புனே: ‛அரசாங்கத்தை வழிநடத்துவதை விட அரசாங்கத்திற்கு தலைமை தாங்கும் நபரை ஆதரித்து வழிகாட்ட விரும்புகிறேன்' என தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார் தெரிவித்துள்ளார்.
கடந்த 2019ம் ஆண்டு, மஹாராஷ்டிராவில் நடந்த சட்டசபை தேர்தல் முடிவுக்கு பின்னர் ஆட்சி அதிகாரம் தொடர்பாக பா.ஜ., - சிவசேனா இடையிலான கூட்டணியில் விரிசல் ஏற்பட்டு கூட்டணியை முறித்துக்கொண்டதால், எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதற்கிடையே தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவரான சரத் பவாரின் அண்ணன் மகன் அஜித் பவார், பா.ஜ.,வுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்தார். இதில், முதல்வராக பா.ஜ.,வின் தேவேந்திர பட்னவிசும், துணை முதல்வராக அஜித் பவாரும் பொறுப்பேற்றனர்.
ஆனால் சரத்பவாரின் விருப்பத்திற்கு மாறாக பா.ஜ.,வுடன் அஜித் பவார் கூட்டணி அமைத்ததால், அவருக்கு தேசியவாத காங்., எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவு கிடைக்கவில்லை. இதனால், பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க முடியாமல் கவிழ்ந்தது. இதனைதொடர்ந்து காங்கிரஸ், தேசியவாத காங்கிரசுடன் கூட்டணி அமைத்து சிவசேனா ஆட்சியை பிடித்தது. பா.ஜ.,வுடன் உறவை முறித்து கொண்ட அஜித் பவாருக்கு துணை முதல்வர் பொறுப்பு வழங்கப்பட்டது.

இந்நிலையில் இந்த நிகழ்வுகள் தொடர்பாக சரத் பவார் விளக்கியுள்ளார். அவர் கூறியதாவது: பா.ஜ.,வுடன் கூட்டணி அமைக்க நான் அஜித் பவாரை அனுப்பியிருந்தால், அவர்கள் ஆட்சியில் தொடர்ந்து இருந்திருப்பார்கள். அதனை நான் உறுதி செய்திருப்பேன். முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கடந்த 10 நாட்களாக அவர் உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோதும், நிர்வாக அனுபவமுள்ள மற்ற அமைச்சர்கள் சிறப்பாக செயல்பட்டனர். இவ்வாறு அவர் கூறினார்.

அவரிடம், ‛2024ம் ஆண்டு லோக்சபா தேர்தல் முடிவு வெளியான பிறகு, நீங்கள் பிரதமராக வாய்ப்பு உள்ளதா' என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு பதிலளித்த சரத் பவார், ‛அரசாங்கத்தை வழிநடத்துவதை விட அரசாங்கத்திற்கு தலைமை தாங்கும் நபரை ஆதரித்து வழிகாட்ட விரும்புகிறேன்,' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE