தமிழக காங்., தலைவர் கே.எஸ்.அழகிரி பேச்சு: இன்று இருக்கும் பாரதிய ஜனதா, அதன் முன்னோடி அமைப்புகளான ஜன சங்கம், ஆர்.எஸ்.எஸ்., ஹிந்து மகாசபா போன்றவற்றில் யாருமே ஒரு நாள் கூட, ஏன் ஒரு மணி நேரம் கூட, இந்திய விடுதலைக்காக போராடி, இந்திய சிறைகளில் இருந்தவர்கள் கிடையாது.காங்., செயல் தலைவராக இருக்கும் சோனியா, தலைவர் பதவி வேண்டாம் என ஒதுங்கியுள்ள ராகுல், அவரின் தந்தை மறைந்த ராஜிவ் மற்றும் இப்போதைய குடும்பத்தினர் எந்த போராட்டத்தில் ஈடுபட்டு, எந்த சிறையில் இருந்தனர்?
தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் முஸ்தபா அறிக்கை: இனி வரும் நாட்கள், பண்டிகை நாட்களாக இருப்பதால், மக்கள் அதிக அளவு பொது இடங்களில் கூட வாய்ப்புள்ளது. இந்த நேரத்தில், தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த, எந்த நடவடிக்கையையும் தமிழக அரசு எடுக்காமல் இருப்பது, மிகுந்த வேதனை அளிக்கிறது.தகுந்த முன்னெச்சரிக்கையுடன், கொரோனா தொற்றுடன் வாழ பழகிக் கொள்ள வேண்டும் என்பதை, தமிழக அரசு மறைமுகமாக வலியுறுத்துகிறதோ?
மார்க்சிஸ்ட் மாநில செயலர் கே.பாலகிருஷ்ணன் பேட்டி: தமிழகத்தில், தி.மு.க., தலைமையில் மதசார்பற்ற கட்சிகள் அனைத்தும் இணைந்துள்ளன. அதுபோல, இந்தியாவில் எல்லா மதச்சார்பற்ற கட்சிகளும் இணைந்து நாட்டை பாதுகாக்க வேண்டும்.முதலில், ஏகப்பட்ட பிரிவுகளாக உடைந்துள்ள, கம்யூ., கட்சிகள் ஒன்றிணைய வாய்ப்பு இருக்கிறதா என பாருங்களேன்.
தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் பேச்சு: பள்ளி மாணவர்களுக்கு, முதன் முதலாக இலவச சைக்கிள் கொடுத்ததே வேலுார் நாராயணி பீட சக்தி, 'அம்மா' தான். அதற்கு பின் தான், அரசு சார்பில் இலவச சைக்கிளை, 'அந்தம்மா' ஜெயலலிதா கொடுத்தார்.இப்போ எதுக்கு இந்த 'ஜாலக்கு' பேச்சு? ஹிந்துக்களுக்கு தி.மு.க., எதிரி இல்லை என்பதாகச் சொல்லிக் கொள்வதற்கா?
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா பேட்டி: வியாபாரிகளுக்கான ௧ லட்சம் ரூபாய் கொரோனா இழப்பீட்டு தொகையை, ௫ லட்சம் ரூபாயாக உயர்த்த வேண்டும். மீண்டும் ஊரடங்கை எதிர்கொள்ள மக்களும், வணிகர்களும் தயாராக இல்லை.கொரோனா கெடுபிடிகளையும், நிபந்தனைகளையும் அனைத்து வியாபாரிகளும் மனதார பின்பற்றி, பிறருக்கு முன்னுதாரணமாக இருக்க வலியுறுத்துவீர்களா?
தமிழக பா.ஜ., மூத்த தலைவர் எச்.ராஜா பேட்டி: மத்தியில் காங்., -- தி.மு.க., கூட்டணி ஆட்சியில் தான், இலங்கை கடற்படையால், 650 மீனவர்கள் கொல்லப்பட்டனர்; நுாற்றுக்கணக்கான படகுகள் சேதமாயின. பா.ஜ., ஆட்சி அமைந்த பின் தான், மீனவர்கள் பாதுகாப்புடன் உள்ளனர்.சமீபத்தில் மீண்டும் நம் நாட்டு மீனவர்கள் இலங்கையால் சிறைபிடிக்கப்பட்டு, மத்திய அரசு தலையிட்டு, அவர்களை விடுவித்ததே... அந்த சம்பவம் அடிக்கடி நடக்காமல் இருக்கும் என்பதற்கு உத்தரவாதம் தருவீங்களா?
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE