மதுரை:மதுரை மத்திய சிறையில் கைதிகள் திடீர் மோதலில் ஈடுபட்டனர். இதில் ஒரு தரப்பினர், சிறையில் பாதுகாப்பு இல்லை எனக் கூறி, சிறைச்சாலையின் மேல்தளத்தில் ஏறி, தங்கள் உடலை பிளேடால் கீறிக் கொண்டதுடன், கற்களை வீசி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மதுரை மத்திய சிறையில் தண்டனை, விசாரணை கைதிகள் என, ஆயிரத்து 200க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர். விசாரணை கைதிகளான திருச்சியை சேர்ந்த ஜெகன், மருது சேனை தலைவர் ஆதிநாராயணன் இடையே திடீர் மோதல் ஏற்பட்டது. இதையடுத்து, ஜெகனை வார்டன்கள் விசாரணைக்காக அழைத்து சென்றனர். இந்நிலையில், நேற்று மதியம் உணவு இடைவேளையில் இரு தரப்பினரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் முற்றி கைதிகள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.
ஒரு தரப்பினர், 'சிறையில் கைதிகளுக்கு உரிய பாதுகாப்பு இல்லை' எனக்கூறி, மேல்தளத்தில் ஏறி உடலை பிளேடால் கீறிக் கொண்டனர்.ஜெயில் சாலையில் கற்களை வீசினர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டதுடன், சாலையில் போக்குவரத்தும் ஸ்தம்பித்தது.
சிறை வார்டன்கள் சமாதானம் செய்ததை அடுத்து, அவர்கள் இறங்கி வந்தனர். காயம் அடைந்தவர்களுக்கு சிறையிலேயே சிகிச்சை அளிக்கப்பட்டது. டி.ஐ.ஜி., பழனி தலைமையில் கண்காணிப்பாளர் தமிழ்செல்வம் மற்றும் அதிகாரிகள் இரு தரப்பினரிடம் பேச்சு நடத்தினர். சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.