தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் அறிக்கை: தமிழக மக்கள் மின் கட்டணத்தை ஏற்கனவே அதிக அளவில் செலுத்தி வரும் நிலையில், ஜி.எஸ்.டி.,யும் மின் கட்டணத்தில் சேர்த்திருப்பது அதிக சுமையை ஏற்படுத்தியுள்ளது. எனவே, மின் கட்டணத்துக்கு, ஜி.எஸ்.டி., வசூலிப்பதை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.
அரசை நடத்தி பார்த்தால் தான் தெரியும், அதன் கஷ்டமும், நஷ்டமும்.
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பேட்டி: மத்தியில், பா.ஜ., மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வந்தால் தேசத்திற்கும், அரசியல் அமைப்புச் சட்டத்திற்கும் மிகுந்த அச்சுறுத்தலாக அமையும். அதுபோல, மூன்றாவது அணி அமைக்கும் முயற்சியும் நாட்டிற்கு ஆபத்தாக அமையும்.
நாட்டுக்கு என்ன பாதிப்பு ஏற்பட்டு விடப் போகுது... உங்கள் அரசியல் சிந்தனைக்கு ஆபத்து ஏதும் தென்படுதோ?
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் அறிக்கை: கொரோனா காலத்தில், துாய்மை காவலர்களின் பணி பெரிதும் பாராட்டத்தக்கதாக இருக்கிறது. சம்பளம் குறைவாக இருந்தாலும், தங்கள் பணியில் ஆர்வமாக ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கவும், பணி நிரந்தரம் செய்யவும், அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
துாய்மை பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு கொடுப்பதில் தடை ஏன் ஏற்படுகிறது என்பதை, ஆராய்ந்து சொல்லுங்களேன்!
தமிழக மார்க்சிஸ்ட் பிரமுகர் அருணன் அறிக்கை: மேற்கு வங்கத்தில், அன்னை தெரசா மிஷனரியின் வங்கி கணக்குகளை மோடி அரசு முடக்கியுள்ளது. அதனால் பல்லாயிரம் நோயாளிகளும், ஊழியர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். எளியவர்களுக்கு இவர்களும் உதவ மாட்டார்கள்; பிறரையும் உதவ விட மாட்டார்கள்.
கம்யூ.,க்கள் எதையும் அரையும், குறையுமாக கேட்டு, அவசர அறிக்கை வெளியிட்டு விடுவர் என்பதற்கு, உங்களின் அறிக்கை தான் உதாரணம். கணக்கு முடக்கப்பட வேண்டும் என, அந்த அமைப்பே கோரியுள்ளதை நீங்கள் அறிய மாட்டீர்களா?
நாம் தமிழர் என்ற கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி: நாகையில் நடந்த கூட்டத்திற்கு மேடை அமைக்கக் கூட எங்களுக்கு அனுமதி இல்லை. ஆனால், தி.மு.க.,வின் உதயநிதி ஸ்டாலின், கோவையில் மாநாடு அளவுக்கு மக்களை திரட்டி பேசி உள்ளார். அதிகாரத்தில் அவர்கள் இருப்பதால் ஆட்சியாளர்கள் அட்டகாசம் செய்கின்றனர்.

நீங்கள் சொல்வது சரி தான். தி.மு.க., கூட்டம் கூட்டினால் மட்டும், யாருக்கும் தொற்று ஏற்படாது என யார் இவர்களுக்குச் சொன்னது எனத் தெரியவில்லை.
புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி அறிக்கை: தமிழக கவர்னர், ஆர்.என்.ரவியை சந்தித்த போது, 'தமிழகத்திற்கு, 'நீட்' தேர்விலிருந்து விலக்கு அளிக்க வகை செய்யும் தமிழக அரசின் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டாம்' என கேட்டுக் கொண்டேன்.
ஏற்கனவே அந்த மசோதாவை ஒதுக்கி வைத்து விட்டார் கவர்னர் ரவி. நீங்கள் சொல்லியது போல, மேலும் பல கட்சித் தலைவர்கள் சொன்னால், நிராகரிக்கவும் செய்து விடுவார்!
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE