தெருவில் வேண்டாமே கொண்டாட்டம்!
பொ.பாலாஜிகணேஷ், சிதம்பரம், கடலுார் மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ -மெயில்' கடிதம்: புத்தாண்டு உற்சாகம் எல்லாம் கிடக்கட்டும்; 'ஒமைக்ரான்' வைரஸ் பரவலில் இருந்து தப்பித்தால் தான், அடுத்த புத்தாண்டை நாம் சந்திக்க முடியும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்!மது குடிப்பதும், கும்மாளம் அடிப்பதும் தான், புத்தாண்டு கொண்டாட்டம் அல்ல; அது நம் கலாசாரமும் அல்ல.உலகையே அச்சுறுத்தும் ஒமைக்ரான், தமிழகத்திற்குள்ளும் நுழைந்து விட்டது. கொண்டாட்டம் என்ற பெயரில், அதை தமிழகம் முழுதும் வேகமாக பரப்பிவிடக் கூடாது.அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கிறது என்றாலும், அதை பொறுப்புடன் செயல்படுத்த வேண்டிய கடமை, பொது மக்களாகிய நமக்கு தான் இருக்கிறது.முதன் முதலில், கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்ட போது, மக்களிடம் இருந்த அச்சம், தற்போது இல்லை என்று தான் தோன்றுகிறது.இரண்டாவது அலையில், மிகப்பெரிய அளவில் உயிரிழப்பை சந்தித்தோம். அதற்கு காரணம், முதல் அலையின் போது நாம் மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கையை, இரண்டாவது அலையின் போது பின்பற்றாமல், அலட்சியமாக இருந்தது தான்.ஆனால் அதைவிட அலட்சியப் போக்கு, தற்போது நம்மிடம் இருப்பது போல் தோன்றுகிறது.மக்கள், தங்கள் வாழ்வாதாரத்திற்காக தான் வெளியிடங்களுக்கு செல்கின்றனர். அதனால் அவர்கள் முக கவசம், தடுப்பூசி, கிருமி நாசினி, சமூக இடைவெளி போன்ற முன்னெச்சரிக்கையை பின்பற்ற வேண்டும்.
ஆனால், அவசியமின்றி ஊர் சுற்றுதலும், கொண்டாட்டத்தில் ஈடுபடுவதும், ஒமைக்ரான் பரவவே வழி செய்யும்.புத்தாண்டு கொண்டாட்டம் இல்லத்திலும், உள்ளத்திலும் இருக்கட்டும்; தெருவில் வேண்டாமே!
ராகுலின் கள்ள பூணுால்!
ஆர்.கணேஷ், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: காங்., 137வது நிறுவன தினத்தில், அக்கட்சியின் தமிழக தலைவர் கே.எஸ்.அழகிரி பேசிய பேச்சு, சுத்த விபரம் இல்லாததாக
இருக்கிறது.'ராகுல், ஹிந்து தான்; அவர், ஒரு கோவிலுக்கு சென்றார். அங்கு அவருக்கு பூணுால் அணிவித்தனர். 'மதச்சார்பின்மை' என்று சொல்லும் ராகுல், பூணுால் அணிகிறாரே என்று பா.ஜ.,வினர் விமர்சிக்கின்றனர். மதச்சார்பின்மை என்றால், எந்த மதத்திற்கும் எதிரானவர் இல்லை என்பது தான் அர்த்தம். காங்கிரஸ், ஹிந்து மதத்திற்கு எதிரான கட்சி இல்லை' என்று கூறியிருக்கிறார் அழகிரி.
சினிமா, 'டிவி' தொடர்களில் திருமண காட்சிகள் இடம்பெறும். அதில் நடிகையின் கழுத்தில், நடிகர் தாலி கட்டுவார். படப்பிடிப்பு முடிந்ததும், அந்த தாலியை கழற்றி கொடுத்து விட்டு, அவர் வீட்டுக்கு போய் விடுவார்.
'மூன்று முடிச்சு போட்டு தாலி கட்டி விட்டேன்; நீ தான் இனி என் பொஞ்சாதி' என்று அக்காட்சியில் நடித்த நடிகர் சொன்னால், அந்த நடிகை மட்டுமல்ல... ஒட்டுமொத்த படக்குழுவும், அடி... பின்னி எடுத்து விடுவர்.
ஸ்ரீபெரும்புதுாரில் ராமானுஜர், தாழ்த்தப்பட்டோருக்கும்; பாரதியார் புதுச்சேரியில் கனகலிங்கத்துக்கும் அதற்குரிய சம்பிரதாயத்துடன் மந்திரத்தை உபதேசித்த பின்னரே, பூணுால் அணிவித்தனர்.இது நம்ம ஆளு படத்தில், பாக்யராஜ் பிழைப்புக்காக பூணுால் மாட்டுவதை போல அவர்கள் அணிவிக்கவில்லை.ஆவணி அவிட்டம் அன்று உபநயனம் செய்விக்காத சிறு பிள்ளைகளுக்கு, 'கள்ள பூணுால்' என்ற ஒன்றை, சடங்கு, சம்பிரதாயம், மந்திரம் எதுவுமின்றி அணிவிப்பர். பிள்ளைகளும் அதை இரண்டு அல்லது மூன்று நாட்கள் ஆவலாக அணிந்து மகிழ்ந்து பார்த்து, கழற்றிப் போட்டு
விடுவர்.ராகுல் அணிந்தது, அதுபோன்ற கள்ள பூணுால் தான்! அதை அணிந்து, இரண்டொரு நாட்கள் நடமாடி விட்டால் ஹிந்து ஆகி விட மாட்டார், ராகுல்.அது சரி... ராகுல் நாளை ஒரு சர்ச்சுக்கு போகிறார்; அங்குள்ள பாதிரியார், ராகுலுக்கு ஒரு சிலுவை மாலை மாட்டினால், அவர் கிறிஸ்துவராகி விடுவாரா... இல்லை குல்லா போட்டுக் கொண்டால், முஸ்லிமாகி விடுவாரா?
கள்ள பூணுால் அணிந்து, நெற்றியில் சந்தனம் பூசினால் மட்டும் ஒருவர் ஹிந்து ஆகி விடமாட்டார், மிஸ்டர் அழகிரி. அதற்கு எல்லாம் தனி வழிமுறை
இருக்கிறது!
புகார் பெட்டி பிரச்னையை தீர்க்காது!
-வி.எஸ்.ராமு, செம்பட்டி, திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: மாநிலம் முழுதும் உள்ள, 37 ஆயிரத்து, 391 அரசு துவக்க நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், 'மாணவர் மனசு' என்ற பெயரில் புகார் பெட்டி வைக்கவும், விழிப்புணர்வு, 'பிளக்ஸ் போர்டு' வைக்கவும், அரசு உத்தரவிட்டுள்ளது.
'மாணவர் பாதுகாப்பு ஆலோசனை குழு' என்ற குழுவும் அமைத்து, மாதம் ஒருமுறை கூட்டம் நடத்த வேண்டும் என்றும், அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.மாணவியருக்கு பள்ளியில் ஏற்படும் பாலியல் தொல்லைக்கு, இந்த புகார் பெட்டி மற்றும் குழு
தீர்வாக அமையாது!ஆசிரியர் பயிற்சியில், குழந்தை உளவியல் பாடத்தை படித்து, தேர்ச்சி பெற்று தான் பணிக்கு வந்துள்ளனர்; ஆனால் அதை, பயிற்சி முடிந்ததும் மறந்து
விடுகின்றனர்.பாடம் கற்பிப்பதோடு மட்டுமல்லாது, மாணவியரின் உளவியல் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டியது, ஆசிரியரின் கடமை!மாணவரின் உளவியல் பிரச்னையை புரிந்து கொள்ளாமல், பாடத்தை நடத்தி முடித்து,வகுப்பறையில் இருந்து வெளியேறுவதையே, பெரும்பாலான ஆசிரியர்கள் செய்து வருகின்றனர்.பெற்றோரை அழைத்து, மாதம் ஒருமுறையாவது
கூட்டம் நடத்த வேண்டும். மாணவ _ மாணவியர், சமூக வலைத்தளத்தில் இருந்து தங்களை விடுவித்து கொள்ள உத்தரவிட வேண்டும்.நீண்ட நேர மொபைல் போன் பயன்பாடு, மாணவரை தவறான பாதைக்கு இழுத்துச் செல்கிறது.மாணவ - மாணவியருக்கு பாலியல் கல்வி, விழிப்புணர்வு, உதவி எண்கள், சமூக வலைதளங்களின் போக்கு,
மருத்துவம், தன்னம்பிக்கை ஆலோசனை மற்றும் 'சைபர் கிரைம்' குற்றங்கள் குறித்து வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும்.பள்ளியில் தனக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை குறித்து, எத்தனை மாணவியர் புகார் எழுதி பெட்டியில் போடுவர் என்பது தெரியாது. இதை பொதுவெளியில் பகிர, பெரும்பாலான மாணவியர் விரும்புவதில்லை.
புகார் பெட்டி, ஒருபோதும் மாணவியரின் பிரச்னையை தீர்த்து விடாது; அதையும் தாண்டி, அரசும், ஆசிரியர்களும் இணைந்து நிறைய மெனக்கெட வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE