலவு செய்ய, அதிகாரிகள் நிர்பந்திக்கின்றனர். எங்களுக்கு சம்பளத்தை தவிர, வேறு வருமானம் எதுவும் இல்லை. அதனால், பொங்கல் தொகுப்புகளை தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கம் மூலமே, ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் பார்த்திபனிடம் கேட்ட போது, ''பொங்கல் பொருட்கள் வழங்க, ரேஷன் கடை ஊழியர்கள் ஒரு ரூபாய் கூட செலவு செய்ய தேவையில்லை. அதற்கு ஆகும் செலவுகளை கூட்டுறவு சங்கமே கொடுத்துவிடும். அப்படி யாராவது பணம் கொடுக்க சொல்லி நிர்பந்தம் செய்தால், கடை ஊழியர்கள் உடனே புகார் தெரிவிக்கலாம். கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE